
மத்திய அரசு தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகத் தொகுப்புச் சட்டங்களை உருவாக்கியிருக்கிறது
மக்கள்தொகையில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைவிட இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். 130 கோடி பேர் வாழும் இந்தியாவில், தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 50 கோடி; இவர்களில் பெரும்பான்மையோர் இயங்கும் அமைப்புசாராத் தொழில்களே இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகின்றன. இந்தியத் தொழிலாளர்களின் நலன்கள் இதுவரை 44 சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்று இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையக்குழு (Second National Commission on Labour) பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், அச்சட்டங்களிலிருந்து 29 சட்டங்களைத் தொகுத்து ஊதியச் சட்டத்தொகுப்பு (Code on Wages - 2019), தொழில்துறை உறவுகள் சட்டத்தொகுப்பு (Industrial Relations Code - 2020), சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு (Code on Social Security - 2020), தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பு (Occupational Safety, Health & Working Conditions Code - 2020) ஆகிய நான்கு சட்டத்தொகுப்புகளை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
அதன்படி, ஊதியம் வழங்குதல், குறைந்தபட்ச ஊதியம், போனஸ், சம ஊதியம் தொடர்புடைய சட்டங்கள் ஊதியச் சட்டத் தொகுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள், வேலை நீக்கம், நியமனம் தொடர்பான சட்டங்கள் தொழில் துறை உறவுகள் சட்டத் தொகுப்பில் வந்துள்ளன. வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, இழப்பீடு உள்ளிட்டவை சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பில் வந்துள்ளன. பணிச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில், ஜூலை 1 முதல் இவற்றை அமல்படுத்தும் தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.

‘நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தங்கள் நமது தொழிலாளர்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்’ என்று சட்டத்தொகுப்புகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாளன்று பிரதமர் மோடி ட்வீட் செய்தார். சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் சீர்திருத்தமாக, ‘புதிய இந்தியாவுக்குப் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’ என்று மத்திய அரசு முன்வைக்கும் இவை, உண்மையில் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு எதிரானவை என்று நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
“இந்தியத் தொழிலாளர் நலச் சட்டங்களைச் சுருக்கி எளிமைப்படுத்தவே இத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், மிக அதிக அளவிலான தொழிலாளர்களை, ஏற்கெனவே உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் வழங்கும் பாதுகாப்பிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்கிற நோக்கில் புதிய சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, முன்பு 100 ஊழியர்களுக்கு மேல் கொண்டிருக்கும் நிறுவனங்கள் முறையான அறிவிப்பின்றி ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடியாது; வேலையின் தன்மைகள் குறித்த விவரங்களை வரையறுக்க வேண்டியதும் கட்டாயம். இப்போது அந்த வரம்பு 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 300-க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இனி நினைத்த நேரத்தில் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கலாம். இதனால், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள், சில தனியார் பெருநிறுவனங்களின் தொழிலாளர்களைத் தவிர்த்த மிகப்பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் சட்டப்பாதுகாப்பை இழக்க நேரிடும். இது ஒரு உதாரணம் மட்டுமே. இச்சட்டத்திருத்தம், தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களில் விதிகள் உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து பறிக்கின்றன. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். எந்தவொரு சட்டத்திருத்தமும் ஏற்கெனவே இருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கித்தான் செல்ல வேண்டும். ஆனால் இது பின்னோக்கிச் செல்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் தொழிற்சங்கங்கள் உருவாவது சமீப காலங்களில் அதிகரித்துவரும் நிலையில், இந்தியத் தொழிலாளர் கட்டமைப்பை 200 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டுசெல்லும் ஏற்பாடுகள் இந்தச் சட்டங்களில் இருக்கின்றன” என்று கொந்தளிக்கிறார் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்.
தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் மாநிலப் பட்டியலில் இருக்கும் நிலையில், இப்புதிய சட்டத் தொகுப்புகளை அமல்படுத்துவதற்காக, வரைவு விதிகளைத் தயாரித்து 2020-ம் ஆண்டு முதல்நிலை அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஊதிய சட்டத்தொகுப்புக்கான மாநில வரைவு விதிகளை 27 மாநிலங்களும், தொழில்துறை உறவுகள் சட்டத்தொகுப்புக்கான மாநில வரைவு விதிகளை 23 மாநிலங்களும், சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்புக்கான மாநில வரைவு விதிகளை 21 மாநிலங்களும், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பணிநிலைமைகள் சட்டத்தொகுப்புக்கான மாநில வரைவு விதிகளை 18 மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு முதல்நிலை அறிவிக்கையை இதுவரை வெளியிட்டுள்ளன. சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு தவிர, மற்ற சட்டத் தொகுப்புகளுக்கான வரைவு விதிகளை தமிழ்நாடு இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டுள்ளது.
“மத்திய அரசு தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகத் தொகுப்புச் சட்டங்களை உருவாக்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து வெளிநடப்பு செய்த நேரத்தில், நாடாளுமன்ற விவாதமின்றி தொழிலாளர் தொகுப்புச் சட்ட மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டது பெரும் அநீதியாகும். இந்நிலையில், தமிழ்நாட்டின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் மாநிலச் சட்டங்களும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிய தொழில்வாரியான நலவாரியங்களும் ஆபத்தில் உள்ளன” என்று எச்சரிக்கும் சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கர், “தொழிலாளர் - தொழிற்சங்கங்களின் உரிமைகளைப் பறித்து நலவாரியங்களைக் கலைக்கும் மத்திய அரசின் தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற மாநில அரசு வற்புறுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.
“1979-ல் இரா.குலசேகரன் தலைமையில் கட்டடத் தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக, உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டத்தை 1982-ல் மாநில அரசு இயற்றியது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்தி சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இது. அதன்பின் 10 ஆண்டுகள் போராடிய பிறகே இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் 1995-ல் அமைக்கப்பட்டது. 2000மாவது ஆண்டில் 12, 2006-ல் 18 என 30 வகை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் அமைக்கப்பட்டன. இப்போது மொத்தம் 36 உள்ளன. அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யவே இவை இயங்கிவருகின்றன. ஏற்கெனவே உள்ள மாநிலச் சட்டங்களின் கீழ் இயங்கும் நலவாரியங்கள், கட்டடக் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியங்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் இவை. மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பால் இவை முழுவதும் கலைக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. மேலும், அனைத்து வகைப் பணப்பயன்களும் தனியார்மயமாகும் அபாயம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை இந்தச் சட்டத்தொகுப்பு கொண்டுள்ளது. 36 நலவாரியங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. எனவே, மத்திய அரசின் சட்டத் தொகுப்புகளை நிராகரித்து அவற்றுக்கு எதிராக மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்; மாநிலச் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று அழுத்தமாகப் பேசுகிறார் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் ஆர்.கீதா.

மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளும், தொழிலாளர்கள் பணிப்பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்துவருவது கவலையை மேலும் கூட்டுவதாக உள்ளது. விலைவாசி உயர்வால் உள்நாட்டுத் தேவை அல்லது நுகர்வு குறைந்துள்ளது; கொரோனாவிலிருந்து மீண்டு வரும் பொருளாதாரத்தின் வேகமும் மெதுவாக உள்ளது. இந்தப் பின்னணியில், நாட்டில் வேலையின்மை விகிதம், மார்ச் மாதம் 7.6 சதவிகிதத்திலிருந்து ஏப்ரல் மாதம் 7.83 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக, இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) கண்டறிந்திருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்குத் தடையாக இருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தொடர்ச்சியாகத் தளர்த்திவருகிறது. இந்தப் பின்னணியில்தான், இப்புதிய சட்டத்தொகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெரும்பான்மை இந்திய நிறுவனங்கள் தொழிலாளர் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காத நிலையில், முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் சாதகமாக அவற்றை இன்னும் தளர்த்துகிறார்கள். இச்சட்டத்தொகுப்புகள் உழைப்புச் சுரண்டலை மேலும் அதிகப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
முறையாக ஒரு தொழிற்சங்கத்தைக் கட்டமைத்து இந்தியாவிலேயே முதன்முதலாக மே தினத்தைக் கொண்டாடிய பெருமை கொண்டது தமிழகம். அதன் நூற்றாண்டு விழா நெருங்கும் நேரத்தில், தமிழகம் இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறது? மாநில உரிமைகளைப் பறிக்கும் நீட், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் இச்சட்டத்தொகுப்புகளுக்கு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறது என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு!