ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் 25... அவர்கள் 25! - இந்த ஆறு விஷயங்கள் சரியாக இருந்தால்... பிசினஸில் வெற்றி உறுதி!

கடலைமிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
News
கடலைமிட்டாய்

ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - 4

கடலைமிட்டாய் மற்றும் அதுசார்ந்த உணவுப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறேன். தயாரிப்பு தரமாக இருந்தாலும், போட்டி மற்றும் வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியாமல் இருப்பதுதான் நான் எதிர்கொள்ளும் ஒரே சவால். இதைச் சமாளிப்பதில் எனக்கு உதவி தேவை...

- லக்ஷ்மி ராமஜெயம், தூத்துக்குடி

வாசகியின் கேள்விக்குப் பதிலளிக்கிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

“இந்தச் சிக்கல் உங்களுக்கு மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான சிறு தொழில் செய்யும் தொழில்முனைவோர்களுக்கும் பொருந்தும். இதைச் சரிசெய்து தொழிலில் வெற்றி பெறுவதற் கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

1. விற்பனை விலை: தொழில்முனைவோர்கள் பலரும், ஒரு பொருளை உற்பத்தி செய்து, தங்களுக் கான லாபத்தை நிர்ணயித்து, கடைக்குச் சென்றால், போட்டியாளர்கள் நாம் நிர்ணயிக்கும் விலையை விடக் குறைவான விலைக்கு அவர்களின் பொருளை விற்பனை செய்கின்றனர். இதனால், நம்மால் எளிதில் அவர்களோடு போட்டி போட முடிவதில்லை.

நான் ஒரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, வத்தல் வடகத்தை விற்பனை செய்ய ஒரு பெண் அங்கு வந்திருந்தார். அவர் கூறிய விலை அதிகமாக இருந்ததால், அதற்கான காரணத்தைக் கேட்டேன். ஒரு கிலோ ஜவ்வரிசியை 40 ரூபாய்க்கு வாங்குவதாக அந்தப் பெண் கூறினார். மொத்த வியாபாரி ஒருவரிடம் விசாரிக்கையில், ஒரு கிலோ ஜவ்வரிசியை 28 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகச் சொன்னவர், சேலத்திலுள்ள ‘சேகோசர்வ்’ நிறுவனத்தில் இதைவிடவும் விலை குறைவுதான் என் றார்.

அவள் 25... அவர்கள் 25! - இந்த ஆறு விஷயங்கள் சரியாக இருந்தால்... பிசினஸில் வெற்றி உறுதி!

‘சேகோசர்வ்’ நிறுவனத் தில் கேட்டபோது, ‘ஏலத்தில் வாங்கும்போது ஒரு கிலோ ஜவ்வரிசிக்கான விலை 22 ரூபாய்தான்; வத்தல் வடகம் தயாரிக்க, உடைந்த ஜவ்வரிசியைக்கூடப் பயன்படுத்தலாம். அவை கிலோ 18 ரூபாய்க்குக் கிடைக்கும்’ என்றனர்.

இதிலிருந்து பார்க்கையில், குறைந்த விலையில் மூலப்பொருள்களை வாங்கி, சந்தை நிலவரத்தைவிடவும் நம் தயாரிப்புக்குச் சற்று குறைவான விலையை நிர்ணயித்தாலும், நமக்கு நிலையான லாபம் கிடைக்கும். அந்த வகையில், நிலக்கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றைப் பருவகாலத்தில் குறைந்த விலையிலும் தேவைக்கேற்பவும் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டால், உற்பத்தி செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கலாம்.

2. உற்பத்தி: ஒவ்வொரு தொழிலிலும் எந்த அளவு உற்பத்தி செய்தால் லாபம் கிடைக்கும் என்பதைச் சமநிலை உற்பத்தித்திறன் (Break-even Point) மூலம் அறிந்து கொள்ளலாம். ஓர் உற்பத்தியாளர், குறைந்த அளவில் உற்பத்தியை மேற்கொண்டால், மின்சாரம் மற்றும் பணியாளர் செலவினம் அதிக மாகலாம். அதுவே உற்பத்தியை அதிகப் படுத்தும்போது, இந்தச் செலவுகள் குறைந்து, லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிதாகத் தொழில் தொடங்கும் பலரும் நவீன இயந்திரங்களை உபயோகிப்பதில்லை. கடலை மிட்டாய் தயாரிப்புக்கு நவீன இயந்திரங்கள் இப்போது கிடைப்பதால், அவற்றைப் பயன்படுத்தி, சந்தை வாய்ப்பை அதிகரித்து, அதற்கேற்ப உங்களின் உற்பத்தியை அதிகரித் தால், செலவைக் குறைத்து லாபத்தைக் கூட்டலாம்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

3. தரம் மற்றும் பிராண்டிங்: நம் உற்பத்தி பொருளுக்குத் தரம் மிகவும் முக்கியம். அந்த வகையில் தயாரித்த பொருள்களை, நவீன இயந்திரங்களைக் கொண்டு புதிய தொழில் நுட்பத்துடன் பேக்கிங் செய்தால், நம் பொருள் சந்தையில் நிலைத்து நிற்கும். வாடிக்கை யாளர்களை ஈர்க்கும் வகையிலான பிராண் டிங் பெயருடன் பேக்கிங் செய்வதும் மிக மிக அவசியம்.

4. விற்பனை மற்றும் கணக்கு: ஒவ்வொரு தொழிலும் மூலப்பொருள் (Raw Material), உற்பத்தி (Production), விற்பனை (Sales), கணக்கு (Accounts) என்று நான்கு பிரிவுகளின்கீழ் வகைப்படுத்தப்படும். பெரிய தொழிற்சாலைக ளில் இவை தனித்தனிப் பிரிவுகளாக இயங்கும். இதை மனதில் வைத்து, இந்த நான்கு செயல் பாடுகளும் நம் தொழிலில் சரியாக நடைபெறும் வகையில் தொழிலை நடத்தவேண்டும். விற்பனை பிரதிநிதிகளை நியமித்து, உள்ளூர் மட்டுமன்றி, பிற ஊர்களுக்கும் நம் தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

5. விளம்பரம்: நம் பொருளை விற்பனை செய்யவும், அதுகுறித்த விவரங்கள் வாடிக்கை யாளர்களுக்குச் சென்றடையவும் விளம்பரம் அவசியமானது. விளம்பரங்களை நோட்டீஸ் ஆக அச்சடித்துக் கொடுக்கலாம். விலைப் பட்டியலுடன் கூடிய துண்டுப்பிரசுரத்தை (Pamphlet) தயார் செய்து, வியாபாரிகளுக்குக் கொடுக்கலாம். உங்கள் தயாரிப்பு குறித்து சோஷியல் மீடியாவில் பதிவிடலாம். அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் இணையதளப் பக்கங்களிலும் விற்பனை செய்யலாம்.

6. மூலதனம்: ஒரு தொழிலை நடத்த நிலையான மூலதனம் (Fixed Capital) மற்றும் நடைமுறை மூலதனம் (Working Capital) இரண்டும் முக்கியம். மூலப்பொருள் வாங்குவது உட்பட தொழிலை நடத்து வதற்கான அவசிய செலவினங்களுக்காகவும், தொழிலை விரிவுபடுத்தவும் நடைமுறை மூலதனத்துக்காக வங்கியில் கடன் பெறலாம். உங்களைப் போன்ற உணவு உற்பத்தி யாளர்களை ஊக்கப்படுத்த, மானியத்துடன் கூடிய ‘பி.எம்.எஃப்.எம்.இ (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme)’ கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. தேவைப்பட்டால் அந்தத் திட்டத்தில் கடன் பெற்று, உங்கள் தொழிலைச் சிறப்பாக நடத்தலாம்.

மூலப்பொருள் தேர்வு முதல் விற்பனை வரையிலான எல்லா செயல்பாடுகளையும் சரியான முறையில் செய்தால், எந்தத் தொழிலாக இருந்தாலும் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்” என்கிறார் உறுதியுடன்.

‘அவள் 25... அவர்கள் 25!’ திட்டம் மற்றும் சுயதொழில் சார்ந்த உங்களின் சந்தேகங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். தேர்ந் தெடுக்கப்படும் அவசியமான கேள்விகளுக்கு விளக்கம் தரப்படும்.

அவள் 25... அவர்கள் 25! - இந்த ஆறு விஷயங்கள் சரியாக இருந்தால்... பிசினஸில் வெற்றி உறுதி!

‘பி.எம்.எஃப்.எம்.இ’ திட்டத்தின் பயன் என்ன?

“உணவு உற்பத்தித்துறையில் புதிதாகத் தொழில் தொடங்க அல்லது இந்தத் துறையிலுள்ள தொழில்முனைவோர் தொழில் விரிவாக்கம் செய்ய (18 – 55 வயதுக்கு உட்பட்டோர்), அதிகபட்சமாக 35 லட்சம் ரூபாய் வரை இந்தத் திட்டத்தில் வங்கிக் கடன் பெறலாம். திட்டச் செலவில் 35 சதவிகிதம் மானியமாகக் கிடைக்கும் (மானிய உச்சவரம்பு 10 லட்சம் ரூபாய்) திட்டச் செலவில் குறைந்தபட்சம் 10 சதவிகித தொகையைப் பயனாளர்கள் தங்கள் பங்காகப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கடனுதவி திட்டம் மற்றும் பிற கடனுதவி திட்டங்கள் குறித்து ‘அவள் 25... அவர்கள் 25!’ திட்டத்தில் ஏற்கெனவே வழிகாட்டியிருக்கிறோம்” என்கிறார் ராமசாமி தேசாய்.

அவள் 25... அவர்கள் 25! - இந்த ஆறு விஷயங்கள் சரியாக இருந்தால்... பிசினஸில் வெற்றி உறுதி!

நீங்களும் தொழிலதிபராக ஆசையா?

சுயதொழில் செய்து உழைப்பால் உயர ஆவலுடன் இருப்பவரா நீங்கள்? உங்களின் கனவுக்கு சிறகு தரும் ‘அவள் 25... அவர்கள் 25’ திட்டத்துக்கான விண்ணப்பப் படிவம் அடுத்த இதழில் வெளியாகும்.

குறிப்பு: உங்களின் கேள்விகளை ‘avalvikatan@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி மற்றும் Aval Vikatan ஃபேஸ்புக் பக்கத்தின் இன்பாக்ஸிலும் அனுப்பலாம். இந்தக் கட்டுரையை ஆன்லைனில் படிப்பவர்கள் கமென்ட் செக்‌ஷனிலும் குறிப்பிடலாம். தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

‘அவள் 25... அவர்கள் 25!’

அவள் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை - 600 002.