Published:Updated:

கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்... ரூ.5 லட்சம் கோடி என்னாகும்?

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் ரூ.4.84 லட்சம் கோடியின் கதி என்னவாகும் என்ற கவலையை சிலர் வெளிப்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த வாரம் முடிவுசெய்யப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் பல மாநிலங்களில் கிளைகள் உள்ள கூட்டுறவு வங்கிகள் ஆகியவை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும், வணிக வங்கிகளுக்கு உண்டான அனைத்து நடைமுறைகளும் இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் இருக்கும் என்றும் அவர் கூறினார். அதைத் தொடர்ந்து, மத்திய அரசு இதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி) நடைபெற்ற பெரும் முறைகேடுகளைத் தொடர்ந்து நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெல்வதென்று மத்திய அரசு முடிவு செய்தது. தற்போது அந்த முடிவை அரசு நிறைவேற்றியுள்ளது. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடி முதலீட்டாளர் இருக்கிறார்கள். அவர்கள் ரூ.4.84 லட்சம் கோடி ரூபாயை இந்தக் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்கள். இந்தப் பணத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சிலர் வரவேற்றாலும், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், ஆளும் அ.தி.மு.க-வும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சரான செல்லூர் ராஜு,

"தற்போது பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்வதை ஏற்க முடியாது. இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன்தான் தமிழகத்தின் கூட்டுறவு வங்கிகள் இயங்கிவருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஊழியர்களை தமிழக அரசு நியமிப்பதில் பாதிப்பு ஏற்படும். பிற மாநிலங்களில் முறைகேடுகள் நடைபெற்றதால் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதுபோன்ற பிரச்னைகள் இல்லை” என்று கூறியுள்ளார்.

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

அதுபோக, மாநிலங்களின் அதிகாரங்களை மோடி அரசு பறித்துவருகிறது என்று குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்கு இந்த விவகாரம் மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் செயல்பட்டுவரும் நிலையில், மாநில அரசுகளுடன் கலந்து பேசாமலேயே அவற்றை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெல்ல மத்திய அரசு முடிவு செய்தது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. கொரோனா பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது மிகவும் தவறானது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

தமிழகத்தில் கூட்டுறவுப் பதிவாளரின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 128 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் 120-க்கும் மேற்பட்ட வங்கிகள் லாபத்தில் இயங்கக்கூடியவை என்று சொல்லப்படுகிறது. மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இந்த வங்கிகளை மத்திய அரசு ஏன் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுசெல்ல வேண்டும் என்ற கேள்வியையும் பலர் எழுப்புகிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது, "கூட்டுறவு வங்கிகள் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவை. வணிக வங்கிகளைக் காட்டிலும் கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகள் உள்ளன. குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. இனிமேல் கூடுதல் வட்டி கிடைக்காது. கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இனிமேல் அது செலுத்த வேண்டியிருக்கும். கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் சரியானது. ஆனால், ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுசென்று பிற்காலத்தில் ஏதேவொரு காரணத்தைச் சொல்லி கூட்டுறவு வங்கிகளைத் தனியாரிடம் கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ரூ.4.84 கோடி டெபாசிட் தொகை இருக்கிறது. இவற்றை அரசின் கடன் வழங்கும் திட்டங்களுக்கு பயன்படுத்துவது என்று மத்திய அரசு முடிவுசெய்தால், அந்தப் பணம் டெபாசிட்தாரர்களுக்குத் திரும்பக் கிடைப்பதற்கு உத்தரவாதமில்லாமல் போய்விடும் ஆபத்தும் உள்ளது” என்றார்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

இந்தியாவில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் பெரும்பாலானவை தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ளன. வீட்டுக் கடன், சிறுவணிகக் கடன், பண்ணைசாராக் கடன், நகைக்கடன் போன்ற கடன்களை இந்த வங்கிகளில் கொடுக்கிறார்கள். பி.எம்.சி மட்டுமல்லாமல் பல்வேறு நகர்ப்புற வங்கிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1,000 புகார்கள் வரை வந்துள்ளன. அதே நேரத்தில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுசெல்வதை ஒரு தரப்பினர் ஆதரிக்கிறார்கள். வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1947-ன் படி, கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ளன. கூட்டுறவு வங்கிகளுக்கு லைசென்ஸ் வழங்குவது உள்ளிட்ட அதிகாரங்கள் ரிசர்வ் வங்கியிடம் உள்ளன. அதே நேரம், கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடம்தான் இருக்கிறது. இதனால், மாநிலத்தில் ஆட்சியதிகாரத்துக்கு வருபவர்களும் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளும் கூட்டுறவு வங்கிகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், இதனால் அவை இழப்புகளைச் சந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டால், இந்த முறைகேடுகள் நடக்காது என்று சிலர் வாதிடுகிறார்கள்.

`ஒரே நாடு, ஒரே கல்வி' ; உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க நிர்வாகியின் பொதுநல மனு... வலுக்கும் எதிர்ப்பு!

இது குறித்து பா.ஜ.க-வின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசியபோது, "கூட்டுறவு வங்கிகளில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. ஆளும்கட்சியின் துஷ்பிரயோகம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், டெபாசிட் பணம் சரியான பயனாளிகளுக்குப் போய்ச்சேர வண்டும் என்பதற்காகவும்தான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஏராளமான புகார்கள் எழுந்ததும் இதற்கு முக்கியக் காரணம். எனவே, மாநில உரிமைகளைப் பறிக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், கூட்டுறவு வங்கிகளின் பாதுகாப்புதான் நமக்கு முக்கியம்” என்றார்.

ரூபாய் நோட்டு
ரூபாய் நோட்டு

தற்போது, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை மட்டுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஆனால், மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவை மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் செயல்பட்டுவருகின்றன. விவசாயிகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள்தான், விவசாயிகளுக்கு கடன் வழங்கிவருகின்றன. இந்த வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுசெல்ல வேண்டும் என்ற குரல் மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு