Published:Updated:

ஹெச்.எஸ்.பி.சி, டாய்ச் வங்கிகளில் 28,000 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பு... இந்தியர்கள் எத்தனை பேர்?

லண்டனில் உள்ள வங்கியில்தானே பணிநீக்கம். அதில் நமக்கு என்ன பிரச்னை என்கிறீர்களா?

பணிநீக்கம்
பணிநீக்கம்

பொருளாதார மந்தம், வேலையிழப்பு, பணி நீக்கம் என்ற குழப்பங்களெல்லாம் இந்தியாவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் இருக்கவே செய்கின்றன. சர்வதேச வங்கிகளான ஹெச்.எஸ்.பி.சி மற்றும் டாய்ச் வங்கி ஆகியவை தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இதனால் அந்த வங்கியின் பணியாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க 67 நாடுகளில் தனது கிளைகளை வைத்திருக்கும் ஹெச்.எஸ்.பி.சி வங்கி 10,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவுசெய்துள்ளது.

பயத்தில் இந்திய ஊழியர்கள்!

லண்டனில் உள்ள வங்கியில்தானே பணி நீக்கம். அதில் நமக்கு என்ன பிரச்னை என்கிறீர்களா?

சுமார் 67 நாடுகளில் 3,900 கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் மொத்தம் 2.38 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 200 ஊழியர்களை இந்த வங்கி பணிநீக்கம் செய்தது. அதில் 150 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 10,000 பேரை பணிநீக்கம் செய்யப் போவதால், அந்த பட்டியலில் எத்தனை இந்தியர்கள் இருக்கப் போகிறார்களோ என இந்திய பணியாளர்கள் பயத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள்.

பணிநீக்கம் உறுதி!

கடந்த திங்கட்கிழமையன்று இந்த வங்கியின் தலைமை நிர்வாகி பதவி விலகிய பிறகு, பலவீனமான உலகளாவிய பொருளாதார நிலையால், இவ்வங்கி 4,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. ஆனால் மற்றொரு அறிக்கையில் ஹெச்.எஸ்.பி.சி வங்கி 10,000 பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் எது உண்மையான அறிவிப்பு என்று தெரியாவிட்டாலும் பணி நீக்கம் என்பது உறுதியாகியிருக்கிறது. அதிகளவில் ஊதியம் பெறும் ஊழியர்களைக் குறிவைத்து இந்தப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த வங்கியின் முதல் பாதி ஆண்டில் நிகரலாபம் 18.6 சதவிகிதம் அதிகரித்து, 8.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ள வேளையில் பணிநீக்க நடவடிக்கைகளை இந்த வங்கி முன்னெடுப்பது கவனிக்கவேண்டிய விஷயம்.

பணிநீக்கம்
பணிநீக்கம்

டாய்ச் வங்கியில் 18,000 பேர்!

ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ராங்க் ஃபர்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்  சர்வதேச வங்கி டாய்ச். இது வணிகப் பிரிவான முதலீட்டு வங்கிப் பிரிவை, மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வாறு மறுசீரமைப்பதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெறமுடியும் என்றும், நஷ்டத்தினை குறைக்கமுடியும் என்றும் அறிவித்துள்ளது. இது அதிகப்படியான செலவினை குறைத்து, லாபத்துக்கு வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் செலவுகளை சேமிக்கப் பல புதிய வணிகங்களையும் தேடி அலைவதாகவும் இவ்வங்கி அறிவித்துள்ளது. இதன் முதல்கட்டமான செலவினங்களை குறைக்க 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது டாய்ச்.

Deutsche Bank
Deutsche Bank

இந்த வங்கியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 91,700 என்றாலும், கடந்த ஆண்டு இறுதியில்தான் இவ்வங்கி 41,700 பேரை வேலைக்கு அமர்த்தியது. இந்த வங்கி வரும் டிசம்பருக்குள் இதுகுறித்து ஒரு முக்கிய முடிவு எடுக்கும் என்றும், இதற்கு நிதி கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதல் தேவை என்றும் கூறப்படுகிறது. டாய்ச் மேற்கொள்ளும் இந்தப் பணிநீக்கமானது அடுத்து வரும் 2021-ம் ஆண்டு இறுதிக்குள் இருக்கும் என்றும், இந்தப் பணி நீக்கத்தால் ஜெர்மனி தவிர இதன் கிளைகள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இதன் பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Vikatan

இதே போலத்தான், கடந்த மாதம் ஜெர்மனியின் மிகப்பெரிய வங்கியான காமர்ஸ் பேங்க் 4,300 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதவிர 200 கிளைகளை மூடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தது. பிரான்ஸ் சொசைட்டி ஜெனரல் 1,600 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும் முன்னரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணிநீக்கம்
பணிநீக்கம்

பணி நீக்கத்துக்கு என்ன காரணம்?

உலகளாவிய பொருளாதார மந்த நிலையால், அனைத்து நாடுகளிலும் மத்திய வங்கிகள் வட்டி குறைப்பைச் செய்வதால், வங்கிகளுக்குக் கிடைக்க வேண்டிய லாபம் குறைகிறது. குறைந்த வட்டி விகிதங்களால் வங்கிகளுக்குக் கிடைக்க வேண்டிய மிகப்பெரிய வருவாயான வட்டி வருவாய் குறைகிறது. மேலும் தங்களின் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்க, வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதங்களை அதிகமாகத் தருவதாக கூறி, கவரவேண்டிய சூழ்நிலை. இந்த வகையில் வரவு குறைவு என்பதோடு, செலவினங்களும் அதிகம். அவற்றைக் குறைப்பதற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றன.