Published:Updated:

வங்கிக் கணக்குக்கான அதிகபட்ச இன்ஷூரன்ஸ் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுமா?

1968-ல், வங்கிக் கணக்குகளுக்கான அதிகபட்ச இன்ஷூரன்ஸ் தொகை 5,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது 1970-ல் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

வங்கி டெபாசிட்
வங்கி டெபாசிட் ( vikatan )

வங்கிக் கணக்குக்கான அதிகபட்ச இன்ஷூரன்ஸ் தொகை 1 லட்சம் ரூபாய் என்பது மாற்றியமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு, வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓரளவு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
vikatan

கடந்த சில ஆண்டுகளாகவே, வங்கிகள் வாராக்கடனால் தத்தளிப்பதும், மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று பதுங்குவதும் வாடிக்கையாக உள்ளது. மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளின் நிதி ஆதாரத்தை உயர்த்தும் விதமாக, பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் & மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள், வாராக்கடன் மோசடி காரணமாகத் தங்களது சொந்தப் பணத்தையே எடுக்க முடியாதபடி தவித்ததை நாடே பார்த்தது. நாடு முழுக்க உள்ள அந்த வங்கியின் 137 கிளைகளில், மொத்தம் ரூ.11,000 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வங்கியில் மோசடி நடந்திருப்பது தெரியவந்ததுமே அதன் வாடிக்கையாளர்கள், அதிகபட்சம் 1,000 ரூபாய் மட்டுமே வங்கிக்கணக்கிலிருந்து எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

லட்சக்கணக்கான தொகையை டெபாசிட் செய்திருந்தாலும் வெறும் 1,000 ரூபாய்தான் எடுக்க முடியும் என்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிலர், விரக்தியால் உயிரிழந்தனர். தற்போது, டெபாசிட்டுகளைத் திரும்பப்பெறுவதற்கான தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, அதிகப்பட்சம் 50 ஆயிரம் ரூபாய்வரை எடுக்கலாமென்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கெடுபிடியான சூழல், வங்கி வாடிக்கையாளர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியது.

வங்கி டெபாசிட்டுகளுக்கான இன்ஷூரன்ஸ்
வங்கி டெபாசிட்டுகளுக்கான இன்ஷூரன்ஸ்
vikatan

இதன்பிறகு, வங்கி டெபாசிட்டுகளுக்கான அதிகபட்ச இன்ஷூரன்ஸ் மதிப்புகுறித்து வாடிக்கையாளர்களிடையே கேள்வி எழுந்தது. ஒரு வங்கி திவாலாகும்போது, அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை மட்டுமே திருப்பியளிக்கப்படும் என்ற விதிமுறைமீது கடும் விமர்சனம் எழுந்தது. வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கான இன்ஷூரன்ஸ் எப்படி, யாரால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

டெபாசிட்டுகளுக்கான இன்ஷூரன்ஸ் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான இன்ஷூரன்ஸை, வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (Deposit Insurance and Credit Guarantee Corporation –DICGC) என்ற அமைப்புதான் நிர்ணயிக்கிறது. இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகள், வட்டார வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகள் ஆகியவை டி.ஐ.சி.ஜி.சி-யால் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

வங்கி டெபாசிட்
வங்கி டெபாசிட்
vikatan

1993-ம் ஆண்டு இந்தியாவிலிருந்த வங்கிகளில் டெபாசிட் செய்திருந்தவர்களில், 90% வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில், அதிகபட்சம் ரூ.1 லட்சம் அல்லது அதற்கும் குறைவான தொகையே இருந்தது. அந்தக் கணக்கீட்டின்படியே வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கான இன்ஷூரன்ஸ் தொகை, அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஷூரன்ஸ் தொகை, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

1968-ம் ஆண்டில் வங்கிக் கணக்குக்கான அதிகபட்ச இன்ஷூரன்ஸ் தொகை 5,000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து, 1970-ம் ஆண்டில் இன்ஷூரன்ஸ் தொகை 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அடுத்து 6 ஆண்டுகள் கழித்து, 1976-ம் ஆண்டில் 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அடுத்த நான்காண்டுகளில், 1980-ம் ஆண்டு, 30,000 ரூபாயாக மாற்றப்பட்டது. கடைசியாக, 26 ஆண்டுகளுக்கு முன்னர், 1993-ம் ஆண்டு 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்பின், இன்றுவரை உயர்த்தப்படாமலேயே தொடர்கிறது. இதைத்தான் தற்போது உயர்த்தியமைக்க உள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

வங்கி டெபாசிட்
வங்கி டெபாசிட்
vikatan

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. நீண்டகாலமாக உயர்த்தப்படாததால், தற்போதுள்ள பணவீக்கத்துக்கேற்ப குறைந்தது 10 லட்சம் ரூபாயாகவாவது உயர்த்த வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மத்திய அரசு என்ன முடிவெடுக்குமென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

`நடப்பு நிதியாண்டிலேயே விற்பனை'- ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் குறித்து நிர்மலா சீதாராமன்!