ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் பதில்கள் 54: தினமும் 3 லிட்டர் தண்ணீர்... எல்லோருக்கும் அவசியமா?

தண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
News
தண்ணீர்

சாஹா

எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் உணவுக்கட்டுப்பாடு அவசியமா? எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும், எவற்றை யெல்லாம் தவிர்க்க வேண்டும்?

- கே.மஞ்சரி, திருவண்ணாமலை

விக்ரம்குமார்
விக்ரம்குமார்

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் உடல் சற்று சோர்வாக இருக்கும். அந்நிலையில் செரி மானத்துக்கு கடினமான அசைவ உணவுகள், காரம், மசாலா அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அகத்திக்கீரை, புளி, மாங்காய் போன்ற உணவுகள் எண்ணெய்க் குளியலின் பலன் களைத் தடுக்கக்கூடியவை என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்களில் கண்டிப்பாக புகை மற்றும் மதுவை தவிர்த்தே ஆக வேண்டும்.

அவள் பதில்கள் 54: தினமும் 3 லிட்டர் தண்ணீர்... எல்லோருக்கும் அவசியமா?

எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களுக்கான உணவுகளை சித்த மருத்துவம் பட்டியலிட்டிருக்கிறது. அதன்படி அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, கத்திரிப் பிஞ்சு, பீர்க்கங்காய், புடலங்காய், தூது வளைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சுண்டைக்காய், மணத்தக்காளி, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த உணவுகள் எல்லாம் செரிமானத்தை எளிதாக்கக் கூடியவை என்பதே காரணம்.

தண்ணீர் அதிகம் குடிப்பது குறித்த சர்ச்சை கடந்த சில தினங் களாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் வெறும் தண்ணீரைக் குடிப்பது வாந்தி உணர்வை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க என்ன வழி? தாகத்துக்குத் தண்ணீர் குடித்தால் போதாதா?

- சி. மகேஸ்வரி, திருச்சி

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்து வதால் உடல் உறுப்புகள் சுத்தமாகும். உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது தலைச்சுற்றல், மயக்கம், களைப்பு, தலைவலி போன்றவை வரலாம். உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது சிலருக்கு கடுமையான தலைவலி வரும். தண்ணீர் குடித்ததும் தலைவலி குணமாவதை உணர்வார்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டுபோகும். உதடுகள் வெடிக்கும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். எனவே தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்துப் பழகாமல் குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துப் பழகுவது நல்லது.

நீங்கள் குறிப்பிட்டதுபோல வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டலை ஏற்படுத்தலாம். அவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு கலந்து புதினா இலைகள் சேர்த்துக் குடிக்கலாம். நீர்வறட்சி ஏற்படாமலிருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் தண்ணீர் சேர்த்து நீர் மோராக்கி, நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது செரிமானத்துக்கும் சிறந்தது. உடலையும் குளிர்ச்சியாக வைக்கும்.

அவள் பதில்கள் 54: தினமும் 3 லிட்டர் தண்ணீர்... எல்லோருக்கும் அவசியமா?

சூப், ரசம், இளநீர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள் வது நீர் வறட்சியைத் தவிர்க்கும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், இதய நோயாளிகளும் மருத்துவர் அனுமதிக்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். மற்றபடி குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப் பதை வலியுறுத்த வேண்டும். அடிக்கடி சிறுநீர்த்தொற்றுக்கு உள்ளாகிறவர்களும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும். சிறுநீரகம் மற்றும் இதய பாதிப்புகள் இல்லாத ஆரோக்கியமான நபர்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.