Published:Updated:

அவளுக்கொரு வானம் - 3 - லைவ் தொடர்கதை

அவளுக்கொரு வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கொரு வானம்

கையில் இருக்கும் லத்தியைத் தரையில் சரசரவெனத் தேய்த்தவாறே அவளருகே வந்து அழைக்கிறார் ரோந்து போலீஸ்காரர்.

தன் நைட்டியின் நுனியை யாரோ இழுப்பதாக உணர்கிறாள் செம்பு. `ஐயோ… ஐயோ…’ வென்று அலறி எழுகிறாள். நைட்டியை வலுவாகப் பிடித்திழுக்கும் அந்த கரிய உருவத்தின் மிரட்டும் கண்களைப் பார்க்கிறாள். இதயம் ஏழெட்டு மடங்காகப் படபடத்துத் துடிக்கிறது அவளுக்கு. பயத்தில் சிறுநீர் வந்துவிடுவது போலிருக்கிறது.

`வொள்’ என்று சீற்றம்கொண்டு குரைத்து அவள் முன்னால் வந்து நிற்கிறது கருத்த பெரிய நாய். தன் உடலின் மீதிருந்த பால் கவிச்சி வாடைக்குத்தான் இந்த நாய் தன்னை துரத்துகிறதென உணர்கிறாள்.கையிலிருந்த துப்பட்டாவை அதன் மீது வீசிவிட்டு வேகமாக ஓடுகிறாள். மூச்சிரைத்து நின்றபின் திரும்பிப் பார்க்கிறாள். நாயைக் காணவில்லை.

இந்த ராத்திரியை நடந்து கடந்துவிட்டால் விடிந்ததும் நான்கு மணிக்கு வரும் முதல் பேருந்தில் ஏறி அம்மா வீட்டுக்குப் போய்விடலாம் என்பது இப்போதைக்கு அவள் வைத்திருக்கும் திட்டம்.

பொன்.விமலா
பொன்.விமலா

மெதுவாக நடக்கத் தொடங்கினாள். அவளுக்கு முன்பாக பெரிய நிழலொன்று, மழையில் நனைந்து மங்கலாய்த் தெரிய ஆரம்பித்தது. யாரோ வருகிறார்கள் என்று அறிந்து, நிமிர்ந்து பார்க்காமல் இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள். தூரம் போகவும் மழையில் நனைந்த முகத்தை வழித்துத் துடைத்துக்கொண்டு தரையைப் பார்க்க, அந்த நிழல் முற்றிலும் காணாமல் போயிருந்தது. நிழல் போய் விட்டதென நிம்மதிப் பெருமூச்சில் திரும்பிப் பார்க்கிறாள்.

``ஏம்மா… யாரு நீ்?’’ - சட்டென மீண்டும் திரும்புகிறாள்.

எதிர் பக்கத்திலிருந்து ஓர் ஆணின் குரல். கையில் ஏதோ தடியை எடுத்துக்கொண்டு வருகிறார். மழையில் நனைந்துகொண்டே வருபவர் யார் என்று தெரியவில்லை. அருகில் வர வர… அவர்தான் முதலில் செம்புவை அடையாளம் கண்டுகொண்டார்.

``நீ அந்தக் கெணத்தாண்ட பார்த்த பொண்ணுதானே? மணி ரெண்டாவுது. இங்க இன்னா வேல? வூட்டுக்குப் போறன்னு பொய் சொல்லிட்டு இங்க இன்னா பண்ற?’’

அவரைப் பார்த்ததும் பேரதிர்ச்சி. தன் வீட்டுக் கிணற்றருகே பார்த்த அதே ரோந்து போலீஸ்காரர்.

``வாம்மா… வாம்மா...’’

அவர் சத்தமாக அழைக்கவும் பயந்தபடியே அவரை நோக்கி நடக் கிறாள். தோளில் இருந்த குழந்தை மழையில் நனைந்து அழுதழுது, இப்போது அழத் திராணியற்று சிணுங்கிக்கொண்டிருக்கிறது. குழந்தையின் சிணுங்கலைக் கேட்டுத்தான் அவர் செம்புவை கவனித்து அவளருகே வந்திருக்கக் கூடும்.

சுற்றும் முற்றும் சூழ்ந்திருக்கும் இருளின் குரலைக் காதில் செருகிக்கொண்டே செய்வ தறியாமல் மெதுவாக அவர், அருகே நடந்து போகிறாள்.

``வாம்மா… வாம்மா… உள்ள வா... உள்ள வா...’' - சத்தமாய் அழைக்கிறார்.

அந்தக் குரலைத் தாண்டிய இன்னோர் அதிர்ச்சி, அங்கே பெயர்ப்பலகையில் காத் திருந்தது.

`காவல் நிலையம் - விஜயமல்லூர்.’

`அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியா இந்த போலீஸ் ஸ்டேஷன் ரோட்டுக்கா வந் திருக்கோம்?’- தலைச்சுற்றல் சேர்ந்து கொள்ள வும் முன்னும் பின்னுமாக அசையாமல் உறைந்து நிற்கிறாள்.

``வாம்மா… உள்ள வாம்மா...’’

கையில் இருக்கும் லத்தியைத் தரையில் சரசரவெனத் தேய்த்தவாறே அவளருகே வந்து அழைக்கிறார் ரோந்து போலீஸ்காரர். கும்மிருட்டு, சற்று மழை குறைந்த தூறல் வானம், காவல் நிலைய வாசலில் எரியும் சோடியம் விளக்குகள், அங்குமிங்குமாக அலையாமல் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இரண்டு போலீஸ்காரர்கள், தூரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் ஒன்று, மங்கலான இருட்டில் மரத்தடியில் பார்க் செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள்... இவை தவிர, போலீஸ் ஸ்டேஷனுக்கான பிரத்யேக அடையாளங் களாக வேறெதுவும் அவள் கண்ணில் படவில்லை. நான்கைந்து ரவுடிகளின் சட்டை யைப் பிடித்திழுத்துப் போவதோ, லத்தியால் அவர்களின் பட்டாப்பட்டி டிராயரின் மீது பதம் பார்ப்பதோ, புகார் கொடுக்கக் கூட்டமாய் வந்து நிற்பவர்களோ அந்த நேரத்தில் யாருமில்லாமல் போக, தோற்றப் பொலிவில்லாத ஒரு காவல் நிலையத்தைப் பார்க்கிறாள் செம்பு.

அவளுக்கொரு வானம் - 3 - லைவ் தொடர்கதை

குழந்தை நன்றாகத் தூங்கிவிட்டிருந்தது. அக்குளில் வாராகக் கிழிந்த நைட்டியை குழந்தையைக் கொண்டு மறைத்துக்கொண்டே உள்ளே நடந்தாள். ஒரே காம்பவுண்டுக்குள் இரண்டு காவல் நிலையங்கள். ஒன்று பொது வான காவல் நிலையம். இன்னொன்று அனைத்து மகளிர் காவல் நிலையம். இரண்டில் எங்கு போக வேண்டுமெனத் தெரியவில்லை. எதற்காகத் தன்னை உள்ளே அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லையே என்கிற குழப்பத்தோடு ஒவ்வோர் அடியாய் உள்ளே நடக்கிறாள் செம்பு.

``யாருய்யா இந்தப் பொண்ணு? இன்னா மேட்டரு?’’ - கான்ஸ்டபிள் ஒருவர் வெளியில் உட்கார்ந்தவாக்கிலேயே ரோந்து போலீஸ் காரரிடம் கேட்கிறார்.

``வூட்ல பிரச்னையா, இன்னா ஏது கதன்னு தெர்ல சார். கெணத்தாண்ட இருந்துச்சுன்னு வூட்டுக்கு அனுப்பிச்சி வச்சேன். இப்ப பார்த்தா ரோடு ரோடா சுத்திக்கினு கீது சார். இன்னா ஏதுன்னு கேளுங்க.’’

``இன்னாமா இன்னா? கையில கொழந்தய வச்சினு நடுராத்திரில எங்க சுத்தினு கீற?’’ - கான்ஸ்டபிள் சத்தம் கூட்டுகிறார்.

அடுத்த பொய்க்கு எங்கே போவதென்று தெரியாமல் தவிக்கிறாள் செம்பு.

``யோவ்… உள்ள கூட்டினு போயி இன் னான்னு கேளுய்யா...’’

முன் பக்கத்திலிருந்த பொது காவல் நிலை யத்துக்குள் அழைத்துப் போகிறார்கள்.

உள்ளே ஒரு எஸ்.ஐ உட்கார்ந்திருக்கிறார்.

``சார், இந்தப் பொண்ணு கையில கொழந்தை யோட ரோடு ரோடா சுத்தினுகீது சார். சண் முகம் ரோந்து போறப்ப பாத்துருக்காப்டி’’ - கான்ஸ்டபிள் செம்புவைக் கைகாட்டி அவரிடம் தகவல் சொல்கிறார்.

``யாருமா நீ?’’ - ஒரே வாக்கியம்தான். ஓங்கிய அந்தக் குரலில் அறை முழுக்க அதன் அதிர் வலைகள். மீண்டும் சிறுநீர் வருவது போலிருக் கிறது. பயத்தால் மட்டுமல்ல. நிஜமாகவும் அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறாள்.

காவல் நிலையம் வரை வந்தாகிவிட்டது. இந்த ராத்திரியில் வீட்டைவிட்டு வெளியில் வந்த உண்மையான காரணத்தைச் சொல் லாமல் போனால் உலகம் நாளை எழுதப் போகும் கதைகள் பல நூறு வடிவங்களாகி யிருக்கும் எனப் பதறுகிறாள்.

அவளுக்கொரு வானம் - 3 - லைவ் தொடர்கதை

``இந்தப் பாரும்மா… உண்மையை சொல்லிடு. உன் வீடு எங்க இருக்கு?’’

``……...’'

``உன் வூட்டுக்காரன் எங்க இருக்கான்?’’

கண்கள் மிரண்டு பின் வாரை வாரையாக அழுது துடைக்கிறாள்.

``சார், அவர் வீட்ல இருக்காரு.’’

``நீ எதுக்கு நடுராத்திரில தனியா வந்தே..? யார் கூட வந்தே?’’

``நான் மட்டும்தான் சார்.’’

``ஏம்மா... புருஷனை வுட்டுட்டு கொழந்தைய தூக்கினு எதுக்கு தனியா வந்தே… கொழந்த யார்து? வூடு எங்கருக்கு?’'

ஒரே கேள்வியை ஆளாளுக்குத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். கேள்வியின் பொருளும் தோரணையும் மெதுமெதுவாக மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் பொருள், `எவன் கூட இந்த ராத்திரியில் தனியா சுத்திக் கிட்டு இருக்கே’ என்பதாகப் போய் முடிந்தது.

``அடிச்சு தொரத்திட்டார் சார். எங்க போற துன்னு தெரியாம சுத்திட்டு இருக்கேன்’’ - சொல்லும்போதே விம்மி அழுகை.

``வூட்ல சண்டையா? அதுக்கேன் சுத்திக் கிட்டு இருக்க, அக்கம்பக்கம் யார் வீட்லனா போய் சொல்ல வேண்டியதுதானே?’’

``சொன்னாலும் யாரும் உதவ மாட்டாங்க. அவர பார்த்தாவே எல்லாரும் பயப்படுறாங்க.’’

அதுவரை உக்கிரமாகக் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த எஸ்.ஐ நக்கலாய்ச் சிரிக்க ஆரம்பித்தார்.

``அப்டியாப்பட்ட அப்பாடக்கரா அவன்? யார் அவன்? இன்னா பண்றான்?’’

``அது…’’

``சொல்லுமா. அதான் நாங்க இருக்கோம்ல... சும்மா சொல்லு’’ - அவன் பெயரைக் கேட்பதி லேயே ஆர்வம் காட்டுகிறார்கள். பக்கத்தில் தான் அனைத்து மகளிர் காவல் நிலையம் இருக்கிறது. அங்கே அனுப்பாமல் இங்கேயே வைத்துக்கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டு குடைந்தெடுத்துக் கொண் டிருக்கிறார்கள். சொல்லியே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் நிற்கிறாள்.

``சேகர்.’’

``சேகரா… எந்த சேகரு?’’ - ஏதோ பரிச்சய மான பெயராகத் தெரியவும் மீண்டும் கேட் கிறார்.

``என்ன வேலை செய்றாப்டி?’’

``ரியல் எஸ்டேட்.’’

``பஜார்ல செருப்புக்கடை வச்சிருந்த சேகரா?’’

``ஆமா.’’

செம்பு சொல்வதைக் கேட்டதும் அந்த எஸ்.ஐ, ரோந்தைப் பார்க்கிறார். அவரை வைத்துக்கொண்டே விசாரிப்பதா, அவரை அனுப்பிவிட்டு விசாரிப்பதா என்று புரியாமல் செம்புவையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

``சேகரு பொண்டாட்டியா நீயி? பார்த்தா அப்டி தெரியலையே…’’ - நாய் கடித்ததில் கால்புறம் கிழிந்த நைட்டியும் தலைவிரி கோலமுமாய் இருப்பதைப் பார்த்தால் நம்பு வதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.

``நல்லா சொல்லுமா… நீ சேகரு பொண்டாட் டியா? இல்ல… உன்ன வச்சினு கீறாரா?’’

`இன்னாரின் மனைவி என்பதற்கு இப்போ தைக்கு என்ன ஆதாரமிருக்கிறது? அவன் அடித்து வீங்கிய கன்னங்களைக் காட்டுவதா? கை கால்களிலிருக்கும் சிராய்ப்புகளைக் காட்டுவதா? பிரசவம் நடந்தேறி இரண்டு மாதங்களாகியும் ரணம் ஆறாத பெண்ணுறுப் பின் வலியைச் சொல்லிக் காட்டுவதா? எதைச் சொல்லி இவர்களை நம்ப வைப்பது? இன் னாருக்கும் இன்னாருக்கும்தான் திருமணம் நடந்தது என்கிற ஆதாரத்தை எப்போதும் தூக்கிக்கொண்டு அலையவா முடியும்?’ மனம் ஏதேதோ யோசிக்க அங்கேயே மயங்கி உட்காருகிறாள்.

`` இதென்னய்யா வம்பா போச்சு. இது சரிபட்டு வராது. ஆல் வுமன் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய்யா’’ என்று ரோந்திடம் கத்து கிறார்.

‘`எந்திருமா எந்திரு...’’ என உட்கார்ந்தவளை விரட்டி எழுப்புகிறார்கள். இருநூறு மீட்டரில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துப் போகிறார்கள்.

``சேகர் யார்னு தெரிதாடா?’’ - பக்கத்திலிருந்த ஏட்டிடம் கேட்கிறார் எஸ்.ஐ.

``தெரியும்ணே… போன மாசம் லேடி டிராஃபிக் போலீஸ் மேல கைவச்சுட்டு தர்ம அடி வாங்குனானே, அவன்தானே?’’

``அட நீ வேற. அந்தம்மா… அப்டிதான் ஊரெல்லாம் சொல்லிட்டுத் திரியுது. ஆனா, தர்ம அடியும் வாங்கல, கிர்ம அடியும் வாங்கல.'’

லேடி டிராஃபிக் போலீஸுக்கு அன்று நடந்த கதையைச் சொல்வதில் ஆர்வம் காட்டினார் எஸ்.ஐ.

``திர்ணா வருதுன்னு காந்தி தெருவுல நிக்கச் சொல்லி ஒரு லேடி போலீஸ டிராஃபிக் கன்ட்ரோலுக்கு நிக்க வச்சிருந்தோம்ல. அந்த வழியா இந்த சேகரு ஓவரு ஸ்பீட்ல போவவும், அந்தம்மா நிக்க வச்சு இன்னா ஏதுன்னு கேட்டிருக்கு. தலைவன் அன்னிக்கு மப்புல இருந்துருக்கான் போல. அப்டியே மாரு மேல கைய வச்சு அந்தம்மா சட்டையை புட்ச்சு இழுத்துருக்கான். அதுவும் இவன வீசா இசுத்து தள்ளிவுட்டுருக்கு. ரெண்டு பட்டன் பிச்சிகினு ரோட்ல ஜனமெல்லாம் பாக்குற மாறி அசிங் கமா பூட்டுகீது. ஏற்ரா வண்டிலனு ஸ்டேச னுக்கு இஸ்த்துனு வந்துச்சு.’’

``அப்பால தர்ம அடி வாங்கிக் கட்டினு இருப்பானே...’’

`` அட… நீ வேற. அவன் ஸ்டேசனுக்கு வரது காண்டி, சனியன் புட்ச்ச ஒருத்தன் பொட்டி எடுத்துன்னு வந்து முன்னாடி நிக்கிறான். சொளையா ஒரு லட்சம். அந்தம்மாவுக்கு குடுக் கச் சொல்லிட்டு போயினே இருந்துட்டான்.’’

``அந்தம்மாவும் வெக்கமே இல்லாம வாங்கிக் கிச்சாண்ணே?’’

``பின்ன! துட்டுறா… துட்டு… உட்ருமா அந்தம்மா. துட்டும் வாங்கிக்கினு, சேகரை அட்ச்சேன்… சேகரை அட்ச்சேன்னு கதை வுட்னு கீது’’ - சேகர் புராணத்தைப் பாடினார் எஸ்.ஐ.

``ஸ்டேஷனுக்கு மொய் எழுதுறதுதான் அவன் வேலையே. நல்லா வசமா மாட்டிக் கினான்ல இப்ப.’’

``அவன் பொண்டாட்டியாண்ணே இது? பார்த்தாவே பாவமா இருக்கு...’’

``ஆல்வுமன் ஸ்டேசன்ல சொல்லி அவன் மேல எஃப். ஐ.ஆர் போட்ற சொல்லணும்ணே...’’

``அட நீ வேற. போட்டுகீட்டு வைக்கிறதுக் குள்ள பேரம் பேசிறணும்டா...’’

எஸ்,ஐ-யும் கூட வந்த ஏட்டும் செம்பு போன வழியைப் பார்த்துக்கொண்டே, சேகர் புராணத்தை இன்னும் கொஞ்சம் எடுத்து விட்டுக்கொண்டிருந்தார்கள்.

அனைத்து மகளிர் காவல்நிலையம். பக்கத்தில் இரண்டுக்கு இரண்டடியில் சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது. உள்ளே டேபிள் மீது தலைவைத்துப் படுத்த மாதிரி, யூனிஃபார்மில் ஒரு பெண் காவலர் படுத்துக் கிடந்தார். செம்புவுடன் வந்த காவலர்கள் அவளை உள்ளே போகச் சொல்லிவிட்டு அங்கிருந்து திரும்பிப் போனார்கள்.

அவள் உள்ளே போகவும், தோளில் தூங்கியிருந்த குழந்தை சிணுங்கி அழவும், அந்தப் பெண் காவலர் கண் விழித்துக் கொண்டார். அவர் சட்டையில் `அனுபமா’ என்று பெயர் இருந்தது. செம்புவைப் பார்த்து கண்களை நிமிட்டியபடியே, ``யாருமா… என்ன வேணும்?’’ எனக் கேட்கிறாள். முன்பு அந்தக் காவல் நிலையத்தில் கேட்ட அதே கேள்விகளுக்கு, அதே பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். நடுவே ஒரு போன் ஒலிக்கிறது. அனுபமா எடுத்துப் பேசவும், சேகர் புராணத்தை மறுபடியும் ஒருமுறை அனுபமாவிடம் போனில் சொல்கிறார் அந்த எஸ்.ஐ... கேட்டுக்கொள்கிறார்.

``ஆங்… ஓகே சார்… என்னன்னு கேக்கறேன்.’’

குழந்தை இப்போது பசிக்கு சத்தமாக அழத் தொடங்கியிருந்தது.

``மேடம்… இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும் இங்க தங்கிட்டு காலைல எழுந்து போயிடுறேன் மேடம்.’’

குழந்தையின் அழுகையை நிறுத்துகிற மாதிரி அதைத் தோளில் போட்டு இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டே கெஞ்சிக் கொண்டிருக்கிறாள் செம்பு.

எஸ்.ஐ லேண்ட்லைன் போனை எடுத்து ஒரு நம்பரை டயல் செய்கிறார்.

அறையில் ஆங்காங்கே ரத்தத் துளிகள். பயன்படுத்திக் கிழிந்த ஆணுறை ஒன்று கட்டிலுக்குப் பக்கத்திலிருக்கிறது. ஹாலின் சோபாவுக்கு இடையில் சிக்கியிருந்த செல் போன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நல்ல போதையில் தன் அறையில் தூங்கிக்கொண்டிருந்த சேகர், மெள்ள அசைகிறான்.

- தொடரும்...