ஏழை எளிய மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப் படுத்தியது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது நாள்தோறும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் கார்டுகள் பயனாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

தற்போது ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து லட்சம் கார்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதை 10 லட்சம் கார்டுகளாக நாள்தோறும் விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் மண்டாவியா தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றதை யொட்டி நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் மண்டாவியா இதைத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் கூரை வீடு இல்லாதவர்கள், பழங்குடி மக்கள், ஊனமுற்றவர்கள், நிலம் அற்றவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பிச்சைக்காரர்கள் போன்ற பிரிவினர் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் விபத்து மற்றும் 21 வகையான அவசரகால சிகிச்சைகளுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும். இந்த அட்டையைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

தற்போது வரை கடந்த நான்கு ஆண்டுகளில் 19 கோடி மக்களுக்கு இந்த அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி பணம் எதுவும் செலுத்தாமல் சிகிச்சை பெரும் வசதியும் உள்ளது.
நோய்வாய்ப்பட்ட காலத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கிடைக்கப் பெறாமல் பலர் கஷ்டப்படும் சூழ்நிலை நிலவுகிறது. சிகிச்சைக்காக கடன் வாங்கி பலர் இந்தச் சூழ்நிலையும் நிலவுகிறது. அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் சேர தகுதியுள்ள நபர்கள் இந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.