Published:Updated:

பங்குச் சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு!

Vikatan Correspondent
 பங்குச் சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு!
பங்குச் சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு!
 பங்குச் சந்தையில் ஏற்றம்; ரூபாய் மதிப்பும் உயர்வு!

மும்பை: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜனின், இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் நம்பிக்கையூட்டும் அறிவிப்பு காரணமாக, ரூபாய் மதிப்பில் இன்று முன்னேற்றம் ஏற்பட்டதோடு, மும்பை பங்குச் சந்தையிலும் சென்செக்ஸ் 400 க்கும் அதிகமான புள்ளிகள் ஏற்றமடைந்து காணப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த சில மாதங்களாக சரிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சில அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

குறிப்பாக வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்  பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து, கடனை வசூலிப்பதற்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நம்பிக்கையூட்டும் இந்த அறிவிப்புகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் ஆரம்பமானது.

மும்பை பங்குச்சந்தையில் காலை 10.30 மணி அளவில் சென்செக்ஸ் 470 புள்ளிகள் உயர்ந்து 19,037 புள்ளிகளாக காணப்பட்டது. அதேப்போன்று தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டியானது 150 புள்ளிகள் உயர்ந்து 5,599 புள்ளிகளாக காணபட்டது. 

##~~##
அதேப்போன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் இன்று முன்னேற்றமடைந்தது. அன்னிய செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67.09 ஆக காணப்பட்ட நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 99 காசுகள் உயர்ந்து 66.10 ஆக காணப்பட்டது. பின்னர் அது முற்பகல் 11.56 மணி அளவில் 65.98 ஆகவும் உயர்ந்து காணப்பட்டது.