ஆஸ்திரேலியா நாட்டில் அடுத்தடுத்து மூன்று இந்து கோயில்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து கனடா நாட்டிலும் உள்ள இந்து கோயில் ஒன்று தாக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியான இந்தத் தாக்குதல்கள் காலிஸ்தான் ஆதரவு சித்தாந்தம் கொண்ட சீக்கியர்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. ஏன், என்ன நடந்தது?

அடுத்தடுத்து தாக்கப்பட்ட ஆஸ்திரேலிய கோயில்கள்:
ஜனவரி 12-ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மில்க் பார்க் என்ற இடத்தில் `சுவாமி நாராயணன்' என்ற இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடித்து உடைத்தனர். மேலும் அந்தக் கோயில் சுவர்களின்மீது, ``காலிஸ்தான் வாழ்க! இந்துஸ்தான் வீழ்க!", ``மோடி ஒரு ஹிட்லர்; பிந்தரன்வாலே ஒரு தியாகி!" என இந்தியா மற்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராகவும், காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் வாசகங்களை எழுதிவைத்தனர். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தின் கொதிப்பு அடங்குவதற்குள் ஜனவரி 16-ம் தேதி, கேரம் டவுன்ஸ் நகரிலுள்ள சிவ விஷ்ணு கோயில்மீது அடுத்த தாக்குதலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தினர். அதேபோல இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதிவைத்துச் சென்றனர்.
மேலும் மூன்றாவதாக, ஜனவரி 23-ம் தேதி, ஏற்கெனவே தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த மெல்போர்ன் நகரின் அருகே ஆல்பர்ட் பூங்கா எனும் மற்றொரு பகுதியிலுள்ள இந்து கோயிலும் தாக்குதலுக்குள்ளானது. இஸ்கான் கோயில்மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதோடு, வழக்கம்போல இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினர்.

கடந்த ஜனவரி மாதத்தில், வெறும் 15 நாள்களுக்குள் அடுத்தடுத்து மூன்று இந்து கோயில்கள் தாக்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலிய வாழ் இந்துக்கள் மட்டுமல்லாது, இந்திய நாட்டு இந்துக்கள் மத்தியிலும் கடுமையான அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கும் இந்திய அரசாங்கம், ``தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியாவிலுள்ள இந்து கோயில்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்!" எனவும் ஆஸ்திரேய அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோஹ்ரா, தாக்குதலுக்குள்ளான கோயிலை பார்வையிட்டதுடன், அந்தப் பகுதியில் வாழும் இந்து மக்களைச் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார். மேலும், ``ஒவ்வொரு சமூகத்தினரும், மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களைப் பரஸ்பரம் மதித்து நடக்கின்றனர். அவரவர்களின் நம்பிக்கைகள், மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றனர். ஆனால், அதற்குமாறாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது கடுமையான கண்டனத்துக்குரியது!" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, ஆஸ்திரேலியாவின் லிபரல் பார்ட்டி எம்.பி-யான பிராட் பட்டினும் (Brad Battin) கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். ``இந்தச் சம்பவம் அருவருப்பானது. ஒருபோதும் நம் எதிர்காலத்தை வெறுப்பின் அடிப்படையில் கட்டி எழுப்ப முடியாது. இது போன்ற சம்பவங்களுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்" என்றிருக்கிறார்.
பேரணி நடத்திய இந்துக்கள் மீதும் தாக்குதல்:
ஒருபுறம் ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்து கோயில்கள் தாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசியக்கொடியுடன் பேரணி நடத்திய இந்துக்கள் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து, ஆஸ்திரேலிய இந்து உரிமைகள் அமைப்பின் இயக்குநர் சாரா எல் கேட்ஸ், ``காலிஸ்தானிகள், மூவர்ணக் கொடியுடன் இருக்கும் இந்திய இளைஞர்களைத் தாக்கும் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார்கள். இனியும் ஆஸ்திரேலிய காவல்துறை கண்மூடி இருக்காது என நம்புகிறேன்!" என விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய காவல்துறையினர், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டுபேரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது.
கனடாவிலும் இந்து கோயில் அவமதிப்பு:
இந்த நிலையில், கனடாவின் பிராம்ப்டன் நகரிலுள்ள கௌரி சங்கர் கோயிலிலும், காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இதற்கு அந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகம் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து, பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் ப்ரௌன், ``எங்கள் நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் விதமான எந்தத் தாக்குதலுக்கும் இடமளிக்க மாட்டோம். அனைவரும் அவர்களுடைய வழிபாட்டுத் தலத்தில் பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வழிவகை செய்வோம். மேலும், இந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க காவல்துறையினரிடம் கூறியிருக்கிறேன்!" எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, கனடா காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

யார் இந்த காலிஸ்தானிகள்?
சீக்கியர்களுக்கென்று தனிநாடு கேட்டுப் போராடி வருபவர்கள்தான் காலிஸ்தானிகள். சீக்கியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப்-சிந்து மாகாணத்தை இணைத்து, `காலிஸ்தான்' எனும் பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கை. இந்தியாவில் இந்த அமைப்பு தடைசெய்யப்பட்டுவிட்டதால், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தபடி இவர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.