நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சுயசார்பு பாரதம் 3.0... பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்குமா..? - அரசின் அறிவிப்புகள் குறித்த பார்வை

சுயசார்பு பாரதம்
பிரீமியம் ஸ்டோரி
News
சுயசார்பு பாரதம்

கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க ரூ.2,65,080 கோடி மதிப்பில் பாரத சுயசார்புத் திட்டம் 3.0 அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தாக்குதல், சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த நிலையில், ரூ.2,65,080 கோடி மதிப்பில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாரத சுயசார்புத் திட்டம் 3.0 எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரும் என்கிற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

சுயசார்பு பாரதம் வேலைவாய்ப்புத் திட்டம்...

கொரோனா காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுயசார்பு பாரதம் 3.0 திட்டத்தின் அடிப்படையில் ரூ.15,000-க்கும் குறைவான மாதாந்தர ஊதியத்துடன் 1.10.2020-க்குப் பிறகு, புதிதாகப் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கான இ.பி.எஃப் சந்தா தொகையை மத்திய அரசே செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,000 பணியாளர்களுக்கு மிகாமல் உள்ள நிறுவனங்களில் ஊழியர் பங்களிப்பு (12%) மற்றும் நிறுவனப் பங்களிப்பு (12%) ஆக மொத்தம், ஊதியத்தின் 24% தொகை மத்திய அரசால் மானியமாக வழங்கப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் ஊழியரின் பங்களிப்பு (12%) மட்டும் மத்திய அரசினால் மானியமாக வழங்கப்படும். 30.06.2021 வரை நடைமுறையில் உள்ள இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.8,300 கோடி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் மிகப் பெரிய பாதிப்பான வேலைவாய்ப் பின்மையைக் குறைக்க இந்தத் திட்டம் வெகுவாக உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

சுயசார்பு பாரதம் 3.0... பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்குமா..? - அரசின் அறிவிப்புகள் குறித்த பார்வை

உற்பத்தித் துறை ஊக்குவிப்பு..!

கொரோனா பெருந்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்த பொது முடக்கம் ஆகியவற்றால் இந்தியத் தொழில்துறை வெகுவாகப் பாதிக்கப் பட்டது. இந்தப் பாதிப்பிலிருந்து தொழில் துறையை மீட்க 10 முக்கிய தொழில்துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.1,45,980 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கைப்பேசி, மருந்து மூலப்பொருள்கள் மற்றும் மருத்துவ உப கரணங்கள் ஆகிய மூன்று உற்பத்தித் துறைகள் மத்திய அரசால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டு ரூ.51,355 கோடி மதிப்பில் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக, பேட்டரி, மின்னணு சாதனங்கள், வாகனம், மருந்து, தொலைபேசி, ஜவுளி, உணவுப் பொருள்கள், சூரிய மின்சாரம், சிறப்பு வகை எஃக்்கு ஆகிய 10 துறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகப்படியான உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தின் வாயிலாக, புதிய உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடுக்கு வழிவகுப்பது என்பதுடன் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர் பார்க்கலாம்.

அவசரக் கால கடன் உதவித் திட்டம் 2.0...

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொரோனா பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமத்தைக் குறைப்பதற்காக ரிசர்வ் வங்கிக் கடன் விடுமுறையை அறிவித்தது. ஆனால், தமது தொழிலை மீண்டும் தொடர அந்த நிறுவனங்களுக்குப் புதிய கடன் தேவைப்பட்டது. ஏற்கெனவே நொடிந்து போயுள்ள நிறுவனங்களுக்கு, மேலும் கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டின. இந்தத் தருணத்தில் ஆபத்பாந்தவனாக முன்வந்த மத்திய அரசு, அவசரக் கால கடன் உதவித் திட்டத்தை அறிவித்தது. அதாவது, 29.02.2020 தேதியில் ரூ.50 கோடி வரை கடன் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு 20% வரை கூடுதல் கடன் வழங்கப்படும் எனச் சொன்னது. இந்தக் கடன்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பதால், நிறுவனங்கள் புதிய பிணை வழங்கத் தேவையில்லை. இந்தத் திட்டத்தின் கீழ், 61 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2.05 லட்சம் கோடி மதிப்பில் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டி ருப்பதாகவும் அதில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி விநியோகிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுயசார்பு பாரதம் 3.0... பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்குமா..? - அரசின் அறிவிப்புகள் குறித்த பார்வை

தற்போது இந்தத் திட்டம் 31.03.2021 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதுடன், மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. காமத் கமிட்டியால் நசிவடைந்த துறைகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ள 26 தொழில் துறைகள் மற்றும் கூடுதலாக மருத்துவத் துறைக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப் பட்டிருகிறது. உச்சபட்சக் கடன் வரம்பு ரூ.50 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக உயர்த்தப் பட்டதுடன் விற்பனை உச்சவரம்பும் நீக்கப் பட்டுவிட்டது. மேலும், கூடுதல் கடனைத் திருப்பிச் செலுத்த 2 முதல் 5 ஆண்டுகள் வரை கால அவகாசமும் ஓராண்டுக்கு கடன் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அவசரக் கால கடன் உதவித் திட்டம், தொழில் நிறுவனங்கள் கடனில் மூழ்கிப் போகாமல் இருக்க உதவுவதுடன் அதனால் ஏற்படக்கூடிய வேலை இழப்பு களையும் தவிர்க்க உதவும்.

தேசிய அடிப்படைக் கட்டுமான முதலீட்டு நிதியில் மத்திய அரசு ரூ. 6,000 கோடி முதலீடு செய்யும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாடம், பசுமை சக்தி, தொழில்துறை கட்டுமானம் போன்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ரூ.10,200 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரோலர் கோஸ்டர் பயணம்...

இதற்கு முன்பும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து ஏராளமான மீட்சித் திட்டங்கள் இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார மீட்சிப் பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணமாகவே அமைந்துவிட்டது. கடன் தவணை ஒத்திவைப்பு, குறைந்த வட்டி மற்றும் அதிக பணப்புழக்கம் என்ற வகையிலான ரிசர்வ் வங்கியின் சிறப்பான முன்னெடுப்புக்கள் தொழில்துறையை மீட் டெடுக்க பெரிதும் உதவினாலும், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவாக உயர்ந்துள்ள நுகர்வோர் பணவீக்கம் 7.61%, ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சிகளை மட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுயசார்பு பாரதம் 3.0... பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்குமா..? - அரசின் அறிவிப்புகள் குறித்த பார்வை

ஒரு பக்கம், வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பான விற்பனையை அறிவித்துள்ள நிலையில், வாகன விநியோகஸ்தர்கள் சம்மேளனம், புதிய வாகனங்களின் பதிவு மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் சிறப்பான வளர்ச்சியைக் கண்ட இந்தியாவின் ஏற்றுமதி, அக்டோபர் மாதத்தில் மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு (நவம்பர்) மாதத்தின் முதல் பாதியில் மின்சார நுகர்வு அதிகரித்திருக்கும் அதே வேளையில், டீசல் பயன்பாடு குறைந்துள்ளது.

ஆக, நம் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்புக்கள் வரவேற்கத்தக்கவையே. இவற்றின் மூலம் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்போம்!