Published:Updated:

`என் மொபைலை ஹேக் செய்து மிரட்டுகின்றனர்!' - சுப்பையாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்

மருத்துவர் சுப்பையா
News
மருத்துவர் சுப்பையா

``சுப்பையாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிராக நான் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியெல்லாம் என்னைச் சுற்றி சதிவலை பின்னப்படுகிறதோ என்று எனக்குச் சந்தேகம் மேலெழுகிறது." - பாலாஜி விஜயராகவன்

Published:Updated:

`என் மொபைலை ஹேக் செய்து மிரட்டுகின்றனர்!' - சுப்பையாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்

``சுப்பையாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிராக நான் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியெல்லாம் என்னைச் சுற்றி சதிவலை பின்னப்படுகிறதோ என்று எனக்குச் சந்தேகம் மேலெழுகிறது." - பாலாஜி விஜயராகவன்

மருத்துவர் சுப்பையா
News
மருத்துவர் சுப்பையா

`ஒரு மருத்துவர் இப்படியெல்லாம் நடந்துகொள்வாரா?’ என ஒட்டுமொத்த தமிழகத்தையும் முகம் சுளிக்க வைத்த மருத்துவர் சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. `அந்தப் பொறுப்பிலிருந்து அவரை உடனே நீக்க வேண்டும்’ எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய அரசுக்குக் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன.

சிசிடிவியில் பதிவான காட்சி
சிசிடிவியில் பதிவான காட்சி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியின் புற்றுநோயியல் மருத்துவரும் பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யின் தேசியத் தலைவருமான சுப்பையா சண்முகத்தைப் பற்றி தமிழக மக்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. சென்னை நங்கநல்லூர் அப்பார்ட்மென்ட்டில் வசித்து வரும் சுப்பையா சண்முகத்துக்கும் அவரது பக்கத்து வீட்டில் தனியாக வசித்து வரும் பெண்மணிக்கும் கடந்த ஜூலை மாதம், கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்னை எழுந்தது. `என்னுடைய பார்க்கிங்கில் நீங்கள் கார் நிறுத்துகிறீர்கள். அதற்கான வாடகை கொடுங்கள்’ என்று அந்தப் பெண் நியாயமாகக் கேட்க, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து தன் வக்கிர முகத்தைக் காட்டியவர்தான் சுப்பையா சண்முகம்.

`ஒரு சராசரி மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்புகூட இல்லாத சுப்பையா சண்முகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அப்போதே பலர் குரல் கொடுத்தனர். ஆனால், சுப்பையாவுக்கு இருந்த அரசியல் செல்வாக்கு அவர்மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தது. சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் அந்தச் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவதற்கே கால தாமதம் செய்தது காவல்துறை. பிரச்னை கையை மீறிச் சென்றதும் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி எந்தவிதமான நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் நழுவிக்கொண்டார் சுப்பையா சண்முகம். சம்பந்தப்பட்ட பெண்ணின் தரப்பும் ஒதுங்கிக்கொண்டது. இந்த நிலையில்தான் சுப்பையா சண்முகத்தை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது மத்திய அரசு.

பாலாஜி விஜயராகவன்
பாலாஜி விஜயராகவன்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், மதுரை நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், `மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழிவு செயலுக்காகக் கொடுக்கப்படும் பரிசா? அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என்று குரல் கொடுத்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் சுப்பையாவுக்கு எதிரான குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் சார்பாக ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் சுப்பையா மீது புகார் கொடுத்த அந்தப் பெண்ணின் அக்கா மகன் பாலாஜி விஜயராகவனிடம் பேசினோம்.

``அப்படி ஓர் இழி செயலைச் செய்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் மத்திய அரசு பொறுப்பு வழங்கியிருப்பதை அறிந்ததும் இதயம் நொறுங்கிப்போனேன். அந்தப் பிரச்னையில் சுப்பையாமீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றாலும் அமைப்பு ரீதியாகவாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பினோம். ஆனால், மாறாக அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பொறுப்பு வழங்கி எங்கள் நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டது மத்திய அரசு. இதை நாங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை. அதுமட்டுமல்ல, சமீப நாள்களாக என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது இதுதொடர்பாக நான் எதுவும் பேசிவிடக் கூடாது என்பதற்காக ஏதோ சதி நடக்கிறதோ என்றுகூட எனக்குத் தோன்றுகிறது” என்றவரிடம், `உங்களைச் சுற்றி என்ன சம்பவங்கள் நடக்கின்றன. என்ன சதி?’ எனக் கேட்டோம்.

``கடந்த சில வாரங்களுக்கு முன்பு என்னுடைய ஆண்ட்ராய்டு போனை ஹேக் செய்து, என் பெயரில் ஏதேதோ ஆப்களில் கடன் வாங்கியுள்ளனர். ஒவ்வொன்றும் 800 ரூபாய், 900 ரூபாய் எனச் சிறிய தொகைகள்தான் என்றாலும் அப்படிச் சிறிது சிறிதாக மூன்றரை லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளனர். இதை வழக்கமாக நடக்கும் டிஜிட்டல் மோசடியாக என்னால் நினைக்க முடியவில்லை. காரணம், என் மொபைலில் இருந்து என் உறவினர்கள், நண்பர்களின் தொடர்பு எண்களை எடுத்து அவர்களுக்கு போன் செய்து அசிங்க அசிங்கமாகப் பேசுகின்றனர். நான் கழிவறைக்குச் செல்லும்போது போனை எடுத்துச் செல்வேன். என் போனை ஹேக் செய்து நான் கழிவறையில் இருக்கும்போது என்னைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை எனக்கே அனுப்பி இதைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். இந்நாள்வரை கடந்த சில வாரங்களாக எனக்கு நடக்கும் இந்தப் பிரச்னையை அரசியல் ரீதியாகப் பார்க்கவில்லை. ஆனால், சுப்பையாவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பொறுப்பு வழங்கப்பட்ட பிறகுதான் இதில் அரசியல் காரணங்கள் இருக்குமோ என்று என் மனதில் சந்தேகம் எழுந்திருக்கிறது. சுப்பையாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிராக நான் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியெல்லாம் என்னைச் சுற்றி சதிவலை பின்னப்படுகிறதோ என்று எனக்குச் சந்தேகம் மேலெழுகிறது. உண்மை நிச்சயம் ஒரு நாள் வெளியே வரும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் பெற மருத்துவர் சுப்பையா சண்முகத்தை தொடர்புகொண்டோம். நாம் கேள்வியைக் கூட கேட்கத் தயாராக இல்லாத அவர், ``நான் 31 வருடம் மருத்துவராக இருக்கிறேன். 22 வருடம் சர்ஜன் அனுபவம் இருக்கிறது. 18 வருடங்களாக புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறேன். 10 வருடங்களாக பேராசிரியாரக இருக்கிறேன். 5 வருடங்களாக புற்றுநோயியல் துறை தலைவராக இருக்கிறேன். இதுவரைக்கும் 5,000-க்கும் அதிகமான கேன்சர் ஆபரேஷன்களைச் செய்துள்ளேன். லேப்ராஸ்கோப்பி ஆபரேஷன்கள் மட்டும் 500 செய்துள்ளேன். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் கேன்சருக்கு அதிகளவில் லேப்ராஸ்கோப்பி செய்வது நான்தான். சர்வதேச அறிவியல் ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ள என் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை 83.

மருத்துவர் சுப்பையா
மருத்துவர் சுப்பையா

அதுமட்டுமல்ல, ஏற்கெனவே தெலங்கானா எய்ம்ஸின் உறுப்பினர் நான். 5 வருடங்களாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் எக்ஸிகியூட்டிவ் மெம்பர், இரண்டு வருடங்களாக பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் மெம்பர், எம்.ஜி.ஆர் மெடிக்கல் யுனிவர்சிட்டியில சூப்பர் ஸ்பெஷாலிட்டி கரிகுலம் போர்டுல இப்போ மெம்பர். இன்னும் ஒரு வருஷம் கழித்து சேர்மன் ஆகப்போறேன். கொரோனா நேரத்தில் கேன்சர் இன்ஸ்டியூட் கூட ஒரு மாதம் மூடியிருந்தார்கள். ஆனால், நான் ஒரு நாள்கூட ஓய்வெடுக்காமல் ஆபரேஷன்களை செய்து மார்ச் மாதத்திலிருந்து இன்றுவரை மட்டும் 500-க்கும் மேற்பட்ட கேன்சர் ஆபரேஷன்கள் என் தலைமையில் நடந்துள்ளது. லேப்ராஸ்கோப்பி உட்பட. ஆனால், என் டிபார்ட்மென்ட்டில் யாருக்குமே கொரோனா வரவில்லை. இதைப் பாராட்டி European Journal of surgical oncology-யில் கட்டுரை வெளியிட்டுள்ளனர். இவ்வளவு தகுதிகளை அடிப்படையாக வைத்துத்தான் என்னை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது. ஆனால், இன்னும் அதுதொடர்பாக எனக்கு அஃபிஷியல் கன்ஃபர்மேஷன் வரவில்லை. வந்த பிறகு நான் அதுகுறித்து கருத்துச் சொல்கிறேன். அடுத்தாக நான் அரசியல்வாதி கிடையாது. நான் சார்ந்திருக்கும் ஏபிவிபி-யும் அரசியல் இயக்கம் கிடையாது. இதைதாண்டி நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அது முடிந்துபோன விவகாரம் நான் அதுதொடர்பாக பேச விரும்பவில்லை" என சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.