சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

தோஜி

பாக் கியோங்னி
பிரீமியம் ஸ்டோரி
News
பாக் கியோங்னி

இலக்கியம்

தென்கொரிய நகரமான வோன்ஜூவில் ஒருமாத காலம் வசிக்கும் வாய்ப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது. சுற்றுலாப் பயணியாக அல்ல; எழுத்தாளர் முகாம் ஒன்றில் பங்கேற்பாளனாக. தோஜி கலாசார மையத்தின் ஆதரவில் நடைபெற்ற எழுத்தாளர், கலைஞர்கள் உறைவிட முகாமில் கலந்துகொண்ட இரண்டாவது தமிழ் எழுத்தாளன் நான். முதலாமவர் பெருமாள் முருகன். அங்கு தங்கியிருந்து என்னுடைய இரண்டாவது நாவலை (பெருவலி) எழுதி முழுமை செய்தேன். எனினும், இது என்னுடைய உறைவிட முகாம் பற்றிய சுயபுராணம் அல்ல. மெய்ப்பட்ட பெண் கனவைப் பற்றியது. அந்தப் பெண் நேசித்த மண்ணைப் பற்றியது. பெண்ணால் அறியப்பட்ட மண்ணையும், மண்ணால் புகழ்பெற்ற பெண்ணையும் குறித்தது. அதிகம் அறியப்படாத ஓர் இலக்கியச் சாதனையைக் குறித்தது.

தோஜி கலாசார மையம்
தோஜி கலாசார மையம்

வோன்ஜூ ஒரு மலைக் கிராமம். காங்க்வான் மலைத்தொடர்களின் மடியில் அமைந்த பூமி. குறுக்கும் நெடுக்குமான மலைத் தொடர்களுக்கிடையில் விளைநிலங்கள், மலையிலிருந்து கசிந்து பாயும் சிறு நதிகள். மலைச்சரிவுகளில் அடர்ந்த பைன் மரக் காடுகள். நகரத்தின் சாயல் அதிகம் படியாத கொரியச் சிற்றூர். எல்லாக் கொரியக் கிராமங்களையும்போல சாதாரணமான ஊராக இருந்திருக்க வேண்டிய வோன்ஜூ, உலகப் புகழ்பெற்றிருப்பது ஒரு பெண் எழுத்தாளரால். அவர், பாக் கியோங்னி (Pak Kyongni - 1926 – 2008).

நவீனக் கொரிய இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் பாக், 1998-ம் ஆண்டு, தோஜி கலாசார மையத்தை உருவாக்கினார். கொரியக் கலை, பண்பாட்டைப் பேணுவதுடன், உலக இலக்கியத்தையும் கலைகளையும் அறிமுகம் செய்வதற்காக உருவான மையம் அது. கொரிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் வந்து தங்கியிருந்து சின்னக் கவலைகள் தங்களைத் தின்ன இடம் கொடாமல் படைப்பாக்கத்தில் ஈடுபட உதவும் வகையில் உருவான மையம் தோஜி. ஆண்டுக்கொரு முறை வெளிநாட்டுக் கலைஞர்களும் வந்து தங்கியிருந்து படைப்புச் செயல்பாட்டை மேற்கொள்ளலாம். இவையெல்லாம் ஓர் எழுத்தாளராகப் பாக் கண்ட கனவின் பலிதம். அந்தக் கனவு பலிக்க உதவியதும் அவருடைய எழுத்துகள்தாம். அவர் எழுதிய ஒரு நாவல் மூலமே பெருங்கனவு சாத்தியமானது. `தோஜி’ என்ற அவருடைய நாவல், பாக்கைக் கொரிய இலக்கியத்தின் முன்னோடி ஆளுமையாக மாற்றியது. அந்த நாவல் ஈட்டித்தந்த செல்வமே அவரது கனவுக்கு உயிர்கொடுத்து நடைமுறை ஆக்கியது.

