Published:Updated:

ரெப்போ விகிதம் குறைப்பு - வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பலன் அளிக்குமா?

இந்த ஆண்டில் ஏற்கெனவே, நான்கு முறை ரெப்போ விகிதம் குறைத்திருக்கும் நிலையில், 5-வது முறையாக மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது.

ரெப்போ விகிதம்
ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம் என்பது வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து, பெற்ற கடனைத் திருப்பி செலுத்தும்போது செலுத்தக் கூடிய வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் குறையும். இதனால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கும் கடன்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கும்.

சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

ஏற்கெனவே நடப்பு நிதியாண்டில் 4 முறை வட்டி விகிதத்தை 1.10 சதவிகிதம் வரை குறைத்துள்ள நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது 0.25 சதவிகிதம் வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது. இந்த ரெப்போ வட்டி விகிதக் குறைப்புக்கு முன், ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் 5.4 சதவிகிதமாக இருந்தது. இது இப்போது 5.15 சதவிகிதமாக இருக்கும். ஏற்கெனவே, கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வட்டி குறைப்பு, மேலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் கடன் தேவையை இது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Vikatan

குறிப்பாக, உற்பத்தி துறைக்கு இன்னும் குறைந்த வட்டிக்குக் கடன் கிடைத்து தங்கள் வியாபாரத்தைப் பெருக்க உதவும் என்கிறார்கள். அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து, வங்கிகள் ரெப்போ ரேட் விகிதத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கான கடன் விகிதங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, புதிதாக கடன் வாங்கியவர்கள், பழைய கடன்களை ரெப்போ ரேட் அடிப்படையிலான கடன்களாக மாற்றியவர்கள் எல்லோருக்கும் இந்த வட்டி குறைப்பினால் நன்மை ஏற்படும். எனவே, வீட்டுக் கடன், கார் கடன் போன்றவைகளுக்கான வட்டி குறையும்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

5-வது முறையாக வட்டி விகிதம் குறைத்திருப்பது குறித்து பேசிய, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், ``ஒரு நாட்டின் பொருளாதார நிலையை, பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்காக, அந்த நாட்டின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தைக் குறைப்பது உலகளவில் இருக்கும் வழக்கம். அப்படிக் குறைக்கும்போது, அதைச் சார்ந்துள்ள மற்ற வங்கிகள் அனைத்தும் பலனடையக்கூடும். அந்தப் பலனை, வாடிக்கையாளர்களின் வங்கிக்கடன் வட்டியைக் குறைப்பதன் மூலமாக, மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். அதன் எதிரொலியாகப் பொருளாதாரம் மேம்படும்" என்றார்.