Published:Updated:

சமுதாய வளைகாப்பு விழா: கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளைகாப்பா... ஆட்சியரின் விளக்கம் என்ன?

வைரலாகி வரும் புகைப்படம்
News
வைரலாகி வரும் புகைப்படம்

தூத்துக்குடியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் போதிய கர்ப்பிணிகள் வராததால், அங்கன்வாடியில் பணிபுரியும் கர்ப்பமாகாத 5 ஊழியர்களை அமரவைத்து வளைகாப்பு நடத்தியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Published:Updated:

சமுதாய வளைகாப்பு விழா: கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளைகாப்பா... ஆட்சியரின் விளக்கம் என்ன?

தூத்துக்குடியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் போதிய கர்ப்பிணிகள் வராததால், அங்கன்வாடியில் பணிபுரியும் கர்ப்பமாகாத 5 ஊழியர்களை அமரவைத்து வளைகாப்பு நடத்தியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வைரலாகி வரும் புகைப்படம்
News
வைரலாகி வரும் புகைப்படம்

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வட்டார அளவில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. இதில், அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த  கர்ப்பிணிகளுக்கு சாதி, மத பேதமின்றி  வளைகாப்பு நடத்தப்பட்டு சீர்களுடன் ஐந்து வகை உணவு பரிமாறப்பட்டுவருகிறது. ஒரு வட்டார சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்காக அரசு சார்பில் ரூ.80 ஆயிரம் உணவு, வளையல்கள் உள்ளிட்டவற்றுக்காக வழங்கப்படுகிறது. 

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

இந்தச் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சமுதாய நலக்கூடத்தில் அல்லாமல் தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டால், மண்டபத்துக்கான வாடகைத் தொகை தனியாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணிகளுக்கு கடந்த 23-ம் தேதி சாத்தன்குளம் அருகேயுள்ள கொளுந்தட்டு அங்கன்வாடி  மையத்தில்வைத்து சமுதாய வளைகாப்பு நடந்தது.

இந்த நிகழ்வு, சாத்தன்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகளின் திட்ட மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜெயா தலைமையில் நடந்தது. இதில், 91 அங்கன்வாடி மையப்பகுதிகளுக்கு உட்பட்ட 50 கர்ப்பிணிகள் கலந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கர்ப்பிணிகளுக்கு கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டு, கைகளில்  வளைகாப்பு வளையல்கள் அணிவிக்கப்பட்டு ஐந்து வகையான உணவுகளும் பரிமாறப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஐந்து பெண்கள் மட்டும் தனியாக அமரவைக்கப்பட்டு அவர்களுக்கும் மாலை, வளையல்கள் அணிவிக்கப்பட்டிருந்தன.

உணவு பரிமாறுதல்
உணவு பரிமாறுதல்

“ஆள் பற்றாக்குறையால் கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வளைகாப்பா... இதுதான் திராவிட மாடலா?” என்ற வாசகத்துடன்கூடிய புகைப்படமும், அது சம்பந்தமான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து விசாரித்தோம். அந்தப் புகைப்படத்திலிருக்கும் ஐந்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஏற்கெனவே தலா ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சாத்தான்குளம் வட்டாரத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய சாத்தன்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகளின் திட்ட மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜெயாவிடம் பேசினோம். “சாத்தான்குளத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 50 கர்ப்பிணிகள் கலந்துகொண்டார்கள். 50 பேருக்குமே சிறப்பாக வளைகாப்பு விழாவை நடத்தியிருக்கிறோம். மாலை அணிவிப்பதிலிருந்து உணவு பரிமாறுவது வரை அனைத்தையும் வீடியோ பதிவுசெய்திருக்கிறோம். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஐந்து ஊழியர்கள், `எங்களுக்கு ரெண்டாவது குழந்தை இல்லை. அதனால எங்களுக்கும் வளைகாப்பு சடங்கு செய்யுங்க. ரெண்டாவது குழந்தை பிறக்கும்’ என ஆசைப்பட்டுக் கேட்டாங்க. அரசு விழா முடிந்த பிறகு அவர்களின் ஆசைக்காக நடத்தப்பட்ட சடங்குதான் அது.

நிகழ்ச்சியில் உணவு பரிமாறுதல்
நிகழ்ச்சியில் உணவு பரிமாறுதல்

அவர்களுடன் அதிகாரிகளும், அங்கன்வாடி ஊழியர்களும் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அதைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் அந்தப் புகைப்படத்தை மட்டும் சமூக வலைதளங்களில்  பரவவிட்டிருக்கிறார்கள்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜிடம் பேசினோம். “நானும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தேன். விருப்பப்பட்ட ஐந்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு அவர்களின் மன திருப்திக்காக நடத்தப்பட்ட சம்பிரதாயச் சடங்கு என்கிறார்கள். இருப்பினும் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தவறு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.