
கி.மு.222ஆம் ஆண்டில் டெஸிபியஸ் இறந்தபோது, அவரால் ஐம்பது கண்டுபிடிப்புகளை உலகம் பெற்றிருந்தது.
அந்தக் காலத்தில் நீங்கள் எத்தனை பெரிதாகச் சாதித்தாலும், செய்திகளில் இடம்பெற முடியாது. இப்போது மாதிரி பிறந்தநாள் கேக் வெட்டுவது, பிரியாணி சாப்பிட்டாலும் படம் பிடித்து வாட்ஸ்அப் அனுப்புவது எல்லாம் இல்லாத காலம். சொல்லப்போனால் கல்வெட்டுகளே உருவாகாத காலம். அப்போதெல்லாம் புதிதாக ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டால், அதை மன்னர் எடுத்துக்கொள்வார். நாட்டில் அவரது எல்லையைச் சார்ந்த எல்லாமே அவருக்குச் சொந்தம்.
இப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்த டெஸிபியஸ் (Ctesibius) என்கிற விஞ்ஞானி, இன்றும் நம் நினைவில் இருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை? கிரேக்க நாட்டில் அலெக்சாந்திரியாவில் நான்கு மன்னர்களின் காலங்களில் 63 வருடங்கள் வாழ்ந்தவர். அந்த மகாராஜாக்களின் பெயர்களை மறந்தாலும், டெஸிபியஸ் பெயரை 2,300 வருடங்கள் கடந்தும் வரலாறு ஞாபகம் வைத்துள்ளது. அந்த அளவுக்கு ஐன்ஸ்டீனாகப் பல திருப்புமுனைகளை அறிவியலுக்குத் தந்தவர் டெஸிபியஸ்.

அவர் கி.மு.285ஆம் ஆண்டில் எகிப்தில் பிறந்தார். அவரது வாழ்க்கையைப் பற்றிச் சிறிதளவே தெரிகிறது. அறிவியல் என்றால் ஆய்வுக்கூடம் தேவை. அதற்காக உபகரணங்கள் தேவை என்று நினைத்தால் அது தவறு. டெஸிபியஸ் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி. அது டெஸிபியஸின் ஆரம்பகாலத் தொழில். ஒருவர் வந்து முடிவெட்ட நாற்காலியில் அமர்ந்ததும், அவரது எடைக்கு ஏற்ப முகத்துக்கு நேராகத் தானாகவே அட்ஜெஸ்ட் ஆகும் தானியங்கி நிலைக்கண்ணாடியைக் கண்டுபிடித்தார் டெஸிபியஸ். அதுதான் அவரது முதல் கண்டுபிடிப்பு.
தண்ணீர் ஆவியாதலை வைத்து இயங்கிய, இன்றும் விஞ்ஞானிகள் வியக்கும் டெஸிபியஸ் கடிகாரம் அடுத்த சூப்பர் கண்டுபிடிப்பு. அலெக்சாந்திரியா மியூசியம் கல்வியகத்தில் கணிதம் கற்பிக்க, மன்னர்கள் அவரை நியமித்தார்கள். அங்கே காற்றழுத்தம் மூலம் இயங்கும் உலகின் முதல் குழாய், டெஸிபியஸால் கண்டுபிடிக்கப்பட்டது. காற்றழுத்தம் குறித்த முதல் கோட்பாடு, அதற்கான கணித வரையறையையும் உருவாக்கினார்.

தனது கோட்பாட்டைப் பயன்படுத்தி இயங்கிய பீரங்கிகளை, மன்னரின் போர்ப் பிரிவுக்கு அளித்தார். மகா அலெக்ஸாண்டர் உலகை வெல்ல உதவிய பல காரணிகளில் இதுவும் ஒன்று என்கிறது வரலாறு. எலாஸ்டிக் என அழைக்கும் நெகிழ்ச்சி தத்துவத்தை வழங்கியவரும் டெஸியஸ்தான்.
அந்தக் காலத்திலேயே (கி.மு.268) தனது அறிவியல் ஆய்வுகளை ஒரு கட்டுரைத் தொகுதியாக வெளியிட்டார். அது, ‘மெமோராபிஸியா’ என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. பல கண்டுபிடிப்புகளின் வித்தகராக இருந்தும், டெஸிபியஸ் வறுமையில் வாழ்ந்தார். காரணம், ஒரு பைசா கிடைத்தாலும் அறிவியல் சம்பந்தமான விஷயத்துக்கே செலவு செய்துவிடுவார். மாணவர்கள் பலர் எப்போதும் அவரைச் சூழ்ந்திருப்பார்கள். இறுதிக் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஆர்செஸிலாஸ் என்கிற தத்துவ அறிஞர் பார்க்க வந்தார். அவருக்காக டெஸிபியஸ் ஒரு நினைவுப் பொருள் வழங்கினார். அதுதான் இன்றும் நாம் வாசித்து மகிழும் இசைக்கருவியான மவுத்ஆர்கன்.
கி.மு.222ஆம் ஆண்டில் டெஸிபியஸ் இறந்தபோது, அவரால் ஐம்பது கண்டுபிடிப்புகளை உலகம் பெற்றிருந்தது.