
- சாஹா
கடந்த சில மாதங்களுக்கு முன் என் கூந்தலை `ஸ்ட்ரெயிட்டனிங்' செய்துகொண்டேன். ஆனால், அது எனக்குப் பொருத்தமாக இல்லாதது போல உணர்கிறேன். என் ஹேர் ஸ்டைலை மீண்டும் பழையபடி மாற்ற முடியுமா? அது கூந்தலின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

- பி.திவ்யா, சென்னை-32
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
`ஸ்ட்ரெயிட்டனிங்' என்பது கெமிக்கல்கள் வைத்துச் செய்யப்படுகிற ஒரு சிகிச்சை. ஸ்ட்ரெயிட்டனிங் செய்த கூந்தலை மீண்டும் ‘பெர்ம்’ சிகிச்சை செய்தால்தான் அது ஓரளவு அலை அலையாக மாறும். அதுவும் கெமிக்கல்கள் வைத்துச் செய்யப்படுகிற சிகிச்சைதான். எனவே உடனுக்குடன் இப்படி ஸ்ட்ராங்கான கெமிக்கல்கள் வைத்து கூந்தலை மாற்றுவது கூந்தலுக்கு ஆரோக்கியமானதல்ல. அப்படிச் செய்தால் கூந்தல் உடைந்து, உதிரும். கூந்தல் மிகவும் பலவீனமாகும்.
பெர்ம் செய்த கூந்தலைக்கூட ஸ்ட்ரெயிட்டாக மாற்றுவது ஓரளவு சாத்தியம். ஆனால் ஸ்ட்ரெயிட் டனிங் செய்த கூந்தலை உடனடியாக மீண்டும் நார்மலாக மாற்றுவது சிரமம். எனவே ஸ்ட்ரெயிட் டனிங் செய்த கூந்தல் வளர்ந்து வரும்போது அதை வெட்டிவிடுவதுதான் வழி. எனவே இதுபோன்ற சிகிச்சைகளைச் செய்துகொள்வதற்கு முன் உங்கள் அழகுக்கலை ஆலோசகரிடம் அது உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என ஒன்றுக்கு இருமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

என் வயது 34. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான வலி இருக்கும். அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வேன். இரண்டு வருடங்களாக இது தொடர்கிறது. இப்படி ஒவ்வொரு மாதமும் வலிக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளலாமா?
- கே.பவித்ரா, திண்டுக்கல்
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்
பெண் குழந்தை பூப்பெய்தியதை அடுத்த ஒன்றிரண்டு வருடங்களுக்கு மட்டும் இந்த வலி இருக்காது. அந்த வயதில் பெண்ணின் இனப்பெருக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் `ஹைப்போதலாமிக் - பிட்யூட்டரி - ஓவேரியன் ஆக்சிஸ்' (Hypothalamic-Pituitary-Ovarian Axis) என்பது முதிர்ச்சியடையாமல் இருக்கும். அதன் காரணமாக அவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கருமுட்டைகள் வராது. அதனால் அவர்களுக்கு பீரியட்ஸின் போது வலியும் இருக்காது. மற்றபடி எல்லோருக்கும் பீரியட்ஸ் நாள்களில் லேசான வலி இருக்கும். இதை ‘டிஸ்மெனோரியா’ (Dysmenorrhea) என்று சொல்வோம். அந்த வலியைப் பொறுத்துக்கொள்வது நபருக்கு நபர் வேறுபடும். சிலர் அதைத்தாங்கிக் கொள்வார்கள். சிலரால் தாங்க முடியாது.
கர்ப்பப்பை, சினைக்குழாய் என எல்லா உறுப்புகளும் நன்றாக இருக்கும், ஆனாலும் பீரியட்ஸ் நாள்களில் வலி இருக்கும். இதை ‘பிரைமரி டிஸ்மெனோரியா’ என்கிறோம். வேறு சிலருக்கு கடுமையான வலி இருக்கும். அதற்காக நிறைய மாத்திரைகள் உபயோகிப்பார்கள். இப்படி அளவுக்கதிமாக மாத்திரைகள் எடுக்கும் அளவுக்கு வலியை உணர்பவர்கள், அதை அலட்சியம் செய்யக்கூடாது. மகப்பேறு மருத்துவரை அணுகி, வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியோசிஸ் என்ற பிரச்னையில் கர்ப்பப்பையின் உள்ளே உள்ள சவ் வானது வெளியே வளர்வதால், அருகிலுள்ள அமைப்பை எல்லாம் தொந்தரவு செய்து, அதனால் வலி ஏற்படும். ஆரம்பகட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் வேறு பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இது தவிர சினைப்பை கட்டி, இடுப்பெலும்பு பகுதி இன்ஃபெக்ஷன் போன்றவற்றாலும் பீரியட்ஸின்போது வலி இருக்கலாம். இதுபோன்ற வலி ‘செகண்டரி டிஸ்மெனோரியா’ எனப்படும்.

பீரியட்ஸ் வலிக்கு ஒன்றிரண்டு மாத்திரைகள் போட்டு வலி குறைந்துவிட்டால் அது நார்மல். அதன் பிறகும் வலி தொடர்ந்தால் மாத்திரைகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தாமல், மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரி யானது. எந்தவகையான வலி நிவாரண மாத்திரைகளையும் அளவு கடந்து உபயோகிப்பது சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு காரணமாகலாம். உங் களுக்குத் தேவை, வலியிலிருந்து தற்காலிக நிவாரண மல்ல, வலிக்கான காரணமறிந்து அதற்கான சிகிச்சையை எடுப்பதுதான் என்பதில் உறுதியாக இருங்கள்.
உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை
`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ, avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.