கட்டுரைகள்
Published:Updated:

மீண்டும் கோவிட்... பயம் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்!

பயம் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயம் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்!

நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை இருப்போர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த அலட்சியமும் கூடாது. அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவரை அணுக வேண்டும்.

கடந்த சில தினங்களாக எல்லா ஊடகங்களிலும் கொரோனாதான் பிரேக்கிங் நியூஸ். ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என மிரட்டுகிறது கொரோனாவின் புதிய திரிபு. சீனா, ஜப்பான், அமெரிக்காவில் வேகமாக அதிகரித்துவரும் `பி.எஃப் 7’ திரிபு, இந்தியாவுக்குள்ளும் வந்துவிட்டது. புத்தாண்டு பண்டிகை காலத்தில், ‘மறுபடியும் முதல்லருந்தா....’ என மக்கள் பீதியில் உறைந்திருக்கின்றனர். `கொரோனாவின் இந்தப் புதிய திரிபு இந்தியாவை பாதிக்குமா... தாக்கம் எப்படியிருக்கும்... தற்காத்துக்கொள்ள என்னதான் வழி?’ சென்னையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் இலக்கியாவிடம் பேசினோம்.

“தற்போது பரவிவரும் கோவிட் - பி.எஃப் 7 திரிபு, நாம் ஏற்கெனவே எதிர்கொண்ட மூன்றாம் அலையான ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தது. இரண்டாம் அலையில் பாதித்த டெல்டா தொற்றின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்தது. உயிரிழப்புகளும் அதிகம் இருந்தன. ஆனால், ஒமைக்ரானைப் பொறுத்தவரையில் அது அதிகமாகப் பரவும் தன்மைகொண்டது என்றாலும், அதன் வீரியம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படவில்லை.

Iஇலக்கியா
Iஇலக்கியா

கோவிட் - 19 தொற்றுக் காலகட்டத்தில் சீனா ‘ஜீரோ கோவிட் பாலிசி’ என்பதன் அடிப்படையில், தொற்றுப்பரவலைத் தீவிரமாகக் கண்காணித்தது. ஒருவருக்குத் தொற்று பாதிப்பு உறுதியானாலும்கூட அந்தப் பகுதியில் முழு ஊரடங்கைக் கடைப்பிடித்தது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் பலர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டதோடு, கொரோனா தொற்றுடன் வாழவும் பழகிக்கொண்டனர். அதேநேரம், தற்போது சீன மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு இந்தத் தொற்று ஏற்படும், உயிரிழப்புகள் அதிகமாகும் என்ற கணிப்பை நமக்கான எச்சரிக்கை மணியாகவும் எண்ணி, பாதுகாப்போடு இருக்க வேண்டும்.

மேலும், இது குளிர்காலம் என்பதால் சளி, இருமல், ஃப்ளூ, ஆஸ்துமா போன்ற வழக்கமான பாதிப்புகளுடன், கோவிட் - பி.எஃப் 7 திரிபும் வேகமெடுக்கிறது. கோவிட் தொற்றுக்கும் சளி, இருமல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். ஐந்து நாள்களுக்குப் பிறகும் இவை தொடர்ந்தால் கோவிட் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர் வழிகாட்டுதல்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் கோவிட்... பயம் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்!

மக்கள் மத்தியில் கோவிட் தொற்று குறித்த பயம் போய், ஒருவித அலட்சியமே நீடிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த கோவிட் தொற்றின் மூன்று அலைகளையும் பார்த்துவிட்டதால், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் பலர். அதற்கு நேரெதிராகச் சிலர் மிகவும் பயந்துபோயிருக்கிறார்கள். இப்போது பரவ ஆரம்பித்திருக்கும் தொற்றின் பாதிப்பு மற்றும் அதன் வீரியம் பற்றி இன்னும் சரியான தகவல்கள் கிடைக்காதபட்சத்தில் இதை மிகவும் சாதாரணமாகக் கடந்து செல்லவும் கூடாது. அதேநேரம் அதிக அச்சமும் தேவையில்லை.

இந்தியாவில் வெறும் 28 சதவிகிதம் பேர் தான் முழுமையான பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறார்கள். அதுவும் பூஸ்டர் டோஸ் ஊசிகளை எடுத்துக்கொண்டே ஒரு வருடம் கடந்துவிட்டது. ஒமைக்ரான் திரிபைப் பொறுத்தவரை அது பெரும்பாலும் எல்லா வயதினரையும் தாக்கியது. ஆனால், அதன் வீரியம் குறைவாக இருந்தது. தற்போது பரவிவருகிற கோவிட் பிஎஃப் 7 திரிபு, ஒமைக்ரான் தொற்றின் மாறுபட்ட வகைதான். எனினும், அதன் வீரியம் பற்றி இன்னும் தெரியவில்லை. எனவே, எதிர்காலத்தில் தொற்றின் வீரியத்துக்கு ஏற்றாற்போல் வேறு பூஸ்டர் தடுப்பூசிகள் தயாரிக்கப்படலாம். இந்தத் திரிபு, அனைத்து வயதினரையும் பாதிக்கலாம் என்பதால் அனைவருமே கவனமாக இருக்கவேண்டியது அவசியம். அரசுத் தரப்பிலும் மீண்டும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

மீண்டும் கோவிட்... பயம் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்!

அடுத்தடுத்து வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாஸ்க், சானிட்டைஸர், ஹேண்ட் வாஷ் பயன்படுத்துவது, பயணம், கூட்டம் தவிர்ப்பது என முன்போலவே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை இருப்போர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த அலட்சியமும் கூடாது. அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவரை அணுக வேண்டும்.

மொத்தத்தில், ஓவர் பயமும் வேண்டாம், ஓவர் அலட்சியமும் கூடாது” என்கிறார் டாக்டர் இலக்கியா.