கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூரு பகுதியில் உள்ளது சுட்டகுண்டேபாளையம். இதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், வரதட்சணைக் கொடுமை வழக்கு ஒன்றில் சாட்சியாக வாக்குமூலம் அளிக்க, சுட்டகுண்டேபாளைய காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த சப் -இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதசுவாமி, அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக, அப்பெண் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஏப்ரல் 10-ம் தேதி ட்விட்டரில் தொடர்ச்சியான ட்வீட் மூலம் தன் கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் அப்பெண். அதில், `சாட்சி வாக்குமூலம் அளிக்க என்னை காவல்நிலையத்துக்கு அழைத்தனர். அங்கு சென்ற பின் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதசுவாமி முதலில் நல்ல நட்புடன் என்னிடம் பழகினார். ஆனால் மிக விரைவில் அவரது உண்மை முகம் தெரியவந்தது. அவர் என்னிடம் நடந்துகொண்ட நடவடிக்கைகள் எனக்கு மிகவும் சங்கடத்தை அளித்தன. அவருடனான உரையாடலின்போது அவர் என் கையைப் பிடித்துத் தழுவத் தொடங்கினார், எனக்கு பயம் வந்துவிட்டது. மிகுந்த பயத்தால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. முதலில் அங்கிருந்து கிளம்ப நினைத்தேன்.
ஆனால் அவரின் போன் எண்ணை என்னிடம் அளித்து, வீட்டிற்கு சென்று அவருக்கு போன் செய்ய வேண்டும் எனக் கூறினார். உயர் அதிகாரியிடம் பேசிவிட்டு அங்கிருந்து வெளியேறியபோது போது அருவருக்கத்தக்க முறையில் நடந்துகொண்டார். மேலும், மஞ்சுநாதசுவாமி வரதட்சணை கொடுமை வழக்கில் என் வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை. தான் திரும்பி அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்றும், நான் வீட்டுக்குச் சென்றவுடன் என் புகைப்படங்களை அவருக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறினார்” எனப் பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் அப்பெண்.

அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதசுவாமி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.சி.பி பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். அந்த பெண் ட்விட்டரில் பதிவிட்டிருந்த ட்வீட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதை நீக்குமாறு கட்டாயப்படுத்தியதால் ட்வீட்டை டெலீட் செய்ததாக அந்தப் பெண், பத்திரிகைகளில் தெரிவித்துள்ளார்.