Published:Updated:

பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா?- நிபுணர்கள் விளக்கம்

Vikatan Correspondent
பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா?- நிபுணர்கள் விளக்கம்
பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா?- நிபுணர்கள் விளக்கம்

ழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து 40 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், இன்னும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களின் வாசல்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது குறையவில்லை. ஆனால், அரசோ 'கேஷ்லெஸ் எகானமியாக' இந்தியா மாற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் பணப் பரிமாற்றத்தை அவ்வளவு எளிதில் மக்களிடமிருந்து மாற்றிவிட முடியாது. 

"படித்தவர்கள், கேஷ்லெஸ் எகானமி குறித்த விவரம் அறிந்த பெரும்பாலான நபர்களுக்கே பணமில்லா பரிவர்த்தனை அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. எனவே 'கேஷ்லெஸ் எகானமி' என்பது அவ்வளவு சாதாரணமாக நிகழ்ந்து விடக்கூடிய மாற்றம் அல்ல" என்கின்றனர் வல்லுநர்கள். 

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் ஃப்ரான்கோவிடம் பேசியபோது, "

இந்த நிலையில் புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி மீது ஏற்கெனவே அதிருப்தியில் வங்கி ஊழியர்கள் இருக்கிறோம். தெளிவான திட்டமிடல் இல்லாமல் திடீரென்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் இன்னலுக்கு ஆளாக்கிவிட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்தவர்கள் ஏன் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவில்லை. மேலும் ரிசர்வ் வங்கி 13 லட்சம் கோடிக்கும் மேல் டெபாசிட் செய்துவிட்டதாக அறிவிக்கிறது. ஆனால் உடனே நிதி அமைச்சகம் அந்தக் கணக்கீட்டில் பிழை இருக்கலாம் அவ்வளவு டெபாசிட் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது. ஒரு நாட்டின் பணப் புழக்கத்தை துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய ரிசர்வ் வங்கியின் கணக்கிடுதலே தவறாக இருப்பதை என்னவென்று சொல்வது. 

அதேபோல் ஏதேனும் புதிய அறிவிப்புகள் இருந்தால் அதை முதலில் வங்கிகளுக்கு சர்குலர் அனுப்ப வேண்டும். அப்போதுதான் நாங்கள் அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்து வாடிக்கையாளர்களைச் சமாளிக்க முடியும். அப்படிச் செய்யாமல் டிவியில் அறிவிப்புகளை வெளியிடுவது சரியா? எதில் எல்லாம் ரகசியம் காப்பது என்று இல்லையா? டிவியைப் பார்த்துவிட்டு வங்கிகளுக்கு வந்து சண்டை போடுகிறார்கள் மக்கள். நாங்களே டிவியைப் பார்த்தோ, மக்கள் சொன்ன பிறகோதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் எங்களுக்கு சர்குலர் வராமல் எதையும் செய்ய முடியாதே. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த மக்கள் போகப் போக கோபப்படுகிறார்கள். மணிப்பூரில் கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு இந்த டிமானிட்டைசேஷனும் ஒரு காரணம். பல இடங்களில் ஏடிஎம்களும் வங்கிகளும் அடித்து உடைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிளைகளிலும் நிலைமையைச் சமாளிக்க வங்கி ஊழியர்கள் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. 

ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் இன்னும் பணத் தட்டுப்பாடு தீரவில்லை. கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருவதாகச் சொல்லி இந்த நடவடிக்கையை அரசு எடுத்ததாக சொன்னது. ஆனால் கிட்டதட்ட 90 சதவிகித 500, 1000 டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதால் எது கறுப்புப் பணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கேள்வியிலிருந்து தப்பிக்க தற்போது கேஷ்லெஸ் எகானமி என்ற பிரசாரத்தை அரசு எடுத்திருக்கிறது. இந்தியாவில் 80 சதவிகித பரிவர்த்தனைகள் பணமாக பரிவர்த்தனை ஆகிக் கொண்டிருந்தது. திடீரென்று கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு மாறுவது எப்படி சாத்தியம். படிப்படியாக மாற்ற வேண்டியதை எல்லாம் ஒரு இரவில் மாற்ற நினைத்தால் முடியுமா?" என்றார்.

'வென்சர் இன்டலிஜன்ஸ்' என்ற 'ஸ்டார்ட் அப் ஃபண்டிங்' மற்றும் நிர்வாக சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அருண் நடராஜனிடம் பேசினோம். "இந்தியாவில் 'கேஷ்லெஸ் எகானமி' என்பது சாத்தியமே இல்லை. ஆனால் 'லெஸ்கேஷ் எகானமி' என்ற அடிப்படையில் வேண்டுமானால் சாத்தியப்படுத்தலாம். பணமே இல்லாத ஒரு பொருளாதாரம் இருக்கவே முடியாது. இந்தியாவில் கல்வியறிவு 74 சதவிகிதம் இருக்கிறது. மீதமுள்ள 26 சதவிகிதத்தினர் முழுமையாக கேஷ்லெஸ் எகானமிக்கு மாறுவது சாத்தியம் இல்லை. அவர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம், ஆனால் மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் போன்றவற்றைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு முறையும் 'ஒன் டைம் பாஸ்வேர்டு' போன்ற பாதுகாப்பு தொடர்பான எண்களைப் பார்த்து, அவர்கள் அவற்றை செயல்படுத்த வேண்டும். இதில் நிறைய சவால்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் பிறரது உதவியை  அவர்கள் நாட வேண்டி இருக்கும். அது பாதுகாப்பானது அல்ல." என்றார்.

பாதுகாப்பான, விரைவான பரிவர்த்தனைதான் பணமில்லா பரிவர்த்தனை. ஆனால், அதிலும் பாதுகாப்புக்கு பங்கம் இருக்கிறது. இவர்கள் சொல்வது போல் 'கேஷ்லெஸ் எகானமி' என்பது எந்த அளவுக்கு சாத்தியம்? என்பதைப் போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.

- ஜெ.சரவணன்