Published:Updated:

``கொரோனா காலகட்டமும் கொள்ளையடிக்கும் காலகட்டமா?" விஸ்வரூபமெடுக்கும் `தள்ளுபடி - தள்ளிவைப்பு’ பிரச்னை

நீரவ் மோடி, பாபா ராம்தேவ், விஜய் மல்லையா
நீரவ் மோடி, பாபா ராம்தேவ், விஜய் மல்லையா

வங்கி வாராக்கடன் 68,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றன எதிர்க்கட்சிகள். ஆனால், `இது தள்ளுபடி அல்ல; தள்ளிவைப்புதான். இதனால், வாராக்கடன்களை விரைவாக வசூலிக்க முடியும்' என்று விளக்கம் சொல்கிறது மத்திய அரசு.

'நிரவ் மோடி, விஜய் மல்லையா, பாபா ராம்தேவ் உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி' என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்நேரத்தில்தான், `கொரோனா ஊரடங்கினால், வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க 65,000 கோடி ரூபாய் தேவை' என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்திருப்பது அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது!

எதிரும் புதிருமான இந்தச் செய்திதான் ஊரடங்கில் முடங்கிக்கிடக்கும் மக்களிடையேயும் அதிகம் விவாதிக்கப்படும் செய்தியாகவும் மாறியிருக்கிறது! எளிய மக்களின் வங்கிக் கடன்களை வசூலிக்க, மிரட்டலில் ஆரம்பித்து சொத்து பறிமுதல் வரையிலாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் வங்கிகள், பெருமுதலாளிகளின் `ஆயிரம் கோடி'களிலான கடன்களை அசால்ட்டாகத் தள்ளுபடி செய்திருப்பது சாமான்ய மக்களை அதிர்ச்சியடைய வைத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை!

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலைக் கேட்டு ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி. ஆனாலும் மத்திய பா.ஜ.க அரசு, பட்டியல் வழங்காததையடுத்து, அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. ஆனால், இதே கேள்வியை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியே கேட்டுப் பதிலையும் பெற்றிருக்கிறார் சாமான்யர் ஒருவர். அவரது பெயர் சாகேத் கோகலே!

`வங்கிக்கடன் செலுத்தாத பெருங்கடனாளிகளில் 50 பேர் பட்டியலைத் தருமாறு' தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியே சாகேத் கோகலே கேட்டிருந்த கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்திருந்த 50 பேர் பட்டியல்தான் இப்போது நாடு முழுக்க பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பட்டியலில், கடனாளிகளின் பெயர் அவர்களது நிறுவனம் திருப்பிச் செலுத்தாத தொகை உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கிக்கடனை கட்டமுடியாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற தொழிலதிபர்களில் ஆரம்பித்து, சில தினங்களுக்கு முன்பு, கொரோனா நிவாரண நிதியாக கோடிகளை அள்ளி வழங்கிய பெரும் பணக்காரர்களின் நிறுவனங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, `ஏழைகளின் சிரமங்களை கருத்தில்கொள்ளாத மத்திய பா.ஜ.க அரசு, வழக்கம்போல் பெரும் பணக்காரர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்து கருணை காட்டியிருக்கிறது' என்று எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சிக்க... `வாராக்கடன்களை ஒரேயடியாக தள்ளுபடி செய்துவிடவில்லை; தள்ளி வைத்திருக்கிறோம்... அவ்வளவுதான்' என்று சமாதானம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதற்குமுன், வங்கிக்கடன் தள்ளுபடி என்றால் என்ன, தள்ளி வைப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, வங்கிகளிலிருந்து குறைந்த வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களை வாங்கியவர்கள் முறையே அசல் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தாமலே இருக்கும்போது, அது வங்கி நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது.

அதாவது, கடனாகக் கொடுக்கப்பட்டுள்ள தொகையானது தொடர்ந்து வங்கியின் `செயல்படாத சொத்து'க் (Non Performing Assets-NPA) கணக்காகவே காட்டப்பட்டு வருகிறது. ஆனால், நடைமுறையில் இந்தத் தொகையானது வசூலிக்கப்படாமல் இருப்பதால், வங்கியின் அடுத்தகட்ட நகர்வுகளில் இது பெரும் சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே, இந்த வாராக் கடன்களை, செயல்படாத சொத்துக் கணக்கிலிருந்து விடுவித்து, `தள்ளிவைப்பு நிதி'யாகக் கையாள்கிறார்கள். இதைத்தான் `விவேகமான நடவடிக்கை' என்கிறது வங்கி வட்டாரங்கள்.

`மொபைலுக்குத் தாலிகட்டிய மணமகன்!' - கேரளாவின் முதல் ஆன்லைன் திருமணம்

இதுகுறித்துப் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், ``கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை; தள்ளித்தான் வைத்திருக்கிறோம் என்று பா.ஜ.க-வினர் சொல்லிவருவது டெக்னிக்கலாக சரியாக இருக்கலாம். ஆனால், நடைமுறை என்னவாக இருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியம்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியின்போதும் இதுபோல், கடன்களை தள்ளி வைத்திருக்கிறார்கள். ஆனால், இப்படித் தள்ளிவைக்கப்பட்ட கடன்களை எல்லாம் அதன்பிறகு எந்தளவு வசூல் செய்திருக்கிறார்கள்... என்ற கேள்விக்குப் பதில் சொன்னால், இப்போது பா.ஜ.க-வினர் சொல்வதையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அப்படி எதுவும் நடைபெறவேயில்லையே! `தள்ளிவைப்பு கடன்களையும் வசூல் செய்திருக்கிறோம்' என்று இவர்கள் காட்டும் புள்ளிவிவரங்களும்கூட, கடன் வாங்கி திருப்பி செலுத்தாமலிருந்த சாமான்யர்களிடமிருந்து மீட்கப்பட்ட கணக்காகவே இருக்கின்றன.

கனகராஜ்
கனகராஜ்

எனவே, என்.பி.ஏ எனப்படும் இந்தத் தள்ளிவைப்பு என்பதே, பெரும் பணக்காரர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான முதல் படி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், சாதாரணமாகவே கடன் தொகையைச் செலுத்தாமல் ஏமாற்றிவருபவர்கள், இப்படி `தள்ளிவைத்த'ப் பிறகு மட்டும் எப்படி செலுத்திவிடுவார்கள்?

மத்தியில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, இந்த 68,000 கோடி ரூபாயோடு சேர்த்து மொத்தம் இதுவரையில் 7 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயை இதுபோல் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இது கடந்தகாலங்களில் செய்யப்பட்ட தள்ளுபடி தொகையைவிடவும் மிக மிக அதிகமான தொகை. மேலும், கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, நாட்டின் முன்னணி பணக்காரர்களின் சொத்துமதிப்புகள் அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருப்பதாக புள்ளிவிவர ஆதாரங்கள் சொல்கின்றன. இந்த 2 செய்திகளையும் இணைத்துப்பார்த்தாலே, உண்மை என்னவென்று எளிதாகத் தெரியும்!

2014-ம் வருடக் கணக்கின்படி, இந்தியாவில் மொத்தம் 1 லட்சத்து 82,000 பேர் டாலர் மில்லியனர்களாக இருந்தனர். ஆனால், 2019-ல் இந்த டாலர் மில்லியனர்களின் எண்ணிக்கை என்பது 7 லட்சத்து 59,000 பேர்களாக அதிகரித்திருக்கிறது என்றால், ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்; பணக்காரர்களோ பெரும் பணக்காரர்களாக அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். பணம் படைத்தவர்களை மேலும் மேலும் பெரும் பணக்காரர்களாக மாற்றுவதுதான் மத்திய ஆட்சியாளர்களின் அடிப்படை நோக்கம். எனவே, வாராக்கடன்கள் தள்ளிவைப்பு என்பது, வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படுகிற நடவடிக்கைதான்!

பொருளாதாரச் சரிவை சரிக்கட்டப்போகிறோம் என்று சொல்லி, கடந்த வருடம் ரிசர்வ் வங்கியிலிருந்து 1 லட்சத்து 76,000 கோடி ரூபாயை எடுத்தவர்கள், அந்தப் பணத்தை எங்கே, யாரிடம் கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு இதுவரை எந்தவிதப் பதிலும் சொல்லவில்லை. இதேபோல், `விட்டுக்கொடுக்கப்பட்ட வரிவருவாய்' எண்ணிக்கையும் இவர்களது ஆட்சியில்தான் அதிகரித்திருக்கிறது. ஆக, இப்படி கண்ணுக்குத் தெரியாமல் அள்ளிவிடுகிற பணமெல்லாம் எந்தக் கணக்கிலும் சேராது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இப்படி லட்சம் கோடிகளை, கணக்குக்கே வராமல் தள்ளிவிடுபவர்கள்தான், எம்.பி-க்களின் சம்பளத்தில் 30 சதவிகிதத்தைப் பிடித்தம் செய்து, நிவாரணம் வழங்கப்போவதாக அறிவிப்பு செய்து மக்களை திசை திருப்புகிறார்கள். இதிலும்கூட அவர்களுக்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது... அதாவது, அரசே நிலைமையைச் சமாளிக்க முடியாமல், `சம்பளப் பிடித்தம் செய்கிறது' என்று தனியார் முதலாளிகளுக்கு `சமிக்‌ஞை' கொடுக்கிறார்கள். எனவே, அரசின் இந்த நிலையைச் சொல்லியே, நாளை தனியார் நிறுவன முதலாளிகளும், தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பதற்கு இது வழிவகுக்கும். இப்போதே 4 மாநிலங்களில், 12 மணிநேர வேலையை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

ஒட்டுமொத்தத்தில், `யானை இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற கதையாக, இந்தக் கொரோனா காலகட்டத்தையும் கூட கொள்ளையடிக்கும் காலகட்டமாகவே பார்க்கிறார்கள் ஆட்சியாளர்கள்'' என்றார் கொதிப்புடன்.

பா.ஜ.க ஆட்சி மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்... ``வங்கி, வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கும் தள்ளி வைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளாமலேயே அல்லது தெரிந்துகொண்டே வேண்டுமென்று விவாதத்தைக் கிளப்பிவருகின்றன எதிர்க்கட்சிகள்.

தள்ளி வைப்பு என்பது, வங்கியின் கடனுக்குத்தான் பொருந்துமே தவிர... கடனை வாங்கியவருக்குப் பொருந்தாது. அடுத்து, தொடர்ச்சியாக நான்கைந்து வருடங்கள் வசூலாகாமல் வாராக்கடனாகவே இருந்துவரும் தொகையானது, வங்கியின் இருப்புநிலைக் கணக்கிலிருந்து மட்டுமே விடுவிக்கப்படும். அதேநேரம், அந்த வாராக் கடன்களை வசூலிப்பதற்கான வேகம் இன்னும் இருமடங்காக அதிகரிக்கப்படும். இதன் தொடர்ச்சியாக, வங்கியின் மூலதனம் அதிகரிப்பதோடு, தேவைப்படுவோருக்கு கடன் அளிக்கவும் வசதி ஏற்படும். இந்த 2 காரணங்களுக்காகவே `தள்ளிவைப்பு' நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

`2 ட்ரக்குகள் முழுவதும் அழுகிய உடல்கள்’ - நியூயார்க்கின் மோசமான நிலையை உணர்த்தும் சம்பவம் #Corona
நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பல வருடங்களாக இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி கடைப்பிடித்துவருகிறது. கடந்த 2013-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது செய்யப்பட்ட `தள்ளிவைப்பு' குறித்து அப்போதைய அமைச்சர் ப.சிதம்பரம், இதுகுறித்து நீண்ட விளக்கமே கொடுத்திருக்கிறார். எனவே, இந்த நடவடிக்கையை, `தள்ளுபடி' என்று சொல்லுவது மிகப்பெரிய தவறு.

கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, `திவால் சட்ட' நடைமுறையின்படி, `தள்ளிவைப்பு' நடவடிக்கையை மேற்கொண்டு, வாராக் கடன்களை மிக வேகமாக முழுவீச்சில் வசூல் செய்துவருகிறோம். இதனால்தான் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 3.35 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வாராக் கடன்களை வசூல் செய்திருக்கிறோம். இதுதவிர, கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து 2.3 லட்சம் கோடி மதிப்புகொண்ட சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்னொரு முக்கியமான விஷயம்.... இந்த வாராக்கடன்களில் 80-லிருந்து 90 சதவிகிதம் வரையிலான கடன்கள் கடந்தகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது கொடுக்கப்பட்டவையே.

பா.ஜ.க ஆட்சியில்தான், பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்தப் பெரும் பணக்காரர்கள்தான், வாராக்கடன்களை வசூலிப்பதில் பா.ஜ.க அரசின் தீவிர நடவடிக்கையைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பயந்து தப்பியும் ஓடியிருக்கிறார்கள். எனவே, பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது என்பதற்காகவே அவர்கள் எல்லோரும் தவறானவர்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்?

நீரவ் மோடி, பாபா ராம்தேவ், விஜய் மல்லையா
நீரவ் மோடி, பாபா ராம்தேவ், விஜய் மல்லையா

அடுத்து, எம்.பி-க்களின் சம்பளத் தொகையில் 30 சதவிகிதத்தை, மத்திய அரசு குறைத்துவிட்டதாகச் சொல்வது தவறு. சம்பளப் பணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை; சலுகைகளில்தான் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுவும்கூட, நன்றாக இருக்கும்போது கொடுத்துவரக்கூடிய சலுகைகளை, கொஞ்சம் இக்கட்டான சூழலில் இருக்கும்போது `கொடுக்க இயலாது' என்று சொல்வது இயல்புதானே!

கடந்த வருடம் ரிசர்வ் வங்கி, தன்னிடம் உபரியாக இருந்த நிதியை, மத்திய அரசுக்கு கொடுத்து உதவியது. எனவே, `ரிசர்வ் வங்கியிடமிருந்த தொகையை, மத்திய அரசே எடுத்துக்கொண்டது' என்று சொல்வதே தவறு. அடுத்ததாக, ரிசர்வ் வங்கி கொடுத்த தொகையில், கடந்த பட்ஜெட்டிலேயே பல்வேறு திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே, கணக்கு காட்டவில்லை என்று சொல்வதும் தவறு!'' என்கிறார் விளக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு