
- சாஹா
என் 18 வயது மகளுக்கு இதுநாள் வரை நகம் கடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. கடந்த மூன்று மாதங்களாக அந்தப் பழக்கம் அவளுக்கு தீவிரமாகி வருகிறது. இதற்கு என்ன காரணம்? எப்படி நிறுத்துவது? - மாலினி சந்திரன், சென்னை-44
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
நகம் கடிக்கும் பழக்கம் என்பது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம் என்கின்றன ஆய்வுகள். அதாவது குழந்தை பிறக்கும் முன்பே பெற்றோர் அந்தப் பழக்கத்தை நிறுத்தி யிருந்தாலும், அது பின்னாளில் பிள்ளை களுக்கும் வரலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இது ஒருபுறமிருக்க, நகம் கடிப்பது என்பது மன உளைச்சல் அல்லது ஸ்ட்ரெஸ்ஸின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். படபடப்பு, பதற்றம், உணர்வுகளைக் கையாளத் தெரியாத நிலை போன்றவற்றால்கூட ஒருவர் நகம் கடிக்கலாம். போரடிக்கும்போதும், பசியின் போதும், பாதுகாப்பில்லாமல் உணரும்போதும்கூட ஒருவர் நகம் கடிக்கலாம். பெரும்பாலானவர்கள் வேண்டுமென்றே நகம் கடிக்காமல், தன்னிச்சையாக அதைச் செய்வார்கள்.
எனவே, முதல் வேலையாக உங்கள் மகளிடம் பேசி, அவருக்கு ஏதேனும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளனவா என்று பாருங்கள். திடீர் மன அழுத்தம், ஸ்ட்ரெஸ், பயம், பதற்றம் என ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா, அதன் காரணமென்ன என்பதைப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். அப்படி ஏதேனும் இருந்தால் ஆதரவாகப் பேசுங்கள். தேவைப்பட்டால் கவுன்சலிங் அழைத்துச் செல்லுங்கள்.
இப்படி எந்தக் காரணமும் இல்லை, தன்னிச்சையாக ஆரம்பித்த பழக்கம் என்று தெரிந்தால், நகம் கடிக்கும் பழக்கத்தின் பின் விளைவுகளை எடுத்துச் சொல்லுங்கள்.
அதாவது தொடர்ந்து நகம் கடிப்பதால், அடுத்து வளரும் நகங்கள் சீரான ஷேப்பில் வளராது, கன்னா பின்னாவென வளரும். நகம் கடிப்பது என்பது நகங்களை மட்டுமன்றி, பற்களையும், தாடையையும்கூட பாதிக்கும். அதனால் உங்கள் மகளின் அழகிய புன்னகை மாறக் கூடும் என்று எடுத்துச் சொல்லுங்கள். கைகளில்தான் அதிகபட்ச கிருமிகள் இருக்கும். அதனால்தான் கொரோனா காலத்தில்கூட அடிக்கடி கைகளைக் கழுவ வலியுறுத்தப்பட்டது. ஆக, நகங்களைக் கடிப்பதால் அழுக்கும் கிருமிகளும் வாய் வழியே குடலுக்குள் சென்று தொற்றுநோய்களை உருவாக்கும். நகங்களைச் சுற்றி யுள்ள சருமமும் பாதிக்கப்படும்.
கைகளையும் நகங்களையும் அழகாக வைத்துக் கொள்ள மெனிக்யூர் செய்துகொள்ளச் சொல்லுங்கள். நகங்களை நேசிக்க, அவற்றைக் கடித்துத் துப்பாமலிருக்க நெயில் ஆர்ட் செய்து ரசிக்கச் சொல்லுங்கள்.

எங்கள் வீட்டில் தினமும் இரவில் சப்பாத்தி தான் சாப்பிடுவோம். தோசைக்கல்லில் வாட்டாமல், நேரடியாக ஸ்டவ் பர்னரின் மேல் வைத்து வாட்டி எடுத்துச் சாப்பிடுவோம். காஸ் அடுப்பில் இப்படி நேரடியாக வாட்டுவது ஆரோக்கியமானதா? - பி.புஷ்கலா, சேலம்
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, டயட்டீஷியன் கற்பகம்
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல எண்ணெய் இல்லாமல், நேரடியாக தணலில் சப்பாத்தியை வாட்டி எடுப்பது சரியானதுதான். ஸ்டவ் பர்னரின் மேல் வைத்து வாட்டி எடுப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அதுவே மண்ணெண்ணெய் அடுப்பு என்றால் இப்படிச் செய்வதைத் தவிர்க்கவும். மண்ணெண்ணெயின் வாசம் சப்பாத்தியில் ஏறும். அது ருசியை பாதிக்கும்.

காஸ் அடுப்பில் வாட்டும்போது, சப்பாத்தியை வாட்டுவதற்கென்றே பிரத்யேக வலைக்கரண்டி கிடைக் கிறது. அதை பர்னரின் மேல் வைத்து, அதன் மேல் சப்பாத்தியை வைத்து வாட்டியும் சாப்பிடலாம். எண்ணெய் இல்லாத சப்பாத்திக்காகவே இப்படிச் செய்கிறீர்கள் என்றால் முதலில் தோசைக்கல்லில் ஒரு நிமிடம் வாட்டி எடுத்து, அதன் பிறகு தணலில் வாட்டி எடுக்கலாம். இதனால் எண்ணெய் உபயோகத்தையும் தவிர்க்கலாம், சப்பாத்தியும் நன்கு உப்பி, மிருதுவாக வரும்.
உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை
`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,
avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.