Published:Updated:

`வயல்வெளி, ஏரி, குளங்களிலும் ஏ.டி.எம் சேவை’- புதுச்சேரி பாரதியார் கிராம வங்கியின் அசத்தல் முயற்சி

நடமாடும் ஏ.டி.எம்
நடமாடும் ஏ.டி.எம்

கொரோனா தொற்றுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு உதவும் விதமாக நடமாடும் ஏ.டி.எம் மையத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி.

கொரோனா தொற்றுக்காக புதுச்சேரியில் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக மட்டுமே நேரக்கெடு விதிக்கப்பட்டு கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 6 மணி முதல் மதியம் 1 வரைதான் அனுமதிக்கப்பட்ட நேரம் என்பதால் அனைவருமே அந்த நேரத்தில் மட்டுமே வெளியே வருகிறார்கள். அப்போது ஏற்படும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று ஏ.டி.எம் மையங்கள். அனைவரும் ஒரேநேரத்தில் ஏ.டி.எம் மையங்களைப் பயன்படுத்துவதால் அங்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

கொடியசைத்து துவக்கி வைக்கும் முதல்வர் நாராயணசாமி
கொடியசைத்து துவக்கி வைக்கும் முதல்வர் நாராயணசாமி

அந்த நேரத்தில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் தீர்ந்துவிட்டால் அடுத்த இயந்திரத்தை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்குள் அரசு அனுமதித்த நேரக்கெடு முடிந்துவிடுவதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதை தடுக்கும்விதமாக இந்தியன் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், வீட்டின் வாசலிலேயே பணப்பரிவர்த்தனை செய்வதற்கு வசதியாக புதுச்சேரியில் இயங்கிவரும் பாரதியார் வங்கி நடமாடும் ஏ.டி.எம் இயந்திர சேவையைத் தொடங்கியிருக்கிறது. முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு துவக்கி வைத்த இந்த விழாவில் இந்தியன் வங்கி, நபார்டு மற்றும் பாரதியார் கிராம வங்கிகளின் மேலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாரதியார் வங்கிகளின் தலைவர் மார்கரெட் லெடிஷியா, ``சாதாரண நாள்களில் மக்கள் ஏ.டி.எம் மையங்களுக்கு வந்து பணப்பரிவர்த்தனை செய்துகொள்வார்கள். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் ஏ.டி.எம் மையங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கிறார்கள். அந்த சிரமங்களைத் தவிர்க்கும் விதமாகத்தான் நடமாடும் ஏ.டி.எம் சேவை முறையை ஏற்படுத்தியிருக்கிறோம்.

பாரதியார் வங்கிகளின் தலைவர் மார்கரெட் லெடிஷியா
பாரதியார் வங்கிகளின் தலைவர் மார்கரெட் லெடிஷியா

எங்கள் வங்கி இந்தியன் வங்கியின் சார்புடைய வங்கி என்பதால் அந்த ஏ.டி.எம் இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும் வாகனம் மக்கள் கூடும் இடங்களான காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை போன்ற இடங்களில் நிறுத்தப்படும். அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்தியும் இதில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புப் பணியாளர்கள் தற்போது வேலையைத் தொடங்கிவிட்டனர். மாதம் மற்றும் வாரந்தோறும் அவர்களுக்கு சம்பளம் வழங்கும் தேதிகளில் அவர்கள் வேலை செய்யும் இடங்களான வயல்வெளிகள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எங்கள் ஏ.டி.எம் வாகனத்தை நிறுத்துவோம்.

தேசிய ஊரக வேலை வாய்ப்புப் பணியாளர்கள்
தேசிய ஊரக வேலை வாய்ப்புப் பணியாளர்கள்

அதன்மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்திலேயே எந்தவித சிரமமுமின்றி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்பதுடன் அவர்களின் அலைச்சலையும் குறைக்க முடியும். அதேபோல புதுச்சேரியில் இருக்கும் அனைத்துக் கிராம மக்களும் இந்தச் சேவை மூலம் பயனடைவார்கள். தற்போது ஒரு நடமாடும் ஏ.டி.எம் வாகனத்தை மட்டுமே அற்முகப்படுத்தியிருக்கிறோம். மக்களின் வரவேற்பு மற்றும் தேவைகளைப்பொறுத்து அதன் எண்ணிக்கையை அதிகரிப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு