ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் - 30 - திரிந்த பாலைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

- சாஹா

திரிந்துபோன பாலில் ஸ்வீட் செய்து சாப்பிடுவது உடல்நலத்தை பாதிக்காதா? திரிந்த பாலை வேறு எப்படி, எதற்குப் பயன்படுத்தலாம்?

அவள் பதில்கள் - 30 - திரிந்த பாலைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?

- மல்லிகா அன்பழகன், சென்னை-78

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

திரிந்த பால் என்பது இரண்டு வகையில் கிடைப்பது. காய்ச்சும்போது தானாகத் திரிந்துபோவது ஒருவகை. நல்ல பாலில் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து நாமாகத் திரிய வைப்பது மற்றொருவகை. இவையெல்லாம் வேதியல் செயல்பாடே.

பால் திரிந்ததும் அதிலுள்ள தண்ணீர் தனியேவும், திரிந்த பாலின் திடப்பகுதியான கோவா தனியேவும் பிரிந்து வரும். அந்தத் தண்ணீரை ‘வே வாட்டர்’ என்று சொல் வோம். அதை உலரவைத்துதான் ‘வே புரோட்டீன்’ பவுடர் தயாரிக்கிறார்கள். எனவே அது புரதச்சத்து நிறைந்தது. முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளிலிருந்துதான் சிறந்த புரதம் கிடைக்கும் என்றொரு நம்பிக்கை உண்டு. வே புரதத்தில் அசைவ உணவுகளுக்கு இணையான நல்ல புரதம் கிடைக்கும். இந்த வே வாட்டர் மற்றும் கோவா இரண்டையும் தாராளமாகப் பயன் படுத்தலாம். இதில் எந்தவித பிரச்னை யும் இல்லை. அதேசமயம், ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு, மூன்று நாள்கள் கழித்துக் காய்ச்சும்போதும் பால் திரியக் கூடும். அந்தப் பாலில் ஒருவித வாடை வந்தால், அதைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

பொதுவாக, இந்த வே வாட்டரின் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. அதற்காக அந்தத் தண்ணீரை வீணாக் காமல், அரிசி தோசை மாவில், கோதுமை தோசை மாவில் சேர்த்துப் பயன்படுத்தலாம். வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதனுடன் ஒரிகானோ பவுடர் (வீட்டுக்கு பீட்சா ஆர்டர் செய்து சாப்பிடும்போது, அதனுடன் பாக்கெட்டில் இந்தப் பவுடர் வழங்கப்படும். அதைச் சேமித்துவைத்தும் பயன்படுத்தலாம்), சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து, வே வாட்டரையும் சேர்த்து குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி சமைத்துக் கொடுக்கலாம். திரிந்த திடப்பொருளான கோவாவை, பனீர் தயாரிக்கப் பயன்படுத்தலாம். ஆனால், கடைகளில் வாங்கும் பனீர் மாதிரி இது கெட்டியாக இல்லாமல், உதிர்ந்தேதான் இருக்கும். ஆனாலும், பனீர் அவசரமாகத் தேவைப்படும் சமையலுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்  -  மேனகா ராம்குமார்
ஸ்ரீமதி வெங்கட்ராமன் - மேனகா ராம்குமார்

என் வயது 27. இயல்பிலேயே எனக்கு கூந்தல் மெலிந்து மண்டைப்பகுதி வெளியே தெரியும். இதனால் என் தன்னம்பிக்கையே போய்விட்டது. இப்போது வெளிநாட்டில் வேலை கிடைத்திருக்கிறது. மூன்று மாதத்தில் வெளிநாடு கிளம்புவதற்குள் என் கூந்தல் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா? விக் வைப்பதைத் தவிர வேறு தீர்வுகள் இருக்கின்றனவா?

- மனிஷா, நெய்வேலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, `ஹேர் எக்ஸ்டென்ஷன்’ எக்ஸ்பர்ட் மேனகா ராம்குமார்

‘நான்சர்ஜிகல் ஹேர் ரீஸ்டோரேஷன்’ (Non-surgical Hair Restoration) என்றொரு நவீன டெக்னிக் இருக்கிறது. ‘அலோபேஷியா அரியேட்டா’ எனப்படும் முடி உதிர்வு பிரச்னைக்குள்ளானவர்கள், பரம்பரையாக முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்னை உள்ளவர்களுக்கெல்லாம் இந்த நவீன டெக்னிக் பெரிய அளவில் கைகொடுக்கும். தீவிரமான முடி உதிர்வு ஏற்பட்டு, மண்டைப்பகுதி வெளியே தெரிபவர்களுக்கு விக் வைத்துக்கொள்வது அல்லது அறுவை சிகிச்சை முறையில் செய்யப்படுகிற `ஹேர் இம்ப்ளான்ட்டேஷன்' என இரண்டு ஆப்ஷன்கள் தாம் இருந்தன. தலைமுடி முழுவதும் கொட்டிப்போனவர்கள் விக்கைத் தேர்ந்தெடுக்கலாம். ஆங்காங்கே மண்டைப் பகுதி தெரிகிறது என்பவர்களுக்கு அது தேவையில்லை. இம்ப்ளான்ட்டேஷன் சிகிச்சை செய்துகொள்ள எல்லோரும் முன்வருவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் `ஹேர் பேட்ச்சஸ்' (Hair Patches) கைகொடுக்கின்றன. செயற்கையான ஃபைபர் கூந்தலில் தயாரிக்கப்படுவது மற்றும் இயற்கை யான மனித கூந்தலில் தயாரிக்கப்படுவது என இதில் இரண்டு வகை உண்டு. எது விருப்பமோ, அதைத் தேர்வுசெய்யலாம். மண்டையின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டுமோ, அந்தப் பகுதிக்கேற்ற பேட்ச் தயார்செய்யப்பட்டு, க்ளிப் அல்லது கெமிக்கல் இல்லாத க்ளூவின் உதவியோடு ஒட்டப்படும். அதனால் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட எந்த விதமான பக்கவிளைவும் வராது. இதில் மண்டைப் பகுதியிலுள்ள சருமத்தில் துளையிடுவது, தைப்பதுபோன்ற எதையும் செய்வதில்லை. உங்கள் கூந்தலின் தன்மை, நிறம் என 100 சதவிகிதம் பொருந்திப்போகிற மாதிரியே ஹேர் பேட்ச்சஸ் செய்யப்படும் என்பதால் அவற்றை உபயோகிக்கும்போது யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இப்படி முடி உதிர்வு பிரச்னையை மறைக்க மட்டுமன்றி, நீளமான கூந்தல் வேண்டுவோர், அடர்த்தியான கூந்தலுக்கு ஆசைப்படுவோர், அவசரமாக ஹேர் ஸ்டைலை மாற்ற நினைப்போர், மணப்பெண்கள், மண மகன்கள் என பலரும் ஹேர் பேட்ச்சஸ் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ‘கலரிங் செய்துக்கணும், ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய ஆசை... ஆனாலும் முடி டேமேஜ் ஆயிடுமோனு பயமா இருக்கு...’ என தயங்குபவர்களுக்கும் ஹேர் பேட்ச்சஸ் நல்ல சாய்ஸ். பிரபலங்கள் பலரும் இன்று இவற்றை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

‘ஹேர் பேட்ச்சா... தினமும் கழற்றிவெச்சு உபயோகிக் கணுமா... இம்சையாச்சே...’ என்பவர்களுக்கு ஒரு விஷயம். இப்போது வரும் ஹேர் பேட்ச்சஸ் அப்படி தினம் எடுத்து வைத்து மாட்டக்கூடியவை அல்ல. மூன்று மாதங்களுக் கொரு முறை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து மறுபடி ஒட்டிக் கொள்ளும்வகையில் வருகின்றன. ஆண்கள், பெண்கள் என எல்லோருக்கும் ஹேர் பேட்ச்சஸ் கிடைக்கின்றன.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.