கர்நாடகத்தில் மீண்டும் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைந்துள்ள பா.ஜ.க அரசு திப்பு ஜயந்தியை அரசு விழாவாக கொண்டாடப்படுவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் இருந்தே திப்பு ஜயந்தி கொண்டாட்டத்துக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வந்தது. கர்நாடக பா.ஜ.க-வின் ட்விட்டர் பக்கத்தில் `எங்களுடைய அரசு சர்ச்சைக்குரிய மற்றும் வகுப்புவாத திப்பு ஜயந்தி கொண்டாடப்படுவதை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது’ என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று வரை பேசுபொருளாக நினைவுகூரப்படும் திப்பு சுல்தான் சர்ச்சைக்குரியவரா, வகுப்புவாதியா என பலதரப்பினரிடமும் பேசினோம்.
கர்நாடக பா.ஜ.க-வின் செய்தி தொடர்பாளர் ஜீ. மதுசூதன் பேசுகையில், "முதலில் திப்பு சுல்தான் ஒரு முஸ்லிம் அரசர். பிரிட்டிஷாரை எதிர்த்து ஒரு போர் தொடுத்துவிட்டார் என்பதற்காக மட்டுமே தேசப்பற்றுடையவர் என்று கருதமுடியாது. திப்பு சுல்தான் பிரெஞ்சு உதவியுடன்தான் பிரிட்டிஷை எதிர்த்துப் போரிட்டார். அவர்கள் நியாயமற்ற முறையில் அதிகாரத்துக்கு வந்து மைசூர் அரசரை சிறைவைத்தார்கள். அனைவருமே இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்ய வேண்டும் என்கிற கொடூர எண்ணம் கொண்ட வகுப்புவாதியாக இருந்தார்.
மதமாற்றத்துக்காக அனைத்து வழிகளையும் அவர் கையாண்டார். கத்தி முனையில் மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிகளை கவர்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா திப்பு ஜயந்தியை அரசு விழாவாக அறிவித்தார். நான் 50 ஆண்டுகளாகப் பார்த்துவருகிறேன். கர்நாடகாவில் முஸ்லிம் மக்கள் கூட திப்பு ஜயந்தியைக் கொண்டாடுவதில்லை.

சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி, நல்லிணக்கத்தைக் குலைக்கும் சர்ச்சைக்குரிய திப்பு ஜயந்தி கொண்டாடப்படுவதை நிறுத்துவோம் என பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தோம். அதைத்தான் தற்போது எடியூரப்பா செயல்படுத்தியிருக்கிறார். மற்றவர்கள் திப்பு ஜயந்தி கொண்டாடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. யார் வேண்டுமானாலும் தங்களுடைய சொந்தச்செலவில் செய்து கொள்ளட்டும். ஆனால், அரசு விழாவாக பொதுமக்கள் வரிப்பணத்தில் அதை செய்யக் கூடாது” என்றார்.
மைசூர் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் குரு சித்தையாவிடம் பேசினோம், "கர்நாடகாவும், ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமையுடன் கொண்டாடப்பட வேண்டிய ஓர் அரசரின் ஜயந்தி விழா சர்ச்சைக்குள்ளாக்கப்படுவது வேதனையான விஷயம். இன்றைய அரசியல் சூழல்களை வைத்து திப்பு சுல்தானை மதிப்பிட முடியாது. 18-ம் நூற்றாண்டு சூழல்களை வைத்துதான் பார்க்க வேண்டும். திப்பு சுல்தானைப் போன்று தேசப்பற்றுள்ள ஓர் அரசரைப் பார்க்கவே முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்றவேண்டுமென உறுதியுடன் இருந்தவர் திப்பு சுல்தான். பிரிட்டிஷுக்கு எதிராக போராட மற்ற அரசர்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொண்டவர் திப்பு. தென் கர்நாடகாவின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தவரும் திப்பு சுல்தானே.
நிலவுடைமை வலுவாக வேரூன்றியுள்ள இந்திய சமூகத்தில் நிலவுடைமைக்கு எதிராகச் செயல்பட