Published:Updated:

`25 ஆண்டுகள் சேவை... 55 வயது நிறைவு!’ - வி.ஆா்.எஸ் மூலம் பணியாளா்களைக் குறைக்க எஸ்.பி.ஐ திட்டம்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 30,000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவரவிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கியின் மனிதவளத்தையும் செலவுகளையும் மேம்படுத்த, விருப்ப ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்களிபடி மொத்தம் 11,565 அதிகாரிகள், 18,625 ஊழியர்கள் என மொத்தம் 30,190 எஸ்.பி.ஐ ஊழியர்கள் இந்த திட்டத்துக்குத் தகுதி பெறுவார்கள். வி.ஆர்.எஸ்-ஸுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறுவதற்காகக் காத்திருப்பில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ

இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான தேதியில், 25 ஆண்டுகள் சேவையில் ஈடுபட்டுள்ள அல்லது 55 வயதை நிறைவு செய்த அனைத்து நிரந்தர அதிகாரிகளும் ஊழியர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப காலம் டிசம்பர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் 2.57 லட்சமாக இருந்த எஸ்.பி.ஐ-யின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை, 2020, மார்ச் மாத இறுதியில்ல் 2.49 லட்சமாக மாறியிருக்கிறது.

ஜூலை மாதச் சம்பளத்தின் அடிப்படையில் மதிப்பிடுகையில், தகுதி வாய்ந்த 30% ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றால், இதன் மூலம் வங்கியின் நிகர சேமிப்பு 1,660 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வி.ஆர்.எஸ்-ன் கீழ் ஓய்வு பெறுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழியருக்கு எஞ்சியிருக்கும் சேவை காலத்துக்கு (அதிகபட்சம் 18 மாதங்கள்) 50% சம்பளம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இது குறித்து காங்கிரஸின் முத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம், `வி.ஆர்.எஸ் திட்டத்தை ‘பொருளாதார நடவடிக்கையாக’ச் செயல்படுத்த எஸ்.பி.ஐ திட்டமிட்டுள்ளது என்று செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. சாதாரண காலங்களில் இது போன்ற திட்டம் விவாதத்துக்குரியதாக மட்டும் இருக்கும். ஆனால், இந்த அசாதாரண காலத்தில், பொருளாதாரம் சரிந்து, வேலைவாய்ப்பே கேள்விக்குறியாக இருக்கும்போது ​​அது கொடூரமானது. இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமே வேலைவாய்பைக் குறைக்கிறதென்றால் மற்ற பெரிய முதலாளிகளும் எம்.எஸ்.எம்.இ-க்களும் என்ன செய்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இந்தத் திட்டம் வெளிப்படையாக அவரவர் விருப்பத்துக்குரியதுதான். ஆனால், இது வங்கி ஊழியர்கள்மீது நுட்பமான அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை அறிவோம். தற்போது நடைமுறையிலுள்ள விதிகள் சரியான விருப்ப ஓய்வூதியத்தை வழங்கினால், ஏன் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து 30,190 என்ற சரியான எண்ணிக்கையையும் வழங்க வேண்டும்’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

கருணைத் தொகை மட்டுமல்லாமல், வி.ஆர்.எஸ் பெறுபவர்களுக்கு கிராஜுட்டி, ஓய்வூதியம், வருங்கால வைப்பு, மருத்துவச் சலுகைகள் போன்ற பிற சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு