
#Avaludan
உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...
பொங்கல் பரிசு... நீங்கள் சொல்வது என்ன?
தமிழக அரசு கடந்த தைப்பொங்கலுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது. இந்நிலையில், வரவிருக்கும் தைப்பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பணமாக வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. `அதற்கான வங்கிக் கணக்கை தொடங்குவதில் சிரமம் உள்ளது’, ‘பணத்தை நேரடியாக வழங்க வேண்டும்’, ‘தொகுப்பே வழங்கலாம்’ எனப் பல கருத்துகள் நிலவிவருகின்றன. இதில் உங்கள் எதிர்பார்ப்புகள், கருத்துகள், ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...

பார்த்தசாரதி
சென்ற முறை பொருள்களாகக் கொடுத்ததால் பொங்கல் விற்பனையை நம்பியிருந்த சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதோடு தேவையில்லாத பொருள்களையும் வாங்க நேர்ந்தது. பணமாகக் கொடுத் தால் அந்த சிக்கல்கள் இல்லை.
Sathia Moorthi
சென்ற முறை வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பொங்கல் பரிசு பெற பெரும்பாடுபட்டு ரேஷன் கடைக்கு வந்த காட்சிகளைப் பார்த்தோம். எனவே, வயோதிகம், உடல் முடக்கம் காரணமாக நேரடியாக வந்து பணத்தை பெற்றுக்கொள்ள இயலாதவர்களுக்கு, அவர்கள் வீடுகளுக்குச் சென்று கொடுக்கலாம்.
Saleem A
பொருளாகக் கொடுத்தபோது சில இடங்களில் தரம் குறித்த புகார்கள், சில இடங்களில் ஊழல் குறித்த புகார்கள் எழுந்ததைப் பார்த்தோம். எனவே, அந்தத் திட்டத்தை கைவிட்டு பணமாகக் கொடுக்க முடிவெடுத் திருப்பது வரவேற்கத்தக்கது.
banumathyak
குறுகிய காலத்துக்குள், வங்கிக் கணக்கு இல்லாத அனைத்து குடும்ப அட்டைதாரர்களையும் வங்கிக் கணக்கு தொடங்க வைப்பதில் சிக்கலும் சாத்திய மின்மையும் நிறைய உள்ளன. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் கிராமத்தினர். எனவே, நேரடியாகப் பணத்தைக் கொடுக்கலாம்.
kamalakkannanmeena
குடும்ப அட்டைதாரர்கள் அனைவரையும் வங்கிக் கணக்கு தொடங்க வைத்து, பொங்கல் பணத்தை அரசு நேரடியாக அதில் செலுத்துவது நல்ல முயற்சி. ஆனால், மாநிலம் முழுக்க அதைச் செயல்படுத்த இப்போது அதற்கான கால அவகாசம் மிகக் குறைவு என்பதால், இதை ஒரு தொடர் செயல்பாடாகச் செய்து வரலாம். பொங்கல் பணத்தை வழங்க வங்கிக் கணக்கு கட்டாயம் என்பதில் தளர்வும், மாற்று ஏற்பாடும் அளிக்கலாம்.