பாகிஸ்தானின் பன்னு மாவட்டத்தில் உள்ள காவல் வளாகத்தை அதனுள்ளே இருந்த பாகிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். அப்போது, போலீஸாரின் ஆயுதங்களைப் பறித்து, அந்த மையத்தில் இருந்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படைகள், 40 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுடன் சண்டையிட்டனர். இறுதியாக, சிறப்புப் படைகள் நேற்று 33 தீவிரவாதிகளையும் கொன்று அனைத்து பணையக் கைதிகளையும் விடுவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் நாடாளுமன்றத்தில்," தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு படையைச் சேர்ந்த இருவர் பலியாகியிருக்கிறார்கள். நடந்த சண்டையில் 10 முதல் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர். டிடிபி என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய தாலிபன் இயக்கத்தினர், காவல் நிலைய தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. கடந்த மாதம் அரசுடனான சண்டையை நிறுத்தும் முடிவை முறித்துக் கொண்டு ஆயுத குழுவினர் தங்களுடைய தாக்குதல்களை தொடர்ந்திருக்கின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.
டிடிபி என்ற இந்த ஆயுதக் குழு 2007-ல் உருவானது. இதைத் தொடர்ந்து 2014-ல் நடந்த ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் இந்த குழு ஒடுக்கப்பட்டது. எனினும் அதன் பிறகும் கூட அதன் உறுப்பினர்கள் தலைதூக்க தொடங்கினர். ஆப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து இந்த குழு தனித்து இயங்கி வருகிறது. இந்த குழுவினர் கைதிகளை சிறைப்பிடித்த பகுதி ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் எல்லையருகில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.