சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஓமைக்ரான் அடுத்த அச்சுறுத்தலா?

ஓமைக்ரான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓமைக்ரான்

இந்தியாவின் கொரோனாப் பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் டெல்டா உருமாற்றம் ஆதிக்கம் செலுத்தியது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் புதிய அச்சுறுத்தலாக வெகுவாக உருமாற்றம் அடைந்த வைரஸ் தோன்றியுள்ளது.

வைரஸ்களின் பரிணாமச் சுழற்சியில் அவை தன்னகத்தே பல உருமாற்றங்களை அனுதினம் சந்தித்துக் கொண்டே இருக்கின்றன. 2019-ல் நாவல் கொரோனா வைரஸாகத் தோன்றி உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வைரஸ், தன்னகத்தே உருமாற்றங்கள் அடைந்துகொண்டே வருகிறது.

அத்தகைய உருமாற்றங்களில் பலவும் அச்சறுத்தல் அற்றவையாகவும், சில மனித இனத்திற்கு அச்சுறுத்தல் தருபவையாகவும் விளங்குகின்றன.

ஓமைக்ரான் அடுத்த அச்சுறுத்தலா?

கொரோனா வைரஸை மனிதர்களின் சுவாசப்பாதையுடன் ஒன்றச் செய்யும் வைரஸின் முக்கியப் பகுதியான ஸ்பைக் புரதத்தை உருவாக்கும் மரபணுக்களில் அங்கமாற்றங்கள் உண்டாகும்போது அச்சுறுத்தல் தரும் உருமாற்றங்கள் உண்டாகின்றன. இவற்றை VARIANTS OF CONCERN என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் கிரேக்க மொழியின் எழுத்துகளைப் பெயர்களாக வழங்கிவருகிறது அந்த அமைப்பு. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற அச்சுறுத்தல் தரும் உருமாற்றங்களை உலகம் சந்தித்துள்ளது.

இந்தியாவின் கொரோனாப் பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் டெல்டா உருமாற்றம் ஆதிக்கம் செலுத்தியது. அதன் டெல்டா பிளஸ் வடிவ மாற்றம் இன்றளவும் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் B.1.1.529 எனும் உருமாற்றத்தை நிபுணர்கள் கண்டறிந்திருக்க, அதற்கு ‘ஓமைக்ரான்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த உருமாற்றம் அடைந்த வைரஸில் முப்பது இடங்களில் அங்கமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் விளைவாக இதுவரை கண்டறியப்பட்ட அச்சுறுத்தல் தரும் உருமாற்றங்களிலேயே அதிக வேகத்துடன் பரவும் தன்மையுடனும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊடுருவும் தன்மையுடனும் இது இருக்கிறது.

ஓமைக்ரான் அடுத்த அச்சுறுத்தலா?

இந்த உருமாற்றத்தின் பரவும் தன்மையைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார நிறுவனம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஓமைக்ரான் உருமாற்றத்தால் அதிகமான பாதகங்கள் உருவாகக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓமைக்ரான் உருமாற்றத்தை உலகிற்கு முதலில் கண்டறிந்து கூறியிருப்பது தென் ஆப்பிரிக்காவாகும். இந்த நாட்டில் இருந்துதான் முதலில் பீட்டா வேரியண்ட்டும் கண்டறியப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவின் மாகாணங்களிலும் அருகில் உள்ள போட்ஸ்வானாவிலும் தொடர்ந்து இந்த ஓமைக்ரான் உருமாற்றம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவையன்றி பயணிகள் மூலம் பெல்ஜியம் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்தும் கண்டறியப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்னும் இந்த உருமாற்றத்தின் தாக்கம் அதிகமாகவில்லை. எனவே இந்த நாடுகளிடையே தடையின்றிப் பயணங்கள் மேற்கொள்ளலாம் என்றும், பயணிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால் போதும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலக நாடுகளைப் பொறுத்தவரை தொற்றுப்பரவலைக் கண்டறிவதிலும் மரபணுப் பகுப்பாய்விலும் அதிக கவனத்தைச் செலுத்திட வேண்டும்.

ஓமைக்ரான் அடுத்த அச்சுறுத்தலா?

ஓமைக்ரான் எனும் இந்த உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை நாம் தற்போது செய்யும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கொண்டே கண்டறிந்துவிட முடியும். குறிப்பாக இந்த வேரியண்ட்டில் ‘எஸ்’ மரபணு இருக்காது. எனவே கொரோனா பாசிட்டிவ் மாதிரிகளில் ‘எஸ்’ மரபணு இல்லாமல் கண்டறியப்படும் மாதிரிகளை ஓமைக்ரான் என்று கருத்தில் கொள்ளலாம்.

உலக நாடுகள் தங்களிடையே இந்த வேரியண்ட் பரவலைக் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். தேவைக்கேற்ப சர்வதேசப் பயணிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திட வேண்டும். எனினும் அளவுக்கு மீறிய பீதி நிலையில் நாடுகள் தற்போதே நடந்துகொள்ளத் தேவையில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தமிழ்நாட்டில் எட்டு நாள்களுக்குப் பிறகும் பரிசோதனை கட்டாயம் என்று அறிவித்திருப்பது சிறந்த முடிவு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரத்யேகமாக சென்னையில் மரபணுப் பகுப்பாய்வு மையம் செப்டம்பர் 2021-ல் தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது. அதன் துணைகொண்டு நாம் மரபணுப் பகுப்பாய்வுகளை உடனே செய்ய முடியும்.

ஓமைக்ரான் வேரியண்ட் மூலம் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிமாகக்கூடும். மேலும், தடுப்பூசியினால் உண்டாகும் எதிர்ப்பு சக்தியையும் இந்த வேரியண்ட் ஊடுருவிச் செல்லும் என்றும் ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து நடக்கும் ஆய்வு முடிவுகள் இந்த வேரியண்ட் குறித்த கூடுதல் அறிவைத் தரக்கூடும். இந்தப் புதிய வேரியண்ட்டுக்கு எதிராக இருக்கும் உயிர்காக்கும் அஸ்திரம், தடுப்பூசி. இரண்டு டோஸ் தடுப்பூசியையும் பெறுவது கொரோனாவினால் ஏற்படும் தீவிர நோய் நிலையையும் மரணங்களையும் தடுக்கும் செயலாக இருக்கும். தமிழ்நாடு அரசு இலவசமாக நடத்தும் மாபெரும் தடுப்பூசி இயக்கத்தில் பங்குகொண்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை முறையாகப் பெற்றுக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். ஓமைக்ரான் வேரியண்ட் மூலம் மூன்றாம் அலை உருவாகுமாயின் நிச்சயம் தடுப்பூசிகள் பல்லாயிரம் உயிர்களைக் காக்கும் கேடயமாக இருக்கும்.

தடுப்பூசிகளுடன் சேர்த்து வெளியிடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பேணுவது, கைகளை அடிக்கடி கழுவுவது,அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் மருத்துவரை நாடுவது, தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே தனிமைப்படுத்திக்கொள்வது போன்றவற்றை நாம் இயக்கமாக மாற்றிப் பேணி வந்தால் நிச்சயம் எதிர்வரும் காலத்தையும் வெல்ல முடியும்.

ஓமைக்ரான் வேரியண்ட் குறித்து நாம் எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருந்தால் போதுமானது. வீண் பீதி மற்றும் பதற்றம் தேவையற்றது.