Published:Updated:

வங்கிக் கடன் வாங்க பி.ஜே.பி உறுப்பினர் அட்டை வேண்டும்... நாமக்கல்லில் என்ன நடக்கிறது?

வைரலான லோன் மேளா நோட்டீஸ்
வைரலான லோன் மேளா நோட்டீஸ் ( vikatan )

``குறிப்பாக, முத்ரா லோனைப் பொறுத்தவரை பா.ஜ.க சார்பில் அதிக அளவில் வருகிறார்கள். இவர்களில், போலியாக வங்கிக்கடன் பெற நினைப்பவர்களுக்குக் கொடுக்க மறுப்போம். அப்படி மறுக்கும்போது எங்களுக்கு நெருக்கடி தருவார்கள்."

கடந்த சில நாள்களாக, `லோன் மேளா' என்ற தலைப்பிட்டு ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. `பெண்கள், அரசு வங்கிகளில் மானியத்துடன் குறைந்த வட்டியில் 50,000 வரை கடன்பெற தொடர்பு கொள்வீர்' என்ற வாசகத்துடன், வக்கீல் கே.தங்கவேல் என்ற பா.ஜ.க பிரமுகரின் பெயரில் அந்த நோட்டீஸ் அச்சிடப்பட்டுள்ளது. லோன் வாங்க விரும்புபவர்கள் தரவேண்டிய ஆவணங்களில் ஒன்றாக, `பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் அட்டை'யை அவர் குறிப்பிட்டிருந்ததுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

முத்ரா வங்கிக்கடன்
முத்ரா வங்கிக்கடன்

சிறுதொழில் செய்பவர்களுக்கான வங்கிக் கடனை, கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி பா.ஜ.க-வினருக்கு மட்டுமே பெற்றுத்தரும் விதமாக இது இருப்பதால், சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகியுள்ளது. இந்த நோட்டீஸ் குறித்து உறுதிப்படுத்துவதற்காக, நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள எண்ணில் சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

இந்த நோட்டீஸை அச்சடித்து விநியோகித்திருப்பவர், கே.தங்கவேல். நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர், இந்த குற்றச்சாட்டு குறித்து நம்மிடம் பேசினார்.

``நோட்டீஸில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். தற்போது இரண்டு நாள்களாக நாமக்கல் மாவட்டத்தில் லோன் மேளா நடக்கிறது. அனைத்து வங்கிகளும் இதில் கலந்துகொள்கின்றன. இதில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக, பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத்தர உதவி செய்வதற்கு என்னை ஒரு ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்கள்..." என்றார்.

முத்ரா வங்கிக்கடன்
முத்ரா வங்கிக்கடன்
vikatan
முத்ரா லோன் பயன்பாட்டில் தமிழகம் முதலிடம்!

``பெண்களுக்கு மட்டும் வாங்கித்தருவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்களே?" என்று கேட்டபோது, "எங்கள் பகுதியில் வங்கிக்கடன் பெற்று, கட்ட முடியாததால் சில பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். எனவே, பெண்களுக்கு உதவி செய்வதற்காக அந்த அறிவிப்பு கொடுத்துள்ளேன்" என்றார். "எந்தத் திட்டத்தின்கீழ் கடன் பெற்றுத் தருவீர்கள்?" என்று கேட்டதற்கு, "முத்ரா திட்டம், தனிநபர்க்கடன், தொழிற்கடன் போன்றவற்றில் எதையாவது பெற்றுத் தருவதற்கு அவர்களுக்கு உதவிசெய்வோம்" என்றார்.

``வங்கிக்கடன் பெறுவதென்றால், தேவைப்படுபவர்கள் வங்கி மேலாளர்களைத்தானே அணுக வேண்டும். உங்களை அணுகும்படி கூறுவது சரியான முறையா?" என்று கேட்டதற்கு, ``வங்கியைத்தான் அவர்கள் அணுக வேண்டும். ஆனால், அவர்களுக்கு வங்கிக்கடன் வாங்கும் விவரம் தெரியாததால் வங்கியில் சரியான பதில் கிடைப்பதில்லை. எனவே, நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம்" என்றார்.

``ஆனால், உங்களுடைய அறிவிப்பில் சிறுதொழில் நடத்துபவர்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக எதுவும் குறிப்பிடவில்லை. பொத்தாம்பொதுவாக வங்கிக்கடன் வாங்கித்தருவதாகக் கூறியிருப்பது கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறதே?" எனக் கேட்டபோது, ``அப்படியல்ல, தொழில்கடன் தேவைப்படும் எனது கட்சி நண்பர்களுக்கு உதவுவதற்குத்தான் இந்த நோட்டீஸை வெளியிட்டுள்ளேன். அவர்களது தொழில் தேவை குறித்து அறிந்து, வங்கி மேலாளர்களிடம் பேசி எந்த மாதிரியான வங்கிக் கடன் கிடைக்குமோ அதைப் பெற்றுத்தருவேன்" என்றார்.

வங்கி
வங்கி
அதிகரித்த முத்ரா வாராக்கடன்... வெடிக்கத் தயாராகும் இன்னொரு வெடிகுண்டு!

``இப்படி வங்கிக் கடன் வாங்குவதற்கு கட்சிரீதியாக வருபவர்கள் உங்களிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்?" என்று வங்கித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். ``முத்ரா லோன் என்பது சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் ஒரு வங்கிக் கடன் திட்டமாக உள்ளது. சிறிய அளவிலான தொழில், பெட்டிக்கடை போன்ற தொழில்களைச் செய்பவர்கள் பலருக்கும் நாங்கள் இந்தக் கடனை வழங்கிவருகிறோம். அவர்களும் நல்ல முறையில் திருப்பிச் செலுத்திவருகிறார்கள். அவர்களுக்கு வங்கிக்கடன் அளிக்கும்போது, உண்மையிலேயே தொழில் நடத்துகிறார்களா என்பதை மட்டும் நேரில் சென்று பார்ப்போம். மற்றபடி, இந்த வங்கிக்கடன் பெறுவது எளிய நடைமுறைதான். முறையாகத் தொழில் நடத்தினால், கடனைத் திருப்பிச் செலுத்துவதும் கடினமில்லை.

கட்சிக்காரர்களின் தலையீடுதான் எங்களுக்குப் பெரிய தலைவலியாக உள்ளது.

ஆனால், கட்சிக்காரர்களின் தலையீடுதான் எங்களுக்குப் பெரிய தலைவலியாக உள்ளது. கட்சி வேறுபாடில்லாமல் அனைத்துக் கட்சியினரும் பரிந்துரைக் கடிதங்களுடன் எங்களை அணுகுவார்கள். குறிப்பாக, முத்ரா லோனைப் பொறுத்தவரை பா.ஜ.க சார்பில் அதிக அளவில் வருகிறார்கள். இவர்களில், போலியாக வங்கிக் கடன் பெற நினைப்பவர்களுக்கு கொடுக்க மறுப்போம். அப்படி மறுக்கும்போது, எங்களுக்கு நெருக்கடி தருவார்கள். அதற்கும் படியவில்லையென்றால், சிலர் மேலதிகாரிகள்வரை தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்து வங்கிக் கடன் பெறுகிறார்கள். இப்படிப் பெறுபவர்கள் ஒழுங்காகத் திரும்பச்செலுத்துவது கிடையாது. ஒரு வருடத்திற்குள்ளாகவே அந்தக் கடன், வாராக்கடனாகும்போது எங்களுடைய சம்பள உயர்வு, பணி நேர்மை உள்ளிட்டவைகளைப் பாதிக்கிறது" என்றார்கள்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Vikatan

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் என்.பி.சத்தியமூர்த்தியிடம் கேட்டோம். ``அவர், லோன் வேண்டும் என்று வரும் தொண்டர்களுக்கு வழிகாட்டுகிறார். அவ்வளவுதான். கட்சி அடையாள அட்டையெல்லாம் கேட்பதில்லை. இதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. கட்சிரீதியாக நாங்கள் எப்போதும் வங்கிகளை அணுகுவதோ நெருக்கடி கொடுப்பதோ இல்லை." என்றார்.

சிறுதொழில் வளர்ச்சிக்கு முத்ரா லோன் பயனுள்ளதாக இருப்பது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் தவறான நபர்களுக்கு கடன் தரப்படுவதால் வாராக்கடனும் அதிகரித்துவருகிறது. வழங்கப்பட்ட முத்ரா கடன்களில் சுமார் 10 சதவிகிதம் அளவுக்கு வாராக்கடனாக இருக்கிறது. முத்ரா கடனில், ரூ.50,000 வரை வழங்கும் கடனுக்கு 'சிசு கடன்' என்று பெயர். இந்தக் கடனில்தான் அதிகபட்சமாக 13% அளவுக்கு வாராக்கடனாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகரிப்பதற்கு இப்படி கட்சித் தலையீடும் ஒரு காரணமாக இருப்பதை மத்திய நிதி அமைச்சர் உணர வேண்டும். இதைத் தடுப்பதற்கு வழி கண்டறியாமல், பொதுத்துறை வங்கிகளைக் குறைப்பதும் தனியார்மயமாக்க முயற்சி செய்வதும் தொழில்முனைவோர்களைத்தான் பெரிதும் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு