ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

24-ம் ஆண்டு கொண்டாட்டம்!

24-ம் ஆண்டு கொண்டாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
24-ம் ஆண்டு கொண்டாட்டம்!

அவள் இதுபோல பலர் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கும் என்பதில் ஐயமில்லை

வழி காட்டிய ’அவள்’

என் மூத்த இரு அண்ணாக்களும் நன்றாகப் படித்து, நல்ல வேலைபார்க்கிறார்கள். கடைசி அண்ணா மட்டும் படிப்பில் படு வீக். பாரதியைப் போல அவனுக்கு கணக்கு மட்டும் ஆமணக்கு. எல்லோர் வாயிலும் விழுந்து எழுவான். வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டு கோயிலில் போய் அழுது கொண்டு உட்கார்ந்திருப்பான். `பள்ளியிறுதியைக்கூட முடிக்காத வனுக்கு என்ன வேலை கிடைக்கும்... அவன் வாழ்வு எப்படியிருக்கும்' என வீட்டில் எல்லோருக்கும் கவலையாக இருக்கும். நிறைய நேரம் வீட்டிலேயே இருந்ததால் அம்மாவுக்கு உதவியாக சமையல் செய்வான்.

24-ம் ஆண்டு கொண்டாட்டம்!

22.5.2009 - அவள் விகடனில் ‘பார்டர்ல பாஸ்... வாழ்க்கையில் BOSS' என்று ஒரு கட்டுரை வெளியாயிற்று. அதில் ஒரு பெண்ணுக்கு பாடம் வேப்பங்காயாக இருக்கும். ஆனால், ஜெராக்ஸ் மெஷின் வைத்து சொந்த பிஸினஸ் செய்து முதலாளியானதாகச் சொல்லி யிருந்தார். `மதிப்பெண் வாழ்க்கையைத் தீர்மானிக்காது' என்று வழக்கறிஞர் அருள்மொழி போன்றவர்கள் பேசியிருந்தார்கள். அந்தக் கட்டுரைதான் கண் திறந்தது.

``அம்மா... சமையலை வெச்சுகூட சம்பாதிக்க முடியும் இல்லையா...'’ என்றான் அவன். ``அதற்குக்கூட கேட்டரிங் படிப்பு வேண்டும்” எனப் பெரியண்ணா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “இனி வீட்டில் நானே சமைத்துப் பழகுகிறேன்” என ஆரம்பித் தான். ஆர்வம் இருப்பதில்தானே வெற்றி கிட்டும்? எங்கள் அப்பார்ட்மென்ட்டில் ஒருவர் அப்போது இறந்துவிட, அம்மா உதவி செய்து அவர்கள் வீட்டுக்கு பதிமூன்று நாள் காரியத்துக்கு சமைத்துக் கொடுத்தான். அதுதான் ஆரம்பம்.

இந்தப் பதினான்கு வருடங்களில் கேட்டரிங் பிசினஸ் செய்கிறான். கடைகளுக்கு பட்சணம் சப்ளை செய்வது, கோயிலுடன் தொடர்பில் இருப்பதால் பிரசாத கான்ட்ராக்ட், தீபாவளி சீர் பட்சணங்கள் எனத் தன் தொழிலை விரிவு படுத்திவிட்டான். இருள் சூழ்ந்திருந்த நேரம் விளக்கு போல அவள் விகடனில் வந்த அந்தக் கட்டுரை நம்பிக்கையை ஊட்டியது. என் அண்ணாவுக்கு நல்வாழ்வையும் தந்தது. அவளுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக நன்றிகள்.

அவள் இதுபோல பலர் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 24-ம் ஆண்டு தொடக் கத்துக்கு வாழ்த்துகள். நூற்றாண்டு சாதனை கண்டு பலர் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைக்க வேண்டும் `அவள் விகடன்'.

- வித்யா வாசன் - சென்னை-78

24-ம் ஆண்டு கொண்டாட்டம்!

பட்டாசு சாக்லேட்டும் வாசகரின் அக்கறையும்!

`அவள் விகடன்' 9.11.2021 தேதியிட்ட இதழில், ‘தீபாவளிக்குப் புதுசு... பட்டாசு சாக்லேட்டுக்கு மவுசு!’ என்ற தலைப்பில், திண்டுக்கல், புவனசுந்தரியின் சாக்லேட் தயாரிப்பு குறித்து எழுதியிருந்தோம். தீபாவளி ஸ்பெஷலாக புஸ்வானம், ராக்கெட் எனப் பட்டாசு வடிவங்களில் அவர் சாக்லேட் தயாரிப்பது குறித்தும் பதிவு செய்திருந்தோம்.

இதைத் தொடர்ந்து வாசகர் ஆறுமுகம், ‘சாக்லேட் என நினைத்து சின்னக் குழந்தைகள் நிஜ பட்டாசை வாயில் வைத்துவிட வாய்ப்புள்ளதே’ என்று சுட்டிக்காட்டி நமக்கு இ-மெயில் அனுப்பியிருந்தார்.

ஆறுமுகம் குறிப்பிட்டிருப்பதுபோல நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே, இந்த விஷயத்தை புவனசுந்தரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டவர், `‘ரேப்பரை அகற்றிவிட்டால் உள்ளே இருப்பது பட்டாசு வடிவ சாக்லேட்தான் என்பது பார்த்ததுமே தெரிந்துவிடும். அதேபோல எல்லோருக்கும் பட்டாசு ரேப்பர் சுற்றித் தருவதில்லை. கேட்கும் வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் தருவோம். சாக்லேட் என்றாலே குழந்தைகள்தாம். அதனால், என் ஒவ்வொரு முயற்சியையும் குழந்தைகளின் நலனை மனதில் வைத்தே செய்வேன். இனி, அவள் விகடன் வாசகரின் கருத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுவேன். அவருடைய அக் கறைக்கும் ஆலோசனைக்கும் நன்றி’’ என்று சொன்னார்.

எச்சரிக்கை: இப்படி விதம்விதமான சாக்லேட்கள் வாங்கிக் கொடுக்கும்போது பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தப் பொருளையுமே வாயில் வைக்கும் வழக்கும் சின்னக் குழந்தைகளுக்கு உண்டு. இத்தகைய சூழலில், பட்டாசு வடிவ சாக்லேட்டை சாப்பிடும் சின்னக் குழந்தைகள், பிறகு நிஜ பட்டாசுகளைப் பார்க்கும்போது சாப்பிடுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவது மிக மிக முக்கியம்.

சமூக அக்கறையுடன் கடிதம் எழுதிய வாசகர் ஆறுமுகத்துக்கு நன்றி!

24-ம் ஆண்டு கொண்டாட்டம்!

தாய்வீட்டுச் சீதனம்!

நாங்கள் 2008 டிசம்பர் விடுமுறையில் ஸ்ரீலங்கா செல்ல இருந்தோம். என் மகனோ, தனக்கு ஸ்வெட்டர் சரியாக இல்லை என அழுது கொண்டிருந்தான். கிளம்புவதற்கு முந்தைய தினம், அவள் விகடன் அலுவலகத்திலிருந்து எனது ‘குட்டீஸ் குறும்பு’ தேர்வானதால் பரிசைப் பெற்றுக் கொள்ளும்படி கடிதம் வந்தது. நானும் என் மகனும் உடனே கிளம்பினோம்.

அலுவலகத்தில், அவர்கள் ஒரு பெரிய பாக்கெட்டை என் மகனிடம் கொடுத்தனர். நான் கையெழுத்துப் போட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அங்கேயே பாக்கெட்டைப் பிரித்து, உடனே அணிந்து, என்னைத் தழுவி முத்தமிட்டான் என் மகன். அவனுக்கே அளவெடுத்து தைத்ததுபோல் ‘கனகச்சிதமாக'ப் பொருந்தியது அந்த ஜர்கின்ஸ்.

‘அவள்' கொடுத்த தாய்வீட்டுச் சீதனத்துடன் ஆரம்பித்த எங்கள் பயணம் நிறை வாகவே முடிந்தது. நன்றிகள் பல கோடி.

- ப்ரீதா ரங்கசுவாமி, சென்னை-28

24-ம் ஆண்டு கொண்டாட்டம்!

‘அவள்’ யாரோ அல்ல, நம்மவள்!

என் அண்ணிக்கு கல்யாணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தைப் பேறு கிட்டவில்லை. அது தொடர்பான வருத்தத்தில் அனைவருமே இருந்தோம். அப்போது திடீரென நாள் தள்ளியது (43 நாள்) சந்தோஷப்படும் நேரம். ரத்தப்போக்கும் வயிற்றுவலியும் வர.. ``எப்போதும் போல உட்கார்ந்துட்டேன்” என மன்னி மெசேஜ் அனுப்ப, ‘டல்’லாகி விட்டோம். மிகவும் தற்செயலாக அந்த வாரம் கே.அபிநயா என்பவர் `கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு' குறித்த கட்டுரை எழுதியிருந்தார்.

ஒரு கர்ப்பிணி பெண்ணின் ரத்தக்கசிவை மாதவிடாய் எனத் தவறாகப் புரிந்துகொண்ட டாக்டர் ஒருவரால் கர்ப்பம் கலைக்க நேர்ந்த ஒரு பெண்ணின் அவலக்கதை. அதைப் பார்த்தவுடன் குப்பென எனக்குள் ஒரு ஃபோர்ஸ். மன்னி விஷயத்தில் இது ஏன் நடந்திருக்கக் கூடாது?

போனில் அண்ணா வைப் பிடித்து விஷயத்தை சொன்னேன். “தாமதிக் காதே! ஒரு மாதமும் இல்லாது இந்த மாதம் நாள் தள்ளியிருக்கிறது சீனியர் டாக்டர் யாரிட மாவது கூட்டிப்போ!” என்று பதறினேன்.

ஆபீஸில் வேலை பார்க்கும் பெண்கள் மூலம் தகுதியான டாக்டரை பிடித்த அண்ணா உடன் மன்னியை அழைத்துக்கொண்டு ஓட, குழந்தை சாரதா காப்பாற்றப்பட்டாள். மன்னி எப் போதும் உன்னால்தான் அவள் பிழைத்தாள் என்றுதான் சொல்கிறாள்.

எனக்குதான் தெரியும், அவள் விகடனால் தான் அவள் பிழைத்தாள் என்று. அன்று மட்டும் அவளை நான் பார்க்காதிருந்தால் அவளில் அந்தக் கட்டுரை வராதிருந்தால் அந்தப் பெண்ணின் நிர்கதி மன்னிக்கும் நேர்ந்திருக்குமோ என்னவோ?

இந்த ஒரு விஷயம் மட்டு மல்ல பல விழிப்புணர்வு களை அவள் மூலம்தான் பெறுகிறோம். அந்த வகையில் இந்த ‘அவள்’ யாரோ அல்ல, நம்மவள்!

ஸ்ரீமல்லிகா குரு, சென்னை-33