உருவச்சிலை
உருவச்சிலை

பாக் கியோங்னியின் வாழ்க்கை, துயரங்களிலிருந்து துயரங்களுக்குள் வீழ்ந்தும் நிலைகுலையாத பெண்ணுறுதியின் சான்று. கொரிய நடுத்தட்டுக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் பாக். அவரின் அப்பாவைவிட அம்மா நான்கு வயது மூத்தவர். இந்த வேற்றுமையும், மரபான கொரிய ஆணாதிக்க மனமும் அம்மாவைக் கொடுமைப்படுத்த அப்பாவுக்குப் போதுமான காரணங்களாக இருந்தன. பாக் பிறந்த சில நாள்களிலேயே அப்பா அவர்களை விட்டு விலகிப் போனார். வாழ்க்கையின் முதல் துவர்ப்பை பாக் உணர்ந்தது அப்போதுதான். தாயின் கண்ணீரைக் குடித்து வளர்ந்தார் பாக்.

பாக் கியோங்னி
பாக் கியோங்னி

பள்ளிப் படிப்பு முடிந்த சிறிது காலத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டார். திருமணம் அவருக்கு ஆறுதல் அளிக்கவில்லை. இன்னொரு துயரமாக மாறியது. அப்படி மாற்றியது அப்போது நிலவிய அரசியல் சூழல். கொரியா, ஜப்பானியர்களின் கொடுங்கோன்மைக் காலனியாட்சிக்கு உட்பட்டிருந்தது. கொரிய மக்கள் எல்லாரும் ஜப்பானியக் கண்களுக்கு துரோகிகளாகத் தென்பட்டனர். அந்தச் சந்தேகப் பார்வையின் விளைவாக பாக்கின் கணவர் கம்யூனிச ஆதரவாளர் என்று தேடப்பட்டார். கொரியப் போரில் காணாமற்போனதாகச் சொல்லப்பட்டார். ஆனால், பின்னர் அவரது சடலம் சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தன் தாய், ஒரு மகள், வயிற்றில் ஒரு சிசுவுடன் இருந்த பாக் நிலைகுலைந்தார். அந்தத் தடுமாற்றத்தில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையும் மூன்றே மாதங்களில் மரணமடைந்தது. தான் உட்பட, மூன்று ஜீவன்களின் வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தார் பாக். கிராமத்துக் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுத்தார். கூலி வேலைகள் செய்தார். விவசாயம் சார்ந்த எல்லா வேலைகளையும் பார்த்தார். அவை எதுவும் போதுமான வருவாயைத் தரவில்லை. அந்த இக்கட்டான நிலைதான் அவரை எழுத்தை நோக்கித் திருப்பியது. அச்சேறிய முதல் கவிதை பெற்றுத் தந்த சொற்பத் தொகை பாக்குக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. எழுத்தை நம்பி வாழத் தீர்மானித்தார். நாவலாசிரியரும் கவிஞருமான கிம் டாங்க் நியின் ஆலோசனையின் பேரில் கதைகள் எழுதினார். ஆண்வாடையே அதிகம் நிரம்பியிருந்த கொரிய இலக்கிய உலகில் பாக்கின் கதைகள் உடனடி வரவேற்பைப் பெற்றன. பொருளாதாரநிலையிலும் அவை உதவின. ‘`நான் மகிழ்ச்சியானவளாக இருந்திருந்தால் எழுதவே ஆரம்பித்திருக்க மாட்டேன்’’ என்று தன் எழுத்து வாழ்க்கையைப் பற்றிச் சொன்னாலும் எழுத்தே அவரது இருப்பும் வாழ்வுமானது.

பாக் கியோங்னி
பாக் கியோங்னி

பாக்கின் ஆரம்பக்கால எழுத்துகள் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் நினைவூட்டுபவை. கணவனை இழந்து பிள்ளைகளுடன் போராட்ட வாழ்க்கை வாழும் விதவைகள், குடும்பத்துக்காக உழைத்து உருக்குலையும் மகள்கள், ஊதாரிகளும் பொறுப்பற்றவர்களுமான ஆண்கள் ஆகியோரைத் திரும்பத் திரும்ப அந்தக் கதைகளில் பார்க்க முடிகிறது. இன்று யோசிக்கும்போது ஒரே சட்டகத்துக்குள் வார்க்கப்பட்டவையாகத் தெரிந்தாலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலான கொரிய வாழ்க்கையின் அழுத்தமான தடங்களைக்கொண்டவை. அந்த உண்மையான சித்திரிப்பு பாக் கியோங்னியை நவீன இலக்கியத்தின் முதல் பெண்குரலாக அடையாளம் காட்டியது.

