உலகம் முழுவதும் அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள நகரங்கள் குறித்து லொகேஷன் டெக்னாலஜி கம்பெனியான டாம் டாம் (TomTom) ஆய்வு நடத்தியது. இதற்காக 57 நாடுகளில் உள்ள 416 நகரங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில், இந்தியாவில் உள்ள பெங்களூரு நகரம், போக்குவரத்து நெருக்கடியில் முதல் இடத்தில் உள்ளது.

பெங்களூருவைப் பொறுத்தவரை சாதாரணமாக ஒரு இடத்துக்குச் செல்ல ஆகும் நேரத்தைவிட 71% அதிகமான நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு மக்கள் ஓர் ஆண்டுக்கு 243 மணி நேரம், அதாவது 10 நாள்கள் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் மட்டுமே சிக்கி, தங்கள் நேரத்தைக் கழிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ம் தேதி, பெங்களூரு போக்குவரத்து வரலாற்றிலேயே மிகவும் மோசமான நாள் எனக் கூறப்பட்டுள்ளது. அன்று, 103% அதிக நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாம். இந்திய நகரங்களைப் பொறுத்தவரை மும்பை நான்காவது இடத்திலும், புனே ஐந்தாவது இடத்திலும், தலைநகர் டெல்லி 8-வது இடத்திலும் உள்ளன. மும்பையில் 209 மணி நேரமும், புனேயில் 193 மணி நேரமும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்குகின்றனர்.

அதேபோல் பிலிப்பைன்ஸின் மணிலா, துருக்கியின் இஸ்தான்புல் போன்ற சில நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. பெங்களூருவில் இரவு 8 மணிக்கு மேல் பயணித்தால், ஒரு வருடத்தில் ஐந்து மணி நேரத்தை மிச்சம் செய்யலாம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கார்களை ஷேர் செய்து இயக்குவது அல்லது பொது போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்துவதே இந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறந்த வழியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.