
#Avaludan
உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...
வாரத்துக்கு 4 நாள்கள் வேலை திட்டம்... ப்ளஸ், மைனஸ் ப்ளீஸ்..!
இங்கிலாந்தில் உள்ள 100 நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாள்கள் மட்டுமே பணிபுரியும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதில் ஊழியர்களுக்கான சலுகைகள் எதுவும் குறைக்கப்படாது, அதே சம்பளம் தரப்படும். இத்திட்டம் பணியாளர்களின் வேலைத்திறனை மேம்படுத்தி, நாட்டிலும் மாற்றத்தை உண்டாக்கும் என அந்நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இந்தியாவில் இதன் சாத்தியம், சாத்தியமின்மை குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்...
Balaji Bajan
ஏற்கெனவே இருக்கிற தொழிலாளர் சட்டத்தையே இது வரைக்கும் நடைமுறைப்படுத்தவில்லை. புதிதாக சட்டம் போட்டாலும் பயனில்லை. துணிக்கடை, சூப்பர் மார்க்கெட், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை களில் இன்றும் பணியாளர்கள் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலைபார்க்கிறார்கள். ஞாயிறுகள், பண்டிகை நாள்களில் விடுமுறை இல்லை என இவர்கள் உரிமைக் காகப் போராட வேண்டியதே நிறைய இருக்கும்போது, வாரத்தில் 4 நாள்கள் வேலை எல்லாம் இந்தியாவுக்குப் பொருந்தவே பொருந்தாது.
Antony Kumar R
வேலைவாய்ப்பே பிரச்னையாக இருக்கும் நாட்டில், வேலைநாள் குறைப்பு என்பதெல்லாம் சரிவருமா?
Suresh Kumar
அரசு அலுவலகங்களை நினைத்துப் பார்க்கிறேன். ஏற்கெனவே அங்கு வேலைகள் எல்லாம் ஊர்ந்துதான் செல்கின்றன. இதில் வேலை நாளையும் குறைத்தால்... ஆத்தி!
Kalai Selvi
நல்ல திட்டம், செயல்பாட்டுக்கு வந்தால் நன்று. வேலை மட்டுமே வாழ்க்கை இல்லை, குடும்பம், உறவுகள், பயணம், உலகம் என நம்மை புதுப்பித்துக்கொள்ள உதவும்.
Karthik Mathialagan
அப்படியே செயல்படுத்தப்பட்டாலும் இந்தத் திட்டங்கள் எல்லாம் ஒயிட் காலர் வேலைகளுக்கு மட்டுமே. எளிய மக்களின் உழைப்புச் சுரண்டலுக்கான தீர்வை பற்றிய பேச்சுகூட இங்கு இருப்பதில்லை.
Jp Ilangumaran
இந்தியா சனத்தொகையில் முன்னணியில் உள்ள நாடு. மனிதவளம்தான் நம் பலம். அதை முதலீடு செய்யாமல், ஓய்வுக்கான திட்டங்கள் எதற்கு? ஏற்கெனவே வருமானம் போதாமை உள்ளிட்ட காரணங்களால் ‘மூன்லைட்டிங்’ பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள், வேலையுடன் பார்ட் டைம் வேலை, வேலையுடன் ஏதாவது ஒரு சுயதொழில் என ஓயாத உழைப்பில் வேகம் கொண்டுள்ள இந்தியர்களுக்கு, தேவை வேலைவாய்ப்புதான் ஓய்வு அல்ல.
Senthil Kumar
இது வளர்ந்த நாடுகளுக்குப் பொருந்தும். இந்தியாவில் நிறுவன முதலாளிகளுக்கு ஆண்டான் அடிமை மனநிலை உள்ள வரை இதற்கான முன்னெடுப்பு சாத்தியமில்லை.
Saravana Kumaran
Companies Mind Voice: உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு இருந்தாதானடா இதெல்லாம் யோசிப்பீங்க!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு... உங்கள் அனுபவம் என்ன?
கடந்த இரண்டு நாள்களில் சுமார் 26 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுன்டர்களில் குவிந்த கூட்டம், கூடுதல் கவுன்டர்கள் கோரிக்கை, சர்வர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை, ஊழியர்கள் நுகர்வோரை நடத்திய விதம் குறித்த உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...
Ajmal Khan N S @AjmalKhanNS1
நானாக ஆன்லைனில் முயன்றபோது, அந்த எண்ணுக்கு ஆதார் எண் இணைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதை மின்வாரிய ஊழியர் என்னிடம் போன் செய்து கேட்டு தெளிவு பெற்று சரி செய்து இணைத்துவிட்டார். சிறந்த சேவை. நன்றி, பாராட்டுகள்.
Rani Kannan @RaniKannan2
ஊழியர்களும் அலுவலர்களும் மிகவும் ஒத்துழைப்பு தந்தனர். வேலை சுலபமாக முடிந்தது.
Sathia Moorthi
நான் முயன்று பார்த்தேன். ஆனால் ஓ.டி.பி வரவில்லை. இதற்கு பதில், வீட்டுக்கு வீடு மீட்டர் ரீடிங் எடுக்க வரும்போது, அந்த அரசு அலுவலரே ஆதார் எண்ணை வாங்கி இணைத்து விடலாம்.
DrViswanathan Kurusangu
நான் என் ஆதார் எண்ணை, என் வீட்டில் இருந்தபடி கணினி மூலம் ஆன்லைனிலேயே இணைத்துவிட்டேன். இரண்டு
மணி நேரத்தில் அப்ரூவல் தகவல் வந்தது. மின் கட்டணம் ஆன்லைன் வழியாகச் செலுத்திவிட்டேன். Good.
Subbiah Arumugam
இரண்டு நாள்களாகியும் ஆதார் இணைக்கப்பட்டதற்கு
எனக்கு ஒப்புதல் வரவில்லை.
Saam Raaj
வீட்டிலிருந்தபடியே என் மொபைலில் 2 நிமிடங்களில் முடிந்தது வேலை. 2 நாள்களில் அப்ரூவ்ட் எஸ்.எம்.எஸ் வந்துவிட்டது.
revathi.reva94
கூட்டம் இல்லை. எளிமையான நடைமுறை. இதுவரை இணைக்காதவர்கள் செய்துவிடுங்கள்.