
- சாஹா
என் வயது 36. வேலை, வீட்டுச்சூழல் காரணமாக எனக்கு கடுமையான ஸ்ட்ரெஸ் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. ஸ்ட்ரெஸ் தான் காரணம் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? மனநலனுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்புண்டா? முடி உதிர்வைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
- சி.அஸ்வினி, கோவை
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

முடி உதிர்வுக்குப் பல கார ணங்கள் இருக்கலாம். அவற்றில் முதலிடம் மன அழுத்தம் எனப் படும் ஸ்ட்ரெஸ்ஸுக்கு. மன அழுத்தம் அதிகமாவதன் விளைவால் ஏற்படுகிற முடி உதிர்வுப் பிரச்னையை அலோபேஷியா அரியேட்டா, டெலோஜன் எஃப்ளுவியம் மற்றும் ட்ரைக்கோ டில்லோமேனியா என மூன்றாக வகைப் படுத்தலாம்.
முதல் வகையான ‘அலோபேஷியா அரியேட்டா’வில், ரத்த வெள்ளை அணுக்கள் ஃபாலிக்கிள் எனப்படும் கூந்தலின் வேர்ப்பகுதியைத் தாக்கி, கூந்தல் வளர்ச்சி யைத் தடைசெய்வதுடன், முடி உதிர்வுக்கும் காரணமாகும்.
‘டெலோஜன் எஃப்ளுவியம்’ என்கிற நிலையில் அதீத மன அழுத்தம் மற்றும் மன உளைச் சல் காரணமாக, வளரும் நிலையில் உள்ள முடிக் கற்றைகள், உதிர்வதற்கு முன்பான ஓய்வுநிலைக்குத் தள்ளப்படும். அதிக டென்ஷன், கவலையில் இருக்கும் நாள் களைத் தொடர்ந்து முடி உதிர்வும் அதிகமாக இருப்பதை எப்போதாவது கவனித் திருக்கிறீர்களா... காரணம் இதுதான். சாதாரணமாக தலை சீவும்போதும் தலைக்குக் குளிக்கும்போதும் கொத்துக் கொத்தாக முடி உதிர்வதெல்லாம் இந்தப் பிரச்னையால்தான்.

அடுத்தது ‘ட்ரைக்கோடில்லோமேனியா’. அரிய வகை மனநல பாதிப்பான இதில், உடலில் எங்கு முடிகள் இருந்தாலும், அதைப் பிடுங்க நினைப் பார்கள். நெகட்டிவ் எண்ணங்கள், மன உளைச்சல், படபடப்பு, தோல்வி, தனிமை, அதீத களைப்பு, விரக்தி மனநிலை போன்றவை ஏற்படுகிறபோது, முடிகளைப் பிடுங்கி எறிய ஓர் உந்துதல் உண்டா கும். இந்த பாதிப்பு உள்ளவர்கள், தங்களது மனநலப் பிரச்னைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாத வரை, இவர்களது முடி உதிர்வுப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக் காது.
ஆறுதலான ஒரு விஷயம் என்ன வென்றால், மன அழுத்தத்தால் உண்டாகிற முடி உதிர்வுப் பிரச்னை நிரந்தரமானதல்ல. மன அழுத்தத்தைக் கட்டுப் படுத்தினாலே, கூந்தல் உதிர்வு சரியாகும்.
கூந்தல் வளர்ச்சியில் உண வுக்கு மிக முக்கியப் பங் குண்டு. புரதச்சத்தும் இரும்புச் சத்தும் கூந்தல் வளர்ச்சிக்கு மிக அவசியம். அந்த வகை யில் கறி வேப்பிலை, கீரை, தயிரில் ஊற வைத்த வெந்தயம், முட்டை, பனீர் போன்றவையும், நட்ஸ், பேரீச்சம் பழம், மீன் போன்றவற்றையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் கூந்தலுக்கு எண்ணெய் வைக்கா விட்டாலும், வாரத்தில் 2-3 நாள்களுக்காவது தேங்காய் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகிப்பது, கூந்தல் வறட்சியைப் போக்கி, முடி உதிர்வைக் கட்டுப் படுத்தும்.
நீரிழிவு பாதித்தவர்களுக்கு எம்சிஆர் காலணிகளைப் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன? அது அவசியம் தானா?
- அ.யாழினி பர்வதம், சென்னை -78
பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் நிபுணர் அஷ்வின் கருப்பன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில், குறிப்பாக பாதங் களில் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம். பாதங்கள் மரத்துப்போகும். அதனால் நடக்கும்போது மணல்மீது நடப்பதுபோன்று உணர்வார்கள். கல்லோ, முள்ளோ குத்தினால்கூட அவர்களுக்குத் தெரியாது. அதனாலேயே அவர் களுக்கு பாதங்களில் பெரிய பிரச்னைகள் வரும். நீரிழிவின் காரணமாக ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டம் தடைப்படுவதும் நடக்கும். நீரிழிவு பாதித்தவர்களின் பாத வளைவு மாறிப்போகும். தவிர அவர்களுக்கு ‘Claw foot' எனும் கால் வளைவு பாதிப்பும் வர வாய்ப்பிருக் கிறது. அப்படிப்பட்ட நிலையில் அவர்களுக்கு `காலஸஸ்' (Calluses) எனப்படும் சருமம் தடித்துப் போகும் பிரச்னையும், புண்களும் உருவாக வாய்ப்புகள் அதிகம். சாதாரண காலணிகள் அணியும்போது இந்தப் பிரச்னைகளுக்கு அவை ஈடுகொடுக்காது. அதுவே எம்சிஆர் (Micro Cellular Rubber) காலணிகள் சற்று சௌகர்யமாக இருக்கும். தவிர இந்தக் காலணிகளை அணியும் போது பாதங்களின் அமைப்பு மாறுவது தடுக்கப் படும். சர்க்கரை நோயாளிகளுக்கு நடை மிக மிக முக்கியம். அதன் மூலம்தான் அவர்களுக்கு கலோரிகள் எரிக்கப்படும், ரத்தச் சர்க்கரையும் கட்டுக்குள் வரும். எம்சிஆர் காலணிகள் அணியும் போது அவர்களால் நன்றாக நடக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதப் பராமரிப்பு என்பது ரொம்பவே முக்கியம். லேசான, சிறிய புண்கூட சரியாக கவனிக்கப்படாத பட்சத்தில் பெரிதாகி, ஒரு கட்டத்தில் பாதங்களையே அகற்ற வேண்டிய அளவுக்குத் தீவிரமாகலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உணர்திறன் குறைவாக இருப்பதுதான் காரணம். எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் கால்களை நன்கு கழுவிவிட்டு, ஏதேனும் புண்கள் இருக்கின்றனவா என்று பார்க்கச் சொல் வோம். அவர்களால் பார்க்க முடியாதபட்சத்தில் கண்ணாடியை வைத்தும் பார்க்கலாம். வெளியிலும் வீட்டிலும் நடமாடும்போது சாக்ஸ் அணிய வலியுறுத்துவோம். சர்க்கரை நோயாளிகளுடன் இருப்பவர்கள் தினம் இதை கவனிக்க வேண்டும். சின்ன வித்தியாசம் தெரிந்தாலும் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். ஏதேனும் பிரச்னை இருப்பது தெரிந்தால் மருத்துவர்கள், நீரிழிவு பாதித்தோருக்கான பிரத்யேக காலணி களைப் பரிந்துரைப்பார்கள். அதுவும் எம்சிஆர் மெட்டீரியலில்தான் தயாரிக்கப்படும்.

சின்ன புண்ணையும் அலட்சியப்படுத்தாமல் கவனிப்பதும் புண் ஆறாமலிருந்தால் ரத்தக் குழாயில் அடைப்பு இருக்கிறதா என்று பார்ப்பதும் முக்கியம். ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் அடிப்படை.
உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை
`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,
avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.