லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் 58: சரும ஆரோக்கியத்துக்கு உதவுமா குங்குமாதி தைலம்?

குங்குமாதி தைலம்
பிரீமியம் ஸ்டோரி
News
குங்குமாதி தைலம்

- சாஹா

என்னுடைய தோழிக்கு வயது 52. அவளுக்கு முன்னந்தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலக் காணப்படுகிறது. பெண்களுக்கும் தலையில் வழுக்கை விழுமா? இதற்குத் தீர்வுகள் உண்டா? -கே. நீலா, திருச்சி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்

ஆண்களைப் போலவே பெண் களுக்கும் வழுக்கை பாதிக்கும். அதை ‘ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ்’ (Female pattern hair loss) என்று சொல்வோம். இது பெரும்பாலும் மரபியல் காரணமாக வருவது. ‘டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன்தான் இப்பிரச்னைக்கு காரணம். இதனால் கூந்தல் வளர்ச்சியின் படிநிலை பாதிக்கப்பட்டு, வளரும் கூந்தல் மெலிதாகவும் மாறிப்போகிறது. சில பெண்களுக்கு இது மெள்ள மெள்ளவே அதிகரிக்கும். இன்னும் சிலருக்கு அதிரடியாக முடி உதிரும். 35 ப்ளஸ் வயதில் இருக்கும் பெண்களில் 40 சதவிகிதம் பேர் இதனால் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல் கிறது. ‘ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ் தவிர வேறு சில பிரச்னைகளாலும் பெண்களுக்கு முடி உதிர்ந்து, மெலிந்து, வழுக்கை போல தெரியலாம். மன அழுத்தம், பிரசவத்துக்குப் பிறகான ஹார்மோன் சமநிலையின்மை, போன்றவற்றால் ஏற்படும் ‘டெலோஜென் எஃப்ளுவியம்’ (Telogen Effluvium) எனும் பிரச்னையாலும் முடி உதிரலாம். இரும்புச்சத்துக் குறைபாடு, ரத்தம் தொடர்பான நோய்களும் காரணமாகலாம்.

அவள் பதில்கள் 58: சரும ஆரோக்கியத்துக்கு உதவுமா குங்குமாதி தைலம்?

இவை தவிர, ‘ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா’ (Androgenetic alopecia) எனப்படும் ஒருவகை வழுக்கை 40 வயதுக்கு மேலான பெண்களில் 50 சதவிகிதம் பேரை பாதிக்கிறது. அவர்களில் 13 சதவிகிதம் பேருக்கு மெனோ பாஸ் காலத்தில் இது பாதிப்பதாகவும் தெரிகிறது. ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜென், பெண்களின் உடலிலும் இருக்கும். அவை டிஹெச்டி (Dihydrotestosterone) எனப்படும் ரசாயனத்தை உற்பத்தி செய்யும். அந்த உற்பத்தியைத் தூண்டும் ஒருவித என்சைம், பெண் உடலில் அதிகரிக்கும்போது, அவர்களுக்கு முடி மெலிந்து, வழுக்கை விழுகிறது. மேற்குறிப்பிட்டவற்றில் எந்தப் பிரச்னையால் முடி மெலிவும் உதிர்வும் இருக்கிறதோ, அதைப் பொறுத்து முன்னந்தலையிலோ, பக்கவாட்டிலோ வழுக்கை விழும். வயதாவதன் காரணமாகவும் கூந்தல் மெலிந்து, மண்டைப்பகுதி தெரியலாம். சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகள் உட்கொள்ளப்படாததும் காரணமாகலாம். எனவே, உங்கள் தோழியை கூந்தல் சிகிச்சை மருத்துவரை சந்திக்கச் சொல்லுங்கள். அவர் முடி உதிர்வு மற்றும் வழுக்கைக்கான காரணத்தை உறுதிசெய்து, சரியான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

அவள் பதில்கள் 58: சரும ஆரோக்கியத்துக்கு உதவுமா குங்குமாதி தைலம்?

என்னுடைய தோழி தினமும் முகத்துக்கு குங்குமாதி தைலம் உபயோகிக்கிறாள். அது சரும நிறத்தை மேம்படுத்தி, முதுமைத் தோற்றத்தையும் தள்ளிப் போடும் என்று என்னையும் உபயோகிக்கச் சொல் கிறாள். குங்குமாதி தைலத்துக்கு அப்படியொரு குணம் உண்டா? அதை யாரெல்லாம் எப்படிப் பயன் படுத்தலாம்? - பி. தனலட்சுமி, தஞ்சாவூர்

பதில் சொல்கிறார், கடையநல்லூரைச் சேர்ந்த தலைமை ஆயுர்வேத மருத்துவர் அ.முகமது சலீம்

10 வயதிலிருந்து யார் வேண்டு மானாலும் குங்குமாதி தைலம் உபயோகிக்கலாம். 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இதை மருத்துவரின் பரிந்துரையோடு நல் லெண்ணெயுடன் கலந்துதான் பயன் படுத்த வேண்டும். குங்குமாதி தைலம் என்பது குங்குமப்பூ, வெட்டிவேர், அதி மதுரம், மரமஞ்சள் என பல பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. குங்குமாதி தைலம் சருமப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரக்கூடியது. சரும நிறத்தைக் கூட்டும். மங்கு, கரும்புள்ளி போன்றவற்றைப் போக்கும் என்பது ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இது ஆன்டி ஏஜிங் தன்மை கொண்டது என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை.

முதலில் முகத்தை நீராவி பிடிப்பதன் (ஸ்டீம்) மூலம் சுத்தப்படுத்திவிட்டு, துடைக்க வேண்டும். குறைந்தது இரண்டு சொட்டுகள், அதிகபட்சமாக ஐந்து சொட்டுகள் எடுத்து முகத்தில் தடவி, வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்யலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் இரவு தூங்குவதற்கு முன் தடவி, ஒரு மணி நேரம் வைத்திருக்கலாம். எண்ணெய்ப்பசையான சருமம் என்றால் காலையில் உபயோகிக்கலாம். 15 நிமிடங்கள் வைத்திருக்கலாம். பிறகு வெதுவெதுப்பான நீரால் துடைத்து எடுத்துவிட்டு, கடலை மாவோ, பயத்த மாவோ கொண்டு முகம் கழுவி விடலாம்.

அவள் பதில்கள் 58: சரும ஆரோக்கியத்துக்கு உதவுமா குங்குமாதி தைலம்?

முதல் இரண்டு வாரங்களுக்கு இதை தினமும் உபயோகிக்கலாம். அதற்கடுத்து வாரம் மூன்று நாள்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும். மருத்துவர் அறிவுறுத்தி யிருந்தால் மட்டுமே தினமும் பயன்படுத்த வேண்டும். அது சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தைப் பொறுத்து மருத்துவரால் முடிவு செய்யப்பட வேண்டியது. குங்குமாதி தைலத்தை நசியம் எனப்படும் மூக்கிலிடும் மருந்து சிகிச்சையாகவும் பயன்படுத்தலாம் என்கின்றன ஆயுர்வேத நூல்கள். திரிபலா சேர்த்த நீரால் ஆவி பிடித்துவிட்டு, மூக்கின் இரு துவாரங்களிலும் தலா இரண்டு சொட்டு விட்டால் நரை பிரச்னை மாறும் என்கின்றன ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள். எனினும் அதையெல்லாம் நீங்களாகப் பின்பற்றாமல், ஆயுர்வேத மருத்துவரின் அறிவுரையோடு செய்வதுதான் சரியானது, பாதுகாப்பானது.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.