ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

அவள் பதில்கள் - 23

அவள் பதில்கள் - 23
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள் - 23

கொரோனாவுக்குப் பிறகு வார்ட்ரோபில் தூங்கும் காஸ்ட்லியான உடைகள்.... எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

என்னிடம் கிராண்டான லெஹங்கா செட், காக்ரா சோளி, விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் கலெக்ஷன் இருக்கிறது. கோவிட் பரவ ஆரம்பித்த பிறகு வெளியே எங்கும் செல்வதில்லை. விசேஷங்கள் குறைந்துவிட்டன. அதனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அந்த ஆடம்பர உடைகள் வார்ட்ரோபில் தூங்குகின்றன. அவற்றை என்ன செய்யலாம்? ரீகிரியேட் செய்ய முடியுமா?

- அகல்யா, திருச்சி

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் ஃபேஷன் கன்சல்ட்டன்ட் தனலட்சுமி

அவள் பதில்கள் - 23

பெரும்பான்மையான பெண் களுக்கு தங்களுக்கென பர்சனல் போர்ட்ஃபோலியோ ஒன்று உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் களுக்குத் தங்கள் புரொஃபைல் படங்களை ஸ்பெஷலாக வைத்துக் கொள்ளும் ஆசையும் இருக்கும். இன்ஸ்டாவில் படங்கள் பகிர்வதும் இப்போது டிரெண்டாக இருக்கிறது. எனவே உங்கள் வார்ட்ரோபில் தூங்கும் ஆடம்பர உடைகளை அணிந்து ஸ்பெஷல் போட்டோ ஷூட் ஒன்று செய்து பார்க்க இது நல்ல தருணம். போட்டோ ஷூட்டுக்காக அதிகம் செலவழிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. இன்று பலரிடமும் தரமான கேமரா மொபைல் இருக்கிறது. அதுவே போதும். இது மிகச் சிறந்த நினைவாகவும் காலத்துக்கும் உங்களிடம் இருக்கும்.

வீட்டை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால், இப்படி உபயோக மில்லாமல் இருக்கும் ஆடம்பர உடைகளை இன்டீரியர் அலங் காரத்துக்காகப் பயன்படுத்தலாம். ஹோம் ஃபர்னிஷிங் என்ற விஷயத்துக்காக நீங்கள் தனியே ஷாப்பிங் செய்தால் பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்கு பதில் உங்களின் கிராண்டு லுக் ஆடைகளை ஹோம் ஃபர்னிஷிங் மெட்டீரியலாக மாற்றலாம். உதாரணத்துக்கு உங்கள் வீட்டில் காஸ்ட்லியான சோஃபா, குஷன் இருக்கின்றன என்றால் அவற்றுக் கான உறைகள் தைக்கப் பயன்படுத்த லாம்.

வரவேற்பறைகளில் திரைச் சீலைகளுக்குப் பயன்படுத்தலாம். டைனிங் டேபிள், விருந்தினர் அறை அலங்காரம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம். விசேஷ நாள்கள், வீட்டில் நடக்கும் பார்ட்டி போன்ற ஸ்பெஷல் தருணங்களுக்கு மட்டும் அவற்றை இன்டீரியர் அலங்காரத்துக்குப் பயன்படுத்தி விட்டு பத்திரப்படுத்தி வைக்கலாம்.

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் உங்கள் பட்டுப்புடவைகள், லெஹங்கா போன்றவற்றை அவர்களுக்கான உடைகளாகத் தைக்கலாம்.

அவள் பதில்கள் - 23

`ஆன்டி ஏஜிங்' சிகிச்சைகளில் ஒன்றான `போடாக்ஸ்', `ஃபில்லர்ஸ்' போன்றவை எந்தளவுக்குப் பாதுகாப்பானவை? இவற்றின் பலன் எத்தனை நாள்கள் நீடிக்கும்? இயற்கை யிலேயே இளமையைத் தக்கவைக்கும் வழிகள் என்ன?

- ஜி.மாதுரி, சென்னை-11

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்

பெண்களுக்கு 30 வயதுக்குப் பிறகு ஹார்மோன்களின் மாற்றங்களால் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கு கின்றன. அதைத் தான் ‘ஏஜிங்’ அறிகுறிகளாகச் சொல்கிறோம். நெரிசலான ஓரிடத்தில் செல்கிறோம் என்றால் நம்மையும் அறியாமல் முகத்தைச் சுளிப் போமில்லையா.... சிலர் அடிக்கடி நெற்றியைச் சுருக்கி யோசிப் பார்கள். முகத்தசைகளைக் கோணி உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இப்படியெல்லாம் செய்வதால் முகத்தில் ஏற்படக்கூடிய கோடுகளை சரிசெய்வதுதான் போடாக்ஸின் வேலை. அதாவது இள வயதிலேயே சிலருக்கு புருவங் களைச் சுருக்குவது, நெற்றியைச் சுருக்குவது போன்ற பழக்கங்கள் இருக்கலாம். வருடக்கணக்கில் அப்படிச் செய்யும்போது சருமத்தில் கோடுகள் வரலாம். 20 ப்ளஸ் வயதிலேயே போடாக்ஸ் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இத்தகைய பழக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

அவள் பதில்கள் - 23

`ஃபில்லர்ஸ்' என்பவை ஹைலுரானிக் ஆசிட் அடங்கிய ஊசி. வயதாக, ஆக நம் எலும்புகள் மெலியும். கொழுப்பு குறையும். முகத்தசைகள் மெலிந்து முகம் ஒடுங்கினாற் போல காட்சியளிக்கும். அதைச் சரிசெய்வது தான் ஃபில்லர்ஸின் வேலை. தவிர சிலருக்கு முகத்தின் இரு பகுதிகளும் சமமாக இருக்காது. அதை சரிசெய்யவும் ஃபில்லர்ஸ் ஊசி போடப்படும். சுருக்கமாகச் சொல்வ தானால் முகத்தின் மேல் பகுதியை இளமையாகக் காட்ட போடாக்ஸும், முகத்தின் கீழ்ப் பகுதியை இளமையாகக் காட்ட ஃபில்லர்ஸும் தேவைப்படும். இதில் போடாக்ஸ் சிகிச்சையின் பலன் 5 முதல் 6 மாதங்களுக்கும், ஃபில்லர்ஸ் சிகிச்சையின் பலன் 8 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலும் நீடிக்கும். இந்த இரண்டு சிகிச்சைகளுக்குமே சில ஆயிரங்கள் செலவாகும்.

இந்தச் சிகிச்சைகளே தேவையின்றி சருமத்தை இயற்கையான முறையில் இளமையாக வைத்திருக்க அடிப்படையான சில விஷயங்கள் அவசியம். சருமத்தின் ஈரப்பதம் போகாமலிருக்க மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ள உணவுகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலமுள்ள உணவுகள், நட்ஸ் போன்றவை அவசியம். எல்லா நிறக் காய்கறிகள், பழங்களிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமிருக்கும். வைட்டமின் சி, குளூட்டோதயான் போன்றவற்றை சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளலாம். ரெட்டினால் கலந்த ஆன்ட்டி ஏஜிங் க்ரீம்களை சரும மருத்து வரின் பரிந்துரையோடு 30 வயதிலிருந்தே உபயோகிக்கலாம்.

எனக்கு வயது 40. கர்ப்பமாக இருந்தபோது அடிக்கடி கால்களில் நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை இருந்தது. கர்ப்ப காலத்தில் அது சகஜம் என்றார்கள். ஆனால் 15 வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் அதே பிரச்னை வந்திருக்கிறது. இரவுத் தூக்கத்தில் அடிக்கடி இப்படி நரம்பு சுருட்டிக்கொண்டு வலி உயிர் போகிறது. இது எதனால்? இதை குணப்படுத்த என்ன வழி? எந்த மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?

-கே.தமிழ்ச்செல்வி, சேலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தநாள அறுவை சிகிச்சை மருத்துவர் மணிகண்ட பிரபு

அவள் பதில்கள் - 23

நீங்கள் குறிப்பிட்டிருப்பது `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose Veins) எனப்படுகிற பிரச்னை. இது பரவலாக பலரும் சந்திக்கிற பிரச்னைதான். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வந்துவிட்டு, பிறகு தானாகச் சரியாகி விடும். சிலருக்கு அது அப்படியே நீடிப்பதோடு, அதன் தீவிரமும் அதிகரிக்கும். இதற்கு நீங்கள் `வாஸ்குலர் சர்ஜன்' எனப்படும் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

உங்கள் கேள்வியை வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் வளர்ந்து வருவது தெரிகிறது. அதை உறுதிப்படுத்த ‘டாப்ளர் ஸ்கேன்’ (Doppler Scan) என்ற பரிசோதனையைச் செய்து பார்ப்பார்கள். அதில் பிரச்னை இருப்பது தெரிந்தால் சிகிச்சை ஆரம்பிக்கப்படும். அதாவது அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சை என்றதும் ஓப்பன் அறுவை சிகிச்சையோ என பயப்பட வேண்டாம். இது லேசர் முறையில் மேற் கொள்ளப்படும். லேசர், ரேடியோ ஃப்ரீக்வன்சி அப்ளேஷன், க்ளூ மற்றும் `ஸ்கீலெரோதெரபி' (Sclerotherapy) போன்று சின்னச்சின்ன ஊசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் இருக்கின்றன. சிறிய ஆபரேஷன்தான். ஒரே நாளில் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பிவிடலாம். மேற்குறிப்பிட்ட சிகிச்சைகளில் உங்களுக்கு எது தேவை என்பதை மருத்துவர் முடிவு செய்வார். வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னைக்கான சிகிச்சைகள் ரொம்பவே எளி தானவை. எனவே, இதுகுறித்து பயப்படத் தேவையில்லை.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.