பாக் கியோங்னி இல்லம்
பாக் கியோங்னி இல்லம்

இலக்கியப் புகழும், பொருளாதார வளமும் சேர்ந்த பின்னரும் பாக்கின் வாழ்க்கை துயரங்களின் தொடர்ச்சியாகவே இருந்தது. மார்பகப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டார். மகளின் கணவரும் கவிஞருமான கிம் சி ஹாவை கம்யூனிச ஆதரவாளர் என்பதனால், சர்வாதிகார அரசு தொடர்ந்து வேட்டையாடியது. இறுதியில் கொன்றது. இந்தத் துயரங்களிலிருந்து மீளவும் காலம் கட்டாயமாக்கியிருந்த நெருக்கடியைக் கடந்து நம்பிக்கையை வெளிப்படுத்தவும் பாக் எழுத்தில் மேலும் தீவிரமாக ஈடுபட்டார். அதன் விளைவு `தோஜி’ என்ற மகத்தான நாவல். `தோஜி’ என்ற கொரியச் சொல்லுக்கு, `நிலம்’ என்று பொருள்.

1969-ம் ஆண்டு பாக் கியோங்னி, தோஜியை எழுதத் தொடங்கினார். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1993-ம் ஆண்டில் நாவல் முற்றுப்பெற்றது. ஐந்து பாகங்கள், ஏழாயிரம் பக்கங்களுக்கு விரிந்த நாவல். இன்று இந்த நாவல், நவீனக் கொரிய இலக்கியத்தின் சாதனைப் படைப்புகளில் ஒன்று. `உரைநடைக் காவியம்’ என்று பாராட்டப்படும் தோஜியைக் கீழைநாடுகளின் பிரதிநிதித்துவப் படைப்புகளில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு சிறப்பித்திருக்கிறது.

தலைப்பு சுட்டிக்காட்டுவதுபோலவே, மண்ணின் கதைதான் `தோஜி.’ அது கொரிய நாட்டுப்புற வாழ்க்கையைச் சித்திரிக்கிறது. மண்ணின் இயல்பைச் சொல்கிறது. அந்த மண்ணின் உரிமையாளர்களான மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. அவர்கள் வாழ்ந்த காலத்தின் தேக்கங்களையும் மாற்றங்களையும் எடுத்துச் சொல்கிறது. ஐம்பது ஆண்டுக்கால கொரிய வரலாற்றையும் பதிவுசெய்கிறது. 1897. அறுவடைக்காலப் பௌர்ணமிதினக் கொண்டாட்டத்தில் தொடங்கும் நாவல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கொரிய மக்களின் எழுச்சிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஜப்பானிய ஆட்சியாளர்கள் கொரிய மண்ணை விட்டு வெளியேறும் 1945-ம் ஆண்டுவரையான நீண்டகால நிகழ்ச்சிகளுடன் முடிவடைகிறது. பல தலைமுறைகளின் கதையாக, பல களங்களில் நிகழும் சம்பவங்களாக, பல மனிதர்களின் செயல்களாக விரிந்தாலும் எல்லா மனிதர்களின் பொதுக்கதையாகவும் நிலைபெறுகிறது. ஒருவகையில் `தோஜி’ நாவலின் கதை முடிவடைவதே இல்லை.

ஐந்து பாகங்கள்கொண்ட இந்த நாவலின் முதல் மூன்று பாகங்கள் மட்டுமே ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசிக்கக் கிடைப்பவை. தோஜி மையத்தில் வசித்த ஒருமாத காலத்தில் அவற்றைப் பரவசத்துடன் வாசித்தேன். பாக் கியோங்னியைப் புரிந்துகொள்ள அந்த வாசிப்பு உதவியது. இன்றும் தந்தைவழிச் சமூக மரபைப் பின்பற்றும் கொரிய மக்களுக்கிடையில், பாக்கின் இலக்கிய இருப்பு வியப்பளிப்பது. தெளிவான அரசியல் பார்வை, ஆண்களின் உலகைப் பற்றிய நுட்பமான கவனம், பெண் மனங்களின் விவரிக்க இயலாத ஆழம், இயற்கைமீதான ஆழ்ந்த காதல், மனித இயல்புகளைச் சித்திரிப்பதில் தயக்கமின்மை என... பாக் எழுத்தின் மேன்மைகள் துலங்கின.

`தோஜி’ நாவலை மூன்று காரணங்களுக்காக முன்னோடித் தன்மைகொண்டது என்று குறிப்பிடலாம். நாவல் என்ற இலக்கிய வடிவமே ஐரோப்பியச் செல்வாக்கால் உருவானது. எல்லா மொழிகளிலும் ஆரம்பக்காலம் முதல் இன்றுவரையும் பிரசித்தமான வெளிநாட்டுப் படைப்புகளின் சாயலைப் பார்க்கலாம். பாக் கியோங்னியும் அன்று ஆட்சிமொழியாக இருந்த ஜப்பானிய மொழியில் கிடைத்த பிற நாட்டுப் படைப்புகளை வாசித்து, பாதிப்பு பெற்றவர்தாம். எனினும், தோஜியில் தனித்துவமான கொரிய வடிவத்தை உருவாக்கினார். நாட்டுப்புறக் கதைகளின் துள்ளலும் துடிப்புமான வடிவத்தை முன்வைத்தார். இது முதல் காரணம். கலாசாரக் கலப்புகளல்லாத அசல் கொரிய வாழ்க்கையை மையப் பொருளாகச் சித்திரித்தார். இது இரண்டாவது காரணம். மூன்றாவது காரணம், அது பேசும் அரசியல். வெகுகாலம் ஜப்பானியர்களின் சர்வாதி காரத்துக்கு அடிமைப்பட்டிருந்த கொரியர்களின் இன உணர்வை இந்த நாவல் உயிர்த்தெழச் செய்தது. தாங்கள் ஜப்பானியர்களோ, சீனர்களோ அல்லர்; கொரியர்கள் என்ற தேசிய உணர்வை பாக் தனது நாவலில் கிளர்ந்தெழச் செய்தார். கொரிய இலக்கிய உலகம் பாக் கினியோங்னிக்கு இன்று அளித்திருக்கும் மகத்தான இலக்கியத் தகுதிக்கு முக்கிய காரணம் இந்த உணர்வுதான். ஒருவகையில் தோஜி நாவலின் மையமும் ‘எந்தச் சூழ்நிலையிலும் மனிதர்கள் தமது மானுட மதிப்பை இழந்துவிடாமலிருப்பது’ என்பதுதான். அது தனி வாழ்க்கையானாலும், பொது வாழ்க்கையானாலும். அதைச் சொன்னது மட்டுமல்லாமல் பின்பற்றியவர் என்பதே எழுத்தாளர் பாக்குக்குக் கிடைத்த பெருமை.

தாங்கள் ஜப்பானியர்களோ, சீனர்களோ அல்லர்; கொரியர்கள் என்ற தேசிய உணர்வை பாக் தனது நாவலில் கிளர்ந்தெழச் செய்தார்.

எழுத்தின் மூலம் செல்வந்தரான எழுத்தாளராகப் பாக் கியோங்னியைச் சொல்லலாம். குறிப்பாக, ஒற்றை நாவல் மூலம் பெரும்பணம் ஈட்டியவராக. நாவல் வெவ்வேறு வடிவங்களில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தது. அதன் பகுதிகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. தொலைக்காட்சித் தொடராக நீண்டகாலம் ஒளிபரப்பாகியிருக்கிறது. வானொலி நாடகமாகவும், ஆபரா வடிவிலும் தொடர்ந்து மக்களை ஈர்த்திருக்கிறது. இவையெல்லாம் நிதியளவைக் கூட்டியிருக்கின்றன. எனினும் பாக் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். அவரது உணவை அவரே சமைக்கவும், தன் நிலத்தில் தானே பயிர் செய்யவும் ஈடுபாடு காட்டியவர். ‘`எனக்கு இரண்டு வேலைகள்தான் தெரியும். எழுதுவதும் விவசாயம் செய்வதும். எழுதும் அறையில் இல்லையென்றால், தோட்டத்தில் செடிகள் நடுவில் இருப்பதுதான் எனக்கு விருப்பமானது’’ என்று குறிப்பிட்டுமிருக்கிறார். தோஜி நாவல் மூலம் திரண்ட வருவாயில் அமைக்கப்பட்ட கலாசார மையத்தைச் சுற்றியுள்ள மரங்களும் செடிகளும் அதை ஆமோதிக்கின்றன.

தோஜி

2008-ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோய் முற்றி பாக் கியோங்னி மறைந்தார். தென்கொரிய அரசு, உரிய மரியாதைகளுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது. அவரது இறுதி ஊர்வலம் சென்றவழியில் ஆயிரக்கணக் கானவர்கள் காத்திருந்து, மலர்கள் தூவி வழியனுப்பி வைத்தார்கள். `ஓர் எழுத்தாளருக்கு அதுபோன்ற விடையளிப்பு அதற்கு முன்னர் நடைபெற்றதில்லை’ என்று சொல்லப்பட்டது.

பாக் கினியோங்னி இரண்டு இடங்களில் வாழ்ந்தார். எழுத்தின் மூலம் ஈட்டிய ஊதியத்தால் வாங்கிய இரண்டு இடங்கள். இரண்டிலும் செல்லப் பூனைகளுடனும் வாத்துகளுடனும் வசித்து எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று, அவரது நினைவு இல்லமாக மாறியிருக்கிறது. அவர் எழுதிய நூல்கள், புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், விவசாயக் கருவிகள், அவர் வடித்த சிற்பங்கள், தோஜி நாவலின் பல்லாயிரம் பக்கக் கையெழுத்துப் பிரதிகள் என அவர் தொடர்பான எல்லாவற்றையும் காட்சிக்கு வைத்திருக்கும் அருங்காட்சியகம். இரண்டாவது, அவர் உருவாக்கிய கலாசார மையம். இரண்டு இடங்களிலும் வீசும் காற்றில் பாக் கினியோங்னியின் சுவாச சங்கீதத்தை மானசிகமாக உணர்ந்தேன். மையத்திலிருக்கும் பிரமாண்ட நூலகத்தில் அமர்ந்து தோஜி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து வாசித்தேன். அதை அவ்வப்போது கண்காணித்து வந்திருக்கிறார் மையத்தின் அறங்காவலர் குழுத் தலைவரும் பாக் கினியோங்னியின் பேரனுமான கிம் யங்க் ஜூ. ஒருமாத கால உறைவிட வாசம் முடிந்து விடைபெறும் நாளில் அதைச் சொல்லவும் செய்தார். ‘`நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்து முடித்துவிட்டீர்களா?’’ என்று கேட்டார். ``ஆம்’’ என்று பதிலளித்தேன். தொடர்ந்து, ‘`எங்கள் ஊரில் எல்லோருக்கும் கொரியா என்றதும் இரண்டு விஷயங்கள் உடனடியாக நினைவுக்கு வரும். கொரிய கார்களும், கொரிய மொழிப் படங்களும். எனக்கு மூன்றாவதாக பாக் கினியோங்னியும் வருவார்’’ என்றேன். கிம் ஒரு புன்னகையுடன் சொன்னார்... ‘`வரிசை பொருத்தமாக இல்லைபோலத் தெரிகிறதே?’’ எனக்குப் புரிந்தது. திருத்திச் சொன்னேன். ``பாக் கினியோங்னி, கொரிய சினிமா, கார்கள்.’’ கிம்மும், வழியனுப்ப நின்றிருந்த எழுத்தாளர், கலைஞர்கள் அடங்கிய குழாமும் கைதட்டினார்கள். இப்போதும் அந்தக் கரவொலிகள் காதுகளுக்குள் எதிரொலிக்கின்றன.

சுகுமாரன்