கட்டுரைகள்
Published:Updated:

குப்பையிலிருந்து கேஸ்... அசத்தும் சென்னை மாநகராட்சிப் பள்ளிச்சிறுவன்!

இஷான் மிலன் ஜெய்
பிரீமியம் ஸ்டோரி
News
இஷான் மிலன் ஜெய்

40 நாள்கள் அப்படியே விட்டுட்டு, பிறகு லாரி டயர் டியூபைப் பார்த்தப்போ எனக்கே ஆச்சர்யம். டியூப் ஃபுல்லா கேஸ் நிரம்பிடுச்சி.

“குப்பையை எல்லாம் வீணாக்காதீங்க. நான் சொல்லிக்கொடுக்குற மாதிரி வீட்டிலேயே ரொம்ப ரொம்ப எளிமையா பயோகேஸ் பிளான்ட் அமைச்சு, சிலிண்டருக்குச் செலவு பண்ணுற காசைச் சேமியுங்க. குப்பை குறையும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததா இருக்கும், சிட்டியும் சுத்தமாகும்’’ - மழலை மொழியில் இஷான் மிலன் ஜெய் சொல்லும்போதே ஆச்சர்யமாக இருக்கிறது என்றால், அவன் அதைச் செய்துகாட்டி அதைவிட வியக்கவைக்கிறான்.

குப்பையிலிருந்து கேஸ்... அசத்தும் சென்னை மாநகராட்சிப் பள்ளிச்சிறுவன்!

சென்னை, வேளச்சேரி குயில் குப்பம் மாநகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் இஷான், வீட்டில் சேகரமாகும் மக்கும் குப்பையிலிருந்து பயோகேஸ் தயாரிக்கக்கூடிய கருவியைச் செய்து அசத்தியுள்ளான். பயோகேஸ் தயாரிக்கும் கண்டுபிடிப்புகள் ஏற்கெனவே பல இருந்தாலும், இந்தச் சிறுவனின் கண்டுபிடிப்பு எளிமையிலும் எளிமையாக இருக்கிறது. அவனிடம் பேசினோம்.

“எங்க ஸ்கூல்ல ‘வெல்த் ஃப்ரம் வேஸ்ட் (Wealth From Waste)’ என்ற தலைப்பில் ஒரு புராஜெக்ட் செய்யச் சொன்னாங்க. அப்பாகிட்ட அதுக்கான ஐடியாக்கள் பேசினப்போ, பயோகேஸ் தயாரிப்புன்னு முடிவு பண்ணினோம். ஒரு சின்ன பிளாஸ்டிக் டேங்க் அமைச்சேன். அதுல 60% மாட்டுச் சாணம் போட்டு, 40% எங்க வீட்டுக் காய்கறிக் கழிவு, சாதம் வடிக்கிற கஞ்சின்னு எல்லாத்தையும் போட்டு மூடி வெச்சுட்டேன். பிளாஸ்டிக் டேங்க்ல ஒரு சின்னக் குழாயைச் செருகி அதோட மறுமுனையை ஒரு லாரி டயர் டியூப்ல செருகிட்டேன்.

குப்பையிலிருந்து கேஸ்... அசத்தும் சென்னை மாநகராட்சிப் பள்ளிச்சிறுவன்!

40 நாள்கள் அப்படியே விட்டுட்டு, பிறகு லாரி டயர் டியூபைப் பார்த்தப்போ எனக்கே ஆச்சர்யம். டியூப் ஃபுல்லா கேஸ் நிரம்பிடுச்சி. அப்பறம் அதுல ஒரு ஓட்டை போட்டு, திறந்து மூடுற மாதிரி ஒரு சின்ன டியூப் செருகி செட் பண்ணினேன். அதை ஓப்பன் பண்ணும்போது அதுல இருந்து வர்ற கேஸைப் பத்த வெச்சப்போ நெருப்பு வந்துச்சு. நம்ம ஐடியா வொர்க் அவுட் ஆகிடுச்சுன்னு எனக்கு சந்தோஷம் தாங்கலை’’ என்றவன், அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று கூறினான்.

``இது ரொம்பப் பாதுகாப்பான அமைப்பு. இதைப் பயன்படுத்தும்போது எல்.பி.ஜி அளவுக்கு பிரஷர் இருக்காது, மெதுவாதான் எரியும். ஆனா பால் காய்ச்ச, வெந்நீர் வைக்கன்னு பயன்படுத்தலாம். எல்.பி.ஜி சிலிண்டரோட சேர்த்து இதையும் பயன்படுத்தும்போது சமையல் எரிவாயுக்கான செலவு குறையும். டேங்க்ல இருக்கிற கழிவைச் செடிகளுக்கு உரமா பயன்படுத்தலாம்.

குப்பையிலிருந்து கேஸ்... அசத்தும் சென்னை மாநகராட்சிப் பள்ளிச்சிறுவன்!

ஸ்கூல் புராஜெக்டுக்காகப் பண்ணின இந்தக் கண்டுபிடிப்பை, பள்ளிகளுக்கு இடையிலான போட்டியிலும் காட்சிப்படுத்தி சென்னை மாநகராட்சி மண்டல அளவுல முதல் பரிசு பெற்றேன். அப்புறம் மாவட்ட அளவிலும் முதல் பரிசு பெற்றேன். குடியரசு தின விழாவுக்கு ரிப்பன் பில்டிங்ல நூற்றுக்கணக்கான மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் எங்களோட கலை, கண்டுபிடிப்புகள், திறமைகளை வெளிப்படுத்தினோம். அங்கேயும் எனக்கு முதல் பரிசு கிடைச்சது. இந்த மாதிரி பயன்பாட்டுக்கு உதவுற கண்டுபிடிப்புகள் இன்னும் நிறைய பண்ணணும்.

அப்பா மரத்துல பொம்மை செஞ்சு விக்கிறார். அம்மா, அப்பாவுக்கு உதவியா இருக்காங்க. `குயில் குப்பம் மாநகராட்சிப் பள்ளி மாணவன் சாதனை’ன்னு செய்தி பார்த்து ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷத்துல இருக்காங்க. நானும்தான்...’’ என்று சொல்லிச் சிரிக்கும்போது பெருமையுடன் கொஞ்சம் வெட்கமும் சேர்ந்துகொள்கிறது இந்தச் சுட்டிக்கு!