ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்து வருவதால் ஆன்லைன் ஷாப்பிங் நடைமுறையும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான ப்ளிப்கார்ட், அமேசான், மீஷோ போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துப் பொருட்களை விற்று வருகின்றனர். இதனால் பலரும் தங்களுக்குத் தேவையானவற்றை நேரில் சென்று வாங்குவதைத் தவிர்த்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் சில சமயங்களில் இந்த ஆன்லைன் ஷாப்பிங் என்பது சரியானதாக அமைந்துவிடாது. காரணம் ஆர்டர் செய்யும் பொருள் ஒன்றாகவும், ஆனால் டெலிவரி செய்யப்படும் பொருள் வேறொன்றாகவும் இருக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங்கில் இதுப்போன்ற சம்பங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் நாளந்தாவில் உள்ள பர்வால்பூரில் சேத்தன் குமார் என்ற நபர் மீஷோ-வில் DJI ட்ரோன் கேமரா ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். அவர் ஆர்டர் செய்த ட்ரோன் கேமராவின் விலை ரூ.84,999. 10,212 ரூபாய் தள்ளுபடி என்று இருந்ததால் ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் ஆர்டர் செய்த ட்ரோன் கேமராவுக்குப் பதிலாக ஒரு கிலோ உருளைக்கிழங்கை அவர் பெற்றிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கூட டெல்லியைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ப்ளிப்கார்ட்-ல் லேப்டாப் ஆர்டர் செய்த ஒருவர் அதற்கு பதிலாக டிடர்ஜென்ட் பார்களை பெற்ற சம்பவம் இணையத்தில் வைரலானது. ஆன்லைன் ஷாப்பிங்கில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.