Published:Updated:

மன உளைச்சலால் பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து மரணம்! கொந்தளிக்கும் மகாராஷ்டிரா

வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளை எடுப்பதற்கான வரம்பை 40,000 ரூபாய்வரை உயர்த்தியுள்ளதால் 77% வாடிக்கையாளர்கள் தங்களது டெபாசிட் முழுவதையும் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

PMC Bank customers Protest
PMC Bank customers Protest ( AP )

பஞ்சாப் & மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் செய்த வங்கிக்கடன் மோசடி காரணமாக, தற்போது வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், அடுத்த ஆறு மாத காலத்துக்கு அதிகபட்சம் 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று முதன்முதலில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. பின்னர், அந்தக் கட்டுப்பாட்டை 10,000 ரூபாய், 25,000 ரூபாய் எனத் தளர்த்தி, தற்போது அதிகபட்சம் 40,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்கமுடியுமென்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒருவருக்கு இந்த வங்கியில் கோடி ரூபாய் இருந்தாலும் அவரால் 40,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதற்குமேல் உள்ள தொகை வங்கியிலேயே முடக்கப்பட்டுவிடும்.

Punjab & Maharastra Bank
Punjab & Maharastra Bank
அக்கவுன்ட்டில் ரூ.80 லட்சம்; சிகிச்சைக்குப் பணம் கொடுக்க மறுத்த வங்கி!- முதியவருக்கு நேர்ந்த சோகம்

இந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கி விதித்துள்ள தடைகளை நீக்கக்கோரி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். டெபாசிட் பணத்தை எடுக்கமுடியாத காரணத்தால் இதுவரை 4 பேர்வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில், 81 வயது முதியவர் ஒருவர், தனது இதய அறுவைச்சிகிச்சைக்காக வங்கியிலிருந்து பணத்தை எடுக்கமுடியாததால், உரிய சிகிச்சை எடுக்கமுடியாமல் உயிரிழந்திருக்கிறார். முரளீதர் தர்ரா என்ற இந்த முதியவரின் வங்கிக்கணக்கில் 80 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அவருக்கு உடனடியாக இதய அறுவைச்சிகிச்சை செய்யவேண்டிய சூழலில் அந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியவில்லை. அவரின் குடும்பத்தினராலும் வேறெங்கும் பணம் புரட்டமுடியாத சூழலில், அறுவைசிகிச்சை நடைபெறாமல் உயிரிழந்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளில், அவசர சிகிச்சை செலவுகளுக்குப் பணம் எடுக்கத் தடையில்லை எனக்கூறப்பட்டாலும், இதற்காகப் பணம் எடுப்பதற்கு வங்கி சார்பில் மறுக்கப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை.

ஏற்கெனவே சஞ்சய் கொலாட்டி என்ற 51 வயது வாடிக்கையாளர், அக்டோபர் 14-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது வங்கிக்கணக்கில் 90 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. ஜெட் ஏர்வேஸில் பணியாற்றிவந்த அவர், சமீபத்தில்தான் வேலையை இழந்துள்ளார். வருமானம் தடைபட்டதால் அவரது குடும்பச்செலவுக்கு வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்க நினைத்தார். ஆனால், வங்கிக் கட்டுப்பாடு காரணமாக தனது பணத்தை எடுக்கமுடியாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் நடத்திய பேரணியில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

PMC Bank Notice
PMC Bank Notice
பி.எம்.சி வங்கி முறைகேடு... பதற்றத்தில் மகாராஷ்டிரம்!

பி.எம்.சி வங்கி வாடிக்கையாளரான நிவேதிதா பிஜ்லானி என்ற 39 வயது மருத்துவர் ஒருவரும் அவரது இல்லத்தில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக, ஃபட்டோமல் பஞ்சாபி என்ற வாடிக்கையாளரும் தனது டெபாசிட் தொகையை எடுக்கமுடியாத விரக்தியில் மாரடைப்பு வந்து மரணமடைந்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்தபோது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுபோல், தற்போது பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்களும் உயிரிழப்பைச் சந்திப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி நிர்வாகத்தின் தவறால், ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவதால் ஏற்படும் மன உளைச்சலை, உயிரிழப்புகளைத் தடுக்கவேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உண்டு. ரிசர்வ் வங்கி கண்டுகொள்ளவில்லையென்றால் மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, டெபாசிட்டுகளைத் திரும்ப அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

PMC Bank Customers
PMC Bank Customers
AP
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முடக்கம்... பின்னணி  என்ன?

இந்தக் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.4,355 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதால், தீவிர விசாரணை நடத்திய பின்னர்தான் முழுமையாகத் தடையை நீக்கமுடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளை எடுப்பதற்கான வரம்பை 40,000 ரூபாய்வரை உயர்த்தியுள்ளதால் 77% வாடிக்கையாளர்கள் தங்களது டெபாசிட் முழுவதையும் எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது. ஏற்கெனவே, வங்கிகள் திவாலானால் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய்வரை மட்டுமே திருப்பித்தரப்படும் என்ற வாசகத்தை பாஸ்புக்குகளில் பதிப்பிக்க வேண்டுமென்று ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையே வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பி.எம்.சி வங்கிப்பிரச்னை அந்த அச்சத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் அறிவிப்பால் பதறிய வாடிக்கையாளர்கள்!- நடந்தது என்ன?