கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களின் உதவிக்காக அவர்களுடன் இருக்கும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் இனிமேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை கொரோனா புறநோயாளிகள் பிரிவில் நேற்று முன்தினம் திடீரென்று தகவல் அறிவிக்கப்பட்டது.

தகவல் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகளுடன் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் மருத்துவமனையின் வாசலில் ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரித்தது. நோய்தொற்றைப் பற்றி மக்கள் யாரும் கவலைப்படாமல் கூட்டம் கூட்டமாக மருத்துவமனையின் வாசலில் குவியத்தொடங்கினர். காவலர்கள் வந்தும் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பிறகும் மக்கள் கூட்டம் கலையாததால் மருத்துவமனையின் சார்பில் கொரோனா நோயாளிகளுடன் இருந்தவர்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா நோயாளிக்கு உதவ அவர்களின் உறவினர்கள் நோயாளிகளுடன் இருக்க சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மக்களிடம் குழப்பம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் மக்கள் ஒவ்வொருவரும் அவரவரின் பாதுகாப்பு கருதிச் செயல்படுவது அவசியம்.