திருட்டுத் தனமாக மாடுகளைக் கொன்று அவற்றின் கொழுப்பில் இருந்து, எண்ணெய் தயாரித்து வந்தவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், துனி ராம்கிருஷ்ணா நகரில் மாடுகளைக் கொன்று அதன் கொழுப்பு மற்றும் இறைச்சி விற்கப்படுவதாகக் காவல் துறையினருக்கு புகார் வந்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது 14 மாடுகளின் தோல்கள், 15 கிலோ மாட்டுக் கொழுப்பு கொண்ட 84 டின்கள், ஒரு இறந்த மாடு, நான்கு உயிருள்ள மாடுகள் இருந்துள்ளன.
சட்ட விரோதமாக மாடுகளைக் கொன்று, அவற்றின் கொழுப்பில் இருந்து எண்ணெய் தயாரித்து, சமையல் எண்ணெயில் கலப்படம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள், முஹம்மத் ஷம்ஷீர் மற்றும் அவரின் மகன் முஹம்மத் ஹரிஃப்பை கைது செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி இன்ஸ்பெக்டர் நாகா துர்கா ராவ் கூறுகையில், ``பசு வதை செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த ஒரு வருடமாக 84 டின்களில் வேகவைத்த கொழுப்பை சேமித்து வைத்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
காக்கிநாடா மாவட்டத்தின் உதவி உணவுக் கட்டுப்பாட்டாளர் பி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ``இறைச்சியை விற்று, கொழுப்பை ராஜமுந்திரி மற்றும் சமல்கோட் வழியாக கவாஹாட்டி மற்றும் சென்னைக்கு எடுத்துச் செல்கின்றனர்’’ என்று கூறியுள்ளார்.