
தமிழகத்துக்குள் இடதுகாலை எடுத்துவைத்திருக்கும் `கோவிட் 19’ வைரஸைப் பார்த்து பயப்பட வேண்டுமா அல்லது போராட வேண்டுமா...
போன வாரம் வரை அது சீனச் செய்தி - இத்தாலிச் செய்தி. இன்று, நம் தெருவுக்கு வந்துவிட்ட செய்தி.
இன்று நம்மால் பஸ்ஸில் இருமவோ தும்மவோ முடியாது. சாதாரண சளி, காய்ச்சல் என்றாலும் இனமறியா ஒரு பயம் உள்ளுக்குள்ளே ஒட்டிக்கொள்கிறது. `கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியிருக்கிறது’ என ஃப்ளாஷ் நியூஸ் பயமுறுத்தும் நேரத்தில், `இது ஒரு சாதாரணத் தொற்று... இதற்குப் போய் ஏன் இவ்வளவு பதறுகிறீர்கள் நீங்கள்?’ போன்ற குரல்களையும் கேட்க முடிகிறது.

‘கைகழுவுங்கள்... மாஸ்க் அணியுங்கள்’ என்ற அளவிலிருந்த விழிப்புணர்வு பிரசாரங்கள், ‘சமூகத்திலிருந்து விலகியிருங்கள்... வீட்டிலிருந்து வேலை பாருங்கள்’ என்ற அளவுக்கு வந்திருக்கிறது. `தமிழகம் முழுவதும் தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மார்ச் 31 வரை மூடப்படுகின்றன. `விளையாட்டு நிலையங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், கிளப்புகள், டாஸ்மாக் பார்களும் மூடப்பட வேண்டும்’ என்கிறது தமிழக அரசு.
இந்தியாவுக்குள், குறிப்பாக தமிழகத்துக்குள் இடதுகாலை எடுத்துவைத்திருக்கும் `கோவிட் 19’ வைரஸைப் பார்த்து பயப்பட வேண்டுமா அல்லது போராட வேண்டுமா... நோய்த்தொற்று தீவிரமாகி தமிழகத்தைத் தாக்கினால் அதை எதிர்கொள்ளத் தயார் நிலையில் நாம் இருக்கிறோமா?

`Covid -19 கொரோனா வைரஸ் தொற்று ஓர் உலகளாவிய பெருந்தொற்று’ என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதையடுத்து உலக நாடுகள் எல்லாம் நோய் பரவாமல் தடுக்க அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுத்தி ருக்கிறது. இந்த நெருக்கடி நிலையை ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவிதமாகக் கையாளுகின்றன.
சீனா: சீனா, நோய்த்தொற்றால் ஏற்பட்ட அபாயகரமான நிலையைத் தற்போது தாண்டிவிட்டதாக அறிவித்திருக்கிறது. Covid -19 முதலில் பரவிய வூஹான் உட்பட சில முக்கியப் பகுதிகளை முழுக்க தனிமைப்படுத்தியது சீனா. அதனால், இந்த நோய் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா, நோய் பரவிய பகுதிகளில் மக்கள் வெளியே செல்லத் தீவிரக் கட்டுப்பாடுகளை விதித்து, இரும்புக்கரம் கொண்டுதான் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.

தென் கொரியா: பள்ளிகளுக்கு, அலுவல கங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது, மக்கள் பெரும் கூட்டமாகத் திரளத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. `நோய்த் தொற்றை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதே தடுப்பதற்கான வழி’ என டிரைவ்-இன் மருத்துவமனைகளும், போர்க்கால தயாரிப்போடு 96 லேப்களும் என நோய் கண்டறிவதில் அவர்கள் காட்டிய தீவிரம், அந்த நாட்டுக்கு மிகச் சாதகமாக இருந்திருக்கிறது. ஜனவரி மாதம், 20-ம் தேதி அங்கு தொற்று இருப்பதாக முதலில் கண்டறியப்பட்டது. மார்ச் மாதம் 13 அன்று நோயின் பாதிப்பு குறைந்ததாகத் தெரிகிறது, புதிதாய் யாருக்கும் அங்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை. ஆக, தென்கொரியா நோய்த் தடுப்பில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது.
இத்தாலி: உலக அளவில் Covid -19 வைரஸ் தொற்றைத் தடுப்பதில் தோல்வியுற்றிருக்கிறது இத்தாலி. ஆரம்பகாலத்தில் மிக கவனக்குறைவாக இவ்விஷயத்தைக் கையாண்டதில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மருந்து, மளிகைப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் தவிர மற்றவை எல்லாம் மூடப்பட்டுள்ளன. மக்களின் இயக்கம் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் பட்டுள்ளது. `மருத்துவச் சேவையில் சிறப்பான கட்டமைப்புள்ள நாடு’ என்று சொல்லப்பட்ட இத்தாலியில் அதிக நோயாளிகள், குறைவான மருத்துவர்கள் என நிலைமை மோசமடைந்தி ருக்கிறது. மருத்துவர்கள் எந்த உயிரைக் காப்பாற்றுவது எனத் தேர்ந்தெடுத்து சிகிச்சை யளிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டி ருக்கிறார்கள், இதனால் வயதானவர்கள், நிமோனியா காய்ச்சல் வந்தவர்கள் என பிழைக்க வாய்ப்பு குறைவான பலரை சிகிச்சையின்றி திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது இத்தாலியில். அங்கு ஒரே நாளில் 368 பேர் கொரோனாவுக்கு பலியானது துயரத்திலும் துயரம்.

அமெரிக்கா: அமெரிக்காவின் நிபுணர்கள், `உடனடியாக அமெரிக்கர்கள் Covid -19-க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படவில்லையெனில் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படும்’ என்கின்றனர், ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், `நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’ என்கிறார். அதேசமயம் அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்து, சுமார் ஐம்பது மில்லியன் டாலரை நோய்த் தடுப்புக்காக அளித்திருக்கிறார் ட்ரம்ப். அதன் பிறகே நோய்த் தொற்று இருக்கிறதா என்பதற்கான பரிசோதனைகள் மக்களிடையே தீவிரப்படுத்தப் பட்டிருக் கின்றன. `மருத்துவமனைகள், சுகாதாரத்துறை ஆகியவை தயார் நிலையிலிருந்தாலும், முன்கூட்டியே எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளில் தவறியதால், அமெரிக்கா பெருமளவு பாதிப்படையும்’ என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கனடா: கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே வேளையில், Covid -19 தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயலாற்றிவருகிறது கனடா. நோய் குறித்து விழிப்புணர்வு இருக்கும் அதே சமயத்தில், இந்த நோய் குறித்து பெரும் பீதியோ, அச்சமோ இல்லாமல், பதற்றமின்றி கனடா இதைக் கையாள்வதாக ஓர் அறிக்கை தெரிவித்திருக்கிறது. தேசம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் மற்ற நாடுகளைப்போல இல்லாமல், வெளிநாட்டுப் பயணிகள் கனடாவுக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படவில்லை, மாறாக, உடனடியாக அவர்களைச் சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக, இந்தச் சூழலில் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். மக்களின் வாடகை, அத்தியாவசிய பொருள்கள் தேவை ஆகியவற்றை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

யுனைடெட் கிங்டம் UK: மற்ற நாடுகளைப்போல அல்லாமல் லண்டன் இந்தப் பிரச்னையை வித்தியாசமாகக் கையாள்கிறது. மக்கள் கூடத் தடையில்லை,. பள்ளி , கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறையில்லை. மாறாக, Covid -19 அறிகுறி உள்ளவர்கள் அவர்களாகவே வீட்டில் தங்களை ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. `தனிநபர் ஒழுக்கத்தால் மட்டுமே இந்த நோயை எதிர்க்க முடியும்’ என்று அறிவுறுத்திவருகிறது பிரிட்டன்.

ஜப்பான்: Covid -19 வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதும், இயல்பிலேயே சுகாதார விரும்பிகளான ஜப்பானியர்கள் மத்தியில், நோய் தடுப்பு முகமூடி, சானிடைஸர் போன்ற பொருள்களின் தேவை மிகவும் அதிகரித்தது. `இந்த நோய்த் தொற்று குறித்து அதிக அச்சத்தில் இருப்பது ஜப்பானியர்கள்தான்’ என்கிறது ஓர் ஆய்வு. வெளிநாட்டவர்களுக்கு பயணத்தடை, விடுமுறை உள்ளிட்டவை தவிர மற்ற விஷயங்களில் ஜப்பான் மிகவும் பின்தங்கியிருப்பதாகவே உலக நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. நோய் கண்டறிதல், நோய்த் தடுப்பு ஆகிய இரண்டிலும் ஜப்பான் சுகாதாரத்துறை அவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதாகவே தெரிகிறது.
மேற்கண்ட சர்வதேச அனுபவங்களில் இருந்து சிறந்த படிப்பினைகளை இந்தியா கற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.
‘‘சமூகத்திலிருந்து விலகியிருப்பதுதான் நோய்த்தொற்றை விலக்கும்’’
கொரோனா வைரஸ் ஆய்வாளர், பவித்ரா வெங்கடகோபாலன்
நுண்ணுயிரியலில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து, முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வெங்கடகோபாலனிடம் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறித்தும், அதைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றியும் பேசினோம்.

``கொரோனாவைத் தடுக்க முக்கியமான தேவை சுயசுத்தம்தான். காரணம், பெரும்பாலான தொற்றுகள் நம்முடைய கைகளிலிருந்துதான் பரவுகின்றன. அடிக்கடி ஹேண்ட் வாஷ், ஹேண்ட் சானிடைஸர் போன்றவற்றை உபயோகிப்பதால் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். ஆனால், அது மட்டுமே வைரஸ் பரவுதலைத் தடுத்துவிடாது. கொரோனா பரவுதலை நம்மால் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை. வேண்டுமானால் அதன் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது சுயசுத்தம் மட்டுமல்ல. `Social Distancing’ எனப்படும் சமூகத்திலிருந்து நம்மை நாமே முடிந்தவரை விலக்கிக்கொள்வது. உதாரணமாக, பொதுவெளிகளில் நேரம் செலவிடாதிருப்பது, கூட்டத்தோடு கலக்காமல் இருப்பது, சளி, இருமல் வந்துவிட்டால் வீட்டோடு அடைபட்டுக்கொள்வது போன்றவையெல்லாம் இந்தப் பட்டியலில் வரும். இதன் ஒரு பகுதிதான் `வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனப்படும் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது. வாய்ப்பிருக்கும் நிறுவனங்கள், விருப்பப்படும் பணியாளருக்கு அந்த ஆப்ஷனைத் தருவது மிகச்சிறப்பு.
‘‘சமூகத்திலிருந்து விலகியிருப்பதுதான் நோய்த்தொற்றை விலக்கும்’’பவித்ரா வெங்கடகோபாலன்
எந்தவொரு தொற்றுமே, அது ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்குப் பரவுகிறது என்பதை வைத்துத்தான் அது எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பது நிர்ணயிக்கப்படும். அப்படிப் பார்த்தால், சாதாரண ஃப்ளூவின் ஆர்.நாட் (Ro - பரவுதலைக் குறிப்பிடும் எண்), 1.2 முதல் 1.3. அதாவது, சாதாரண ஃப்ளூவானது ஒருவரிடமிருந்து இன்னும் ஒருவருக்கு மட்டும் பரவக்கூடிய அளவுக்கு வீரியம்கொண்டது. சில நேரங்களில் சூழலைப் பொறுத்து கூடுதலாகப் பரவலாம். இந்த ஆர்.நாட் அளவு ஒன்றுக்கும் குறைவாக இருந்தால், அந்தத் தொற்று சீக்கிரத்தில் அழிந்துவிடும். இதுவே 1.3 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் தீவிரம் அதிகமாகும். கோவிட் - 19 கொரோனா வைரஸின் ஆர்.நாட் எண் - 1.3 முதல் 2.8. அதாவது, ஒருவரிடமிருந்து மூன்று பேர் வரை இந்த வைரஸ் பரவக்கூடும். அவர்களிடமிருந்து அடுத்தடுத்து மூவருக்குப் பரவலாம்.
வைரஸ்களின் தன்மையே பாதிக்கப்படுபவரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து தாக்கும் வீரியத்தின் அளவு மாறுபடும் என்பதுதான். அந்த வகையில் இப்படி பரவிக் கொண்டே போகும் கொரோனா, ஒவ்வொரு முறையும் தன் வேகத்தை அதிகப்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்புள்ளது. இந்த வேகத்தை, ஹேண்ட் வாஷ், சானிடைஸர் போன்றவற்றின் மூலம் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. கூடுதலாக, சமூகத்திலிருந்து நம்மை நாமே விலக்கிக்கொள்வதன் மூலமாகக் கட்டுப்படுத்த முடியும்.
இன்றைய தேதிக்கு கோவிட் - 19 நோயை குணப்படுத்தவோ, அதைத் தடுக்கவோ முழுமையான அல்லது நேரடியான மருந்துகள் நம்மிடையே இல்லை. மருந்துகள் வருவதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை வருடமாவது ஆகலாம்.
ஆகவே, கொரோனாவை வருமுன் தடுப்பதுதான் மதி. வருமுன் தடுக்க, சமூகத்திலிருந்து உங்களை நீங்களே விலக்கிக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழி” என்றார் அவர்.
‘‘வரலாற்றிலேயே முதன்முறையாகக் கட்டுப்படுத்தப்படக் கூடிய நோய்த்தொற்று கோவிட் - 19’’
தொற்றுநோயியல் மருத்துவர் ராமசுப்ரமணியம்
``இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டிப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், கொரோனாவை இப்போதும்கூட நம்மில் பெரும்பாலானோர் அலட்சியத்துடனேயே அணுகிவருகிறோம். சுய சுத்தம் குறித்து, இன்னும்கூட அதிக அளவு விழிப்புணர்வு இங்கே தேவைப்படுகிறது. அது இல்லாதபட்சத்தில் சீனா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலை இங்கும் ஏற்படலாம்.

`நம் நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கிறது’ எனப் பலரும் சொல்வதைக் கேட்க முடிகிறது. உண்மையில், இந்த எண்ணிக்கையில் விழித்தாலொழிய நம்மால் மேற்கொண்டு இந்த நோய் பரவுதலைத் தடுக்க முடியாது என்பது மட்டுமே நிதர்சனம்.
மேலே குறிப்பிட்டதைப்போல, எண்ணிக்கைகளை உதாசீனப்படுத்தியதால் பின்விளைவுகளைச் சந்தித்த நாடுகள் பல நம் கண்முன்னே இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நாடு கத்தார். 2020, மார்ச் 10 இரவில் அங்கு 24 என்றிருந்த எண்ணிக்கை, அடுத்த நாள் விடியலில் 262 ஆக அதிகரித்தது. அந்த அளவுக்கு ஒரே இரவில் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றபோதிலும், இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது. அது, `எண்ணிக்கை நிலையானதாக இருக்காது’ என்பது. ஆகவே, `இங்கு எண்ணிக்கை நூறுதான்’ என்ற அலட்சியத்தை விட்டுவிட்டு, சோப்பால் அடிக்கடி கை கழுவுவது, தும்மல்-இருமலின்போது மூக்கு மற்றும் வாய்ப் பகுதிகளை மூடிக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
‘‘வரலாற்றிலேயே முதன்முறையாகக் கட்டுப்படுத்தப்படக் கூடிய நோய்த்தொற்று கோவிட் - 19’’ராமசுப்ரமணியம்
இன்னொரு முக்கியமான விஷயம், கொரோனா உயிர்க்கொல்லி நோயல்ல. ஆகவே பீதியடையத் தேவையில்லை. கொரோனாவில் உயிர் பயமும் தேவையில்லை. இதுவரை உலகளவில் 1,70,000 பேருக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77,000 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் தோராயமாக 6,500 பேர். இதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், இறப்பு விகிதம் 2-3 சதவிகிதம்தான். ஆகவே உயிர் பயம் இங்கு வேண்டாம்.
அதேபோல, கொரோனா மிகத் தீவிரமான பாதிப்பை ஒருவருக்கு ஏற்படுத்துவதில்லை. இன்றைய தேதிக்கு, `பாதிப்பு நிலையிலுள்ள எண்பதாயிரத்து சொச்சம் பேரில், 80 சதவிகிதம் பேருக்கு முதல்நிலை பாதிப்புதான்’ என்பது புள்ளிவிவரம் தரும் அறிக்கை. முதல்நிலை என்பது சாதாரண இருமல், தும்மல், காய்ச்சல். இவர்கள் எல்லோரும் முறையாக மருத்துவ ஆலோசனை பெற்று, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டால், பிரச்னை நிச்சயம் சரியாகிவிடும். அப்படியல்லாமல், பொது இடங்களுக்குச் செல்வது, மக்களோடு புழங்குவது, கூட்ட நெரிசலில் இருப்பது என இருந்தால், அவர்களோடு சேர்த்து கூட்டத்திலிருக்கும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும். விளைவு, அங்கிருக்கும் அனைவருமே நோயாளிகளாகிவிடுவார்கள்.
மொத்தத்தில், சாதாரண சளி, காய்ச்சலோடு தொடங்கும் இந்த கோவிட்- 19 பாதிப்புக்கு தேவைப்படுவதெல்லாம் முறையான மருத்துவ ஆலோசனையும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் நிதானமும் மட்டும்தான்.
கோவிட் - 19 மட்டுமல்ல... இந்தச் சூழலில் உங்களுக்கு எந்த வகைத் தொற்று ஏற்பட்டாலும், அருகிலுள்ள மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்; ஆலோசனை பெறுங்கள்; அவரின் அறிவுரையை அப்படியே கேட்டுப் பின்பற்றுங்கள். முக்கியமாக, உங்கள் பிரச்னை சரியாகும் வரை உங்களை நீங்களே வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். அந்தச் சூழலில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளோடு நெருங்கிப் பழகாதீர்கள்.
நோய்வாய்ப்பட்டவர்கள் என்றில்லை, பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கைக்காக அடுத்துவரும் ஓரிரு மாதங்களுக்குப் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்த்திடுங்கள். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், கோயில் திருவிழாக்கள், விசேஷங்கள் போன்றவை அனைத்தையும் தவிர்த்திடுங்கள். உங்கள் குழந்தைகளை எப்போதும் வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் சுத்தத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். மேற்சொன்ன அனைத்தையும் குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரையாவது கட்டாயம் பின்பற்றி வாருங்கள்.
`வரலாற்றிலேயே முதன்முறையாகக் கட்டுப்படுத்தப்படக்கூடிய நோய்த்தொற்றாக இந்த கோவிட் - 19 கொரோனாதான் இருக்கிறது’ என உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் கூறியுள்ளதை இங்கு நான் அடிக்கோடிட விரும்புகிறேன்.
கொரோனா குறித்து அதீத பயமும் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்!”
‘‘ஏப்ரல் மாதத்தின் இடையில் பிரச்னை தீவிரமாகும்’’
மருத்துவர் மயிலன் சின்னப்பன்
`` `கொரோனாவில், டெங்குவைவிட மரண விகிதம் குறைவு’ என்பதைச் சொல்லி, `பதற்றத்தைக் குறையுங்கள்’ எனக் கூறி மக்களிடையே அலட்சியப்போக்கு வெகுவாக பரப்பப்படுகிறது. ஆம், கொரோனாவில் மரண விகிதம் குறைவுதான். ஆனால், டெங்குவைவிடப் பன்மடங்கு வேகத்தில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் தொற்று பாதிப்பு இது.

அதற்கு, எல்லாவற்றையும்விடப் பிரதானமாக நாம் செய்ய வேண்டியது சமூகத்திலிருந்து நம்மை நாமே சற்று விலக்கிக்கொள்வது மட்டும்தான். இதில் குழந்தைகள் மற்றும் முதியோர் கட்டாயம் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் வைரஸின் மிக எளிதான தொற்று இலக்குகள்.
நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட தினங்களில் மிக மிக அதிகமாக மாறும். நிறைய நோயாளிகளை வைத்துக்கொண்டு, அவர்களை ஒருங்கிணைத்து மருத்துவம் செய்வதென்பது இன்றைய தேதிக்குச் சாத்தியமில்லாதது. வல்லரசு நாடான அமெரிக்காவே மக்கள் எண்ணிக்கை அதிகரித்தபோது மருத்துவம் பார்க்கத் திணறியது. அத்தகைய பிரச்னையைக் கையாள, சீனா ஆயிரம் பேர் தங்கும் வகையில் புதியதொரு மருத்துவமனையையே உருவாக்கியது. நம் நாட்டில் அதெல்லாம் சாத்தியப்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஆனால், இந்த விஷயத்தில் நாம் அரசையும் முழுமையாக குறைபட்டுக்கொள்ள முடியாது. நோயின் தாக்கமும், அதன் வீரியமுமே பிரச்னைக்கான முதன்மைக் காரணங்கள். எனில், `எப்படித்தான் சூழலைக் கையாள்வது’ என்றால், சுய ஒழுக்கம் மூலமாக நோய் பரவுதலைக் கட்டுக்குள் கொண்டுவந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதுதான். சமூகத்திலிருந்து அனைவரும் விடுபட்டு அடுத்த ஒரு மாதத்துக்கு வாழும்பட்சத்தில் ஏப்ரல் இறுதிக்குள்ளோ, மே முதல் வாரத்திலோ நாம் இயல்பான சூழலை எட்டிவிடலாம்.
‘‘ஏப்ரல் மாதத்தின் இடையில் பிரச்னை தீவிரமாகும்’’மயிலன் சின்னப்பன்
தீவிரநிலை ஏற்படாமலிருக்க, வைரஸ் பரவுதலை நாம் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் காலம் கடந்துகொண்டே இருக்கிறது. இனியாவது, விழியுங்கள் எல்லோரும்” என்றார் சற்றுக் கடுமையாகவே.
‘‘அவசர நிலையாகக் கருதி அரசு தயாராக வேண்டும்’’
தொற்றுநோயியல் மருத்துவர் அப்துல் கஃபூர்
``இந்தியா மக்கள்தொகை அதிகம்கொண்ட நாடு. இங்கிருக்கும் அனைத்து மக்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பது சவாலான காரியம். ஆனாலும், அதை ஆரம்பநிலையில் கண்டறிய உதவும் சோதனைகள் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போதுமான அளவில் செய்யப்பட்டுவருகின்றன. தற்போதுவரை 62 VDRL ஆய்வகங்கள் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தச் செயல்பட்டுவருகின்றன.

இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் கொரோனாவின் உண்மை நிலவரம் இந்தியாவில் தெரியவரும். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமானால், ஆய்வகங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை ஓர் அவசரநிலையாகக் கருதி, பெரிய பாதிப்பு ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த நாட்டிலும் மக்களுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், மக்களுக்குத் தங்களால் இயன்ற அளவு பாதுகாப்பு அளிக்க அரசு முன்வர வேண்டும்.
‘‘அவசர நிலையாகக் கருதி அரசு தயாராக வேண்டும்’’மருத்துவர் அப்துல் கஃபூர்
மக்கள் இதுகுறித்து பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வதந்திகளைக் கேட்டு பீதியடைய வேண்டாம். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு சதவிகித்தையும்விட குறைவுதான். நிபா, எபோலா ஆகிய நோய்களின் தாக்கத்தால் ஏற்பட்ட இறப்பு 80 சதவிகிதத்துக்கும் அதிகம். மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. பயப்பட வேண்டாம்” என்று நம்பிக்கை அளிக்கிறார் அப்துல் கஃபூர்.
‘‘கொரோனாவுக்கு மருந்து... சாத்தியமா, சவாலா?’’
மருந்தியல் பேராசிரியர் குளோரி ஜோஸ்பின்
“ ‘கொரோனாவை எதிர்த்து 100 சதவிகிதம் வேலை செய்யும்’ என்று கூற, இப்போதைக்கு எந்த மருந்தும் இல்லை. அனைத்து மருந்துகளும், தடுப்பூசிகளும் ஆராய்ச்சிநிலையிலேயே உள்ளன. ஆராய்ச்சி முடிவுகளுக்காகவே அனைவரும் காத்திருக்கிறோம். `கொரோனா வைரஸ்’ என்ற பெயர் நமக்கு முன்னரே பரிச்சயமானதுதான். 2002-ம் ஆண்டு, சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தொடங்கி, உலக அளவில் 30 நாடுகளை பாதித்து, பல உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த சார்ஸ் நோய்க்கிருமியும் (SARS-Severe Acute Respiratory Syndrome) இதே குடும்பத்தைச் சேர்ந்ததுதான். அது `SARS-COV’ என்று அழைக்கப்பட்டது.

கொரோனா `விரிடியே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ்கள் 1960-களிலேயே `நுரையீரல் தொற்று ஏற்படக் காரணமானவை’ என்று கண்டறியப்பட்டவை. ஆனால், 2002-ல் வந்த சார்ஸ் நோயின் காரணி, முந்தைய கொரோனா வைரஸ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அதனால் சார்ஸுக்கு உடனடியாக மருந்து கண்டுபிடிப்பது சவாலாகவே இருந்தது. ஆனாலும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். அதன் பலனாக 2005-ன் ஓர் ஆய்வறிக்கையில், `மலேரியாவுக்குப் பயன்படுத்தப்படும் `குளோரோக்வைன்’ (Chloroquine) மருந்து SARS-COV-வை எதிர்த்துப் போராட வல்லது’ என்று நிரூபிக்கப்பட்டது.
நுண்ணுயிர் நோக்கிப் பரிசோதனையில் குளோரோக்வைன் மருந்தின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க வைரஸின் இறப்பு விகிதம் அதிகரிப்பது உறுதிசெய்யப்பட்டது. பக்கத்து செல்களுக்கு வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டது. ஆக, `இந்த மருந்தை சார்ஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தாக (Prophylactic Therapeutic) நோய் வரும் முன்பும், வந்த பின்பும் பயன்படுத்தலாம்’ என்று சொல்லப்பட்டது. குளோரோக்வைன், மலேரியா, அமீபியாசிஸ் ஆகிய பல நோய்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டுவரும் மருந்து இது.
இதையடுத்து கொரோனா விரிடியே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் மெர்ஸ் (Middle East Respiratory Syndrome (MERS) என்ற நோய் பரவியது.
‘‘கொரோனாவுக்கு மருந்து... சாத்தியமா, சவாலா?’’குளோரி ஜோஸ்பின்
தற்போது டிசம்பர் 2019-ல் சீனாவின் வூஹான் மாகாணத்தில் புது வகையான வைரஸ் தாக்கி, அது `SARS-COV 2’ வைரஸ் என்றும், அதனால் ஏற்படும் நோய் `COVID-19 என்றும், உறுதி செய்யப்பட்டது. உலக அளவில் வேகமாக பரவத் தொடங்கிய `COVID-19’- ஐ எதிர்த்துப் போராடும் மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, அவசரமும்கூட.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட சார்ஸ், மெர்ஸ் ஆகிய நோய்களை ஏற்படுத்திய வைரஸ்களிலிருந்து இந்த `SARS-COV-2 வைரஸ் மாறுபட்டது.
ஒரு வைரஸை எதிர்த்து மருந்து கண்டுபிடிக்க, அந்த வைரஸைப் பற்றி முழுமையாக அறிவது அவசியம். அது எவ்வாறு மனித உடலுக்குள் செல்கிறது, அதற்கு உதவும் ஏற்பிகள் (Receptors) என்னென்ன போன்ற தகவல்கள் இன்றியமையாதவை.
பிப்ரவரி மாத இறுதியில் இந்த வைரஸின் `3 டி’ உருவம் ஆராய்ச்சி செய்யப்பட்டபோது, SARS COV-2 வைரஸ் உள்ளே செல்ல, `Human Angiotensin Converting Enzyme-2 (A C E-2 )என்ற ஏற்பி உதவுவதாகக் கண்டறியப்பட்டது. இதே ACE - 2 ரிசெப்டார் SAR-1 வைரஸ் உள்ளே நுழைவதற்கும் உதவும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் இந்தத் தகவல் அடிப்படையில் Ribavirin, Penciclovir, Nitazoxanide, Nafamostat, Chloroquine, Remdesivir, Favipiravir ஆகிய மருந்துகள் SARS COV-2-வை எதிர்த்து வேலை செய்கின்றனவா என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் முடிவில் Remdesivir மற்றும் Chloroquine மருந்துகள் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த உதவுவது கண்டறியப்பட்டது.
`Aminoquinoline வகையைச் சேர்ந்த மருந்துகளான குளோரோக்வைன் மட்டுமல்லாமல், ஹைட்ராக்ஸி குளோரோக் வைனும் COV-2-வை எதிர்க்க உதவுகிறது. இதனுடன் Quercetin ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் மருந்தான Angiotensin receptor/blockers, Niclosamide என்ற Antihelminthic மருந்துகளும் பயனளிக்கும்’ என்று ஆராய்ச்சியாளர்கள கூறுகின்றனர்.
ஆராய்ச்சி முடிவுகள் வந்துவிட்டாலும், மருந்துகளைப் பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கும் முன்பு பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். வைரஸை அழிக்கும் மருந்து, ஆராய்ச்சிநிலையில் இருப்பதுபோல, வைரஸ்தொற்றைத் தடுக்க தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.SARS-COV-2 வைரஸின் மரபணு மற்றும் அமைப்பு அறிவிக்கப்பட்ட மூன்றாவது மணி நேரத்தில் INO - 4800 என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் `இது இந்த வருட ஏப்ரல் முதல் மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும். அதைத் தொடர்ந்து இந்த வருட இறுதிக்குள் 10 லட்சம் டோஸ் மருந்துகள் தயாரிக்கப்படும்’ என்று இதன் தயாரிப்பு நிறுவனமான Inovio கூறியுள்ளது. இதே நிறுவனம்தான் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயை ஒழிக்க மருந்து கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஃப்ளுவை எதிர்த்துப் போராடும் இன்ஃப்ளுயென்ஸா தடுப்பு மருந்து ஒவ்வொரு வருடமும் புதிதாக மாற்றப்படும். காரணம், இன்ஃப்ளூயென்ஸா வைரஸின் வடிவமைப்பு ஒவ்வொரு வருடமும் மாறும். ஒவ்வோர் ஆண்டும் எந்த வைரஸ் பரவலாக இருக்கிறது என்று பார்த்து மருந்து தயாரிக்கப்படும்.
அதேபோல் இந்த முறை வந்திருக்கும் வைரஸ் இதுவரை இல்லாத புதிய ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருப்பது மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு சவாலாகத்தான் உள்ளது.
சவாலை எதிர்கொள்வோம்!