மோசடி ரூ.22,842 கோடி... பறிமுதல் ரூ.2,700 கோடி... வங்கிக் கடன் தில்லுமுல்லு பின்னணியில் பா.ஜ.க?

ஒரே நிறுவனம் ரூ.22,842 கோடி மோசடி செய்தும், மோடி அரசின் நிர்பந்தம் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம்விட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறார் குஜராத்தைச் சேர்ந்த கப்பல் நிறுவன அதிபர் ரிஷி கமலேஷ் அகர்வால்! இவரது ஏ.பி.ஜி ஷிப்யார்டு என்ற கப்பல் கட்டும் நிறுவனம், அரசு மற்றும் தனியார் வங்கிகளிடம் பெற்ற ரூ.22,842 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்திருக்கிறது.
இது குறித்துப் பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். “எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, ஐ.டி.பி.ஐ என 28 வங்கிகளிடமிருந்து 22,482 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றிருக்கிறது ஏ.பி.ஜி ஷிப்யார்டு நிறுவனம். கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேசப் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டபோது வெளிநாடுகளிடமிருந்து கிடைத்த ஆர்டர்கள் ரத்தானதால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்று நிறுவனத் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையை ஆய்வு செய்தபோதுதான் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, ஏ.பி.ஜி நிறுவனத் தலைவரான ரிஷி கமலேஷ் அகர்வால், பொய்யாக நஷ்டக் கணக்கு காட்டிவிட்டு, தனது 98 கிளை நிறுவனங்களுக்கும் தனியாகச் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இது குறித்து முதன்முதலில் எஸ்.பி.ஐ வங்கி 2019-ல் புகார் அளித்தது. பின்னர் 28 வங்கிகளும் இணைந்து இந்த மோசடி குறித்து சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தன. அதன் பின்னரே கடந்த பிப்ரவரி மாதம் சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து, ரிஷி அகர்வால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.
இந்த நிதி மோசடியின் பின்னணியில் பேசப்பட்டுவரும் அரசியல் குறித்துப் பேசிய மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த், ‘‘ஒரே நிறுவனம் ரூ.22,842 கோடி மோசடி செய்தும், மோடி அரசின் நிர்பந்தம் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. ஆனால், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பிறகே, வேறு வழியில்லாமல் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்திருக்கிறது’’ என்றார்.

இதையடுத்து குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு, மும்பை பா.ஜ.க தென்னிந்தியப் பிரிவுத் தலைவர் முத்துக்கிருஷ்ணனிடம் பேசியபோது, ‘‘ஏ.பி.ஜி ஷிப்யார்டு நிறுவனம் வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காதது குறித்து ஆரம்பத்திலிருந்தே சி.பி.ஐ விசாரித்துவருகிறது. எதையும் அவசரப்பட்டுச் செய்ய முடியாது என்பதால், முழுமையாக விசாரித்து அதன் நிறுவனர் அகர்வாலைக் கைதுசெய்திருக்கின்றனர். மற்றபடி இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசுக்கு எந்தவிதத் தொடர்பும் கிடையாது’’ என்றார்.
வாங்கிய கடன் 22,842 கோடி... பறிமுதல் சொத்து வெறும் 2,700 கோடி மட்டுமே... கணக்கு இடிக்குதே ஆபீஸர்ஸ்!