
- சாஹா
நான் மல்ட்டி நேஷனல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறேன். என்னுடைய உயரதிகாரி ஒருவர், பொதுவாகவே எல்லோரிடமும் இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசுவார். பெண்களின் நடை, உடை, உடல் போன்றவற்றை வைத்துப் பேசுவார். என்னிடமும் ஒருநாள் அப்படி ஒரு சினிமா பாடலைக் குறிப்பிட்டு என் உடலை வர்ணித்துப் பேசினார். என்ன செய்வதென்று தெரியாத நான் என் அலுவலகத்தில் உள்ள ‘பாஷ்’ கமிட்டியிடம் புகார் கொடுக்கப்போனேன். அந்த கமிட்டியின் தலைவர், ஹெச்ஆரை சந்திக்கச் சொன்னார். நிறுவன ஹெச்ஆர் என்னை அழைத்து ‘இதையெல்லாம் பாலியல் புகார் கமிட்டியில் சொல்வாயா, இந்தப் புகாரை பாஷ் கமிட்டி எடுத்துக்கொள்ளாது... நகைச்சுவையாக எடுத்துக்கொள்’ என்று அனுப்பிவிட்டார். எங்கள் அலுவலக பாஷ் கமிட்டியில் இப்படிப்பட்ட புகார்கள் எதையும் கண்டுகொள்வதில்லை என்கிற விவரம் அதன் பிறகு தான் தெரிந்தது, பணியிடத்து பாலியல் அத்துமீறல் புகார்களை உரிய முறையில் விசாரித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பாஷ் கமிட்டியின் நிலை இப்படி இருந்தால் என் போன்ற பெண்களின் நிலைதான் என்ன? இதுபோன்ற பிரச்னைகளுக்கு வேறு என்னதான் தீர்வு? - எஸ்.பிரதீபா, சென்னை-21
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி

பெரும்பாலான பெண்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். பணி யிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய 2013-ம் ஆண்டு இயற்றப்பட்டதுதான் ‘பணியிட பாலியல் வன்முறை தடுப்புச் சட்டமான ‘பாஷ்’ (POSH Act-2013. Sexual Harassment of Women at Work Place -Prevention, Prohibition and Redressal Act). இதற்கு அடிப்படை, 1997-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘Vishaka Vs state of Rajasthan’ என்ற வழக்கின் தீர்ப்புதான்.
பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்யும் ஒவ்வொரு நிறுவனத் திலும் பாஷ் (POSH) கமிட்டி என்ற இன்டர்னல் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். தலைமைப் பொறுப்பில் உள்ள பெண், தலைவராகவும், பணி புரியும் ஆண்களும் பெண்களும் இன்டர்னல் கமிட்டியின் உறுப்பினர் களாகவும், ஒரு வழக்கறிஞரும், பெண் களுக்காக இயங்கும் என்.ஜி.ஓ-வைச் சேர்ந்த ஒரு நபரும் அந்த கமிட்டியில் இருக்க வேண்டும். அந்தச் சட்டத்தில் PREVENTION, PROHIBITION AND REDRESSAL என்ற வார்த்தைகள் இருக்கும். அதாவது பிரச்னைகள் வருவதை முதலில் தடுக்க வேண்டும். அதற்காகத்தான் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு சிவில் கோர்ட்டுக்கான அதிகாரத்துடன் இயங்க வேண்டிய இந்த பாஷ் கமிட்டியானது ஹெச்ஆரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. இந்த கமிட்டிக்கு வரும் புகார்களை எல்லாம் அவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர், இந்த கமிட்டியிடம் வரும் புகார்களை வெளியில் சொல்லக் கூடாது.

நீங்கள் இந்த விஷயத்தை ஹெச்ஆரிடம் கொண்டு போனது தவறு. அவர் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளச் சொன்னது அதைவிடத் தவறு. பெரும்பாலான நிறுவனங்களில் பாஷ் கமிட்டி நல்ல முறையில் செயல்படுகிறது. சரியாக இயங்காத அரிதான சில நிறுவனங்களில் ஒன்றில் நீங்கள் வேலை பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது. குறிப்பிட்ட இடைவெளியில் அந்த கமிட்டி உறுப்பினர்கள் கூடி விவாதிக்கவும் புகார்களை விசாரிக்கவும் வேண்டும். உங்களுடைய விஷயத்தில் இந்த கமிட்டி சரியாக இயங்காத நிலையில் நீங்கள் அடுத்து, தேசிய மகளிர் ஆணையம் அல்லது மாநில மகளிர் ஆணையத்தை அணுகுங்கள். ஆன்லைனிலும் தொடர்பு கொள்ளலாம். தேசிய மகளிர் ஆணையத்தில் The Sexual Harassment electronic Box (SHe-Box) என்ற ஆன்லைன் போர்ட்டலில் புகார் அளிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சமூகநல ஆணையத்தின் கீழ் ஒரு லோக்கல் கமிட்டி இயங்கும். பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றும் நிறுவனமாக இருந்தும் புகார் கமிட்டி இல்லையென்றாலும், பத்துக்கும் குறைவான நபர்கள் பணியாற்றும் நிறுவனமாக இருந் தாலும், அமைப்புசாரா தொழிலாளர்களாக (சித்தாள், பணியாள்) பணியாற்றுபவர்களும் இந்த கமிட்டியில் புகார் செய்யலாம். இப்படி எதுவுமே இயலாத நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
நீங்கள் பணியிடத்தில் எதிர்கொண்டது பாலியல் வன்முறையில் அடக்கம்தான். அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளச் சொன்னவர் பாலியல் வன்முறையைத் தூண்டுபவராகவே கருதப் படுவார். அவரும் தண்டிக்கப் படக்கூடியவரே. முறையான இடத்தை அணுகினால் உங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்.

எனக்கு இன்னும் ஆறு மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது. காதல் திருமணம். காதலருக்கு வயது 28. அவருக்கு நீரிழிவு இருப்பது கடந்த மாதம் உறுதியானது. இந்நிலையில் நாங்கள் திருமணம் செய்துகொள்வது சரியான முடிவா? இது எங்கள் தாம்பத்திய வாழ்க்கையை, குழந்தை பெற்றுக்கொள்வதை பாதிக்குமா? - கே. மீனா, திருச்சி
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் டி.பழனியப்பன்
நீரிழிவு உள்ள எத்தனையோ பேர் திருமணம் செய்துகொள்கிறார்கள். எனவே நீரிழிவு பாதிப்பு என்பது திருமணத்துக்கான தடையல்ல. நீரிழிவு வந்து சில வருடங்கள் ஆனவர்களும் சரி, ஆரம்பநிலை சர்க்கரை நோய் பாதிப்பில் இருப்போரும் சரி, திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை. இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அவர்களது ரத்தச் சர்க்கரை அளவுதான். அது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்வரை பிரச்னையில்லை. ஆனால், நீண்டகாலமாக ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்ற நிலை யில் அதற்கான பாதிப்பு அவர்களது உடலில் நிச்சயம் இருக்கும்.
இந்த நிலையில் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைபாடு இருக்கலாம். பெண்களுக்கு சினைப்பையின் செயல்பாடு குறைந்து, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, அது கட்டுப்பாடின்றி இருக்கும் நிலையில் அவர்களது தாம்பத்திய உறவும் குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியும் நிச்சயம் பாதிக்கப்படும். கல்யாணத்துக்கு முன்பே ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப் படுத்தும் முயற்சிகளில் இறங்க வேண்டும். திருமணத்துக்குப் பிறகும் அந்த முயற்சிகள் தொடர வேண்டும்.
உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை
`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,
avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.