Published:Updated:

பான் கார்டுகளுக்குப் பதில் ஆதார் அட்டை! - மத்திய அரசின் புதிய அறிவிப்பு

ரூ.50,000-த்துக்கு மேலான பணபரிவர்த்தனைகளுக்கு ஆதார் அட்டையை அடையாள அட்டையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஆதார் அட்டை, பான் கார்டு
ஆதார் அட்டை, பான் கார்டு

கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையாக ரூ.50,000-த்துக்கும் மேலான பணபரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்ற விதி அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில், பான் கார்டுகளுக்குப் பதிலாக ஆதார் அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

வரி செலுத்துவது உள்ளிட்ட பான் கார்டுகள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு நடைமுறைகளுக்கும் ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வரி செலுத்துவோருக்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய மத்திய வருவாய்த் துறை செயலாளர் அஜய்பூஷன் பாண்டே, `இன்றைய சூழலில் 22 கோடி பான் கார்டுகள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம், 120 கோடிக்கும் அதிகமான மக்களிடம் ஆதார் அட்டை இருக்கிறது. இந்தநிலையில், பான் கார்டு தேவைப்படும் ஒருவர், ஆதார் அட்டை மூலம் அதை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

பான் கார்டு
பான் கார்டு

தற்போது, ஆதார் அட்டை இருப்பதால், ஒருவர் பான் கார்டு எண்ணைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. வங்கிகளில் ரூ.50,000-த்துக்கும் மேல் பணபரிவர்த்தனை செய்ய, வருமான வரி செலுத்த உள்ளிட்ட பான் கார்டுகள் அவசியம் தேவை என்ற நடைமுறைகளில் அதற்குப் பதிலாக ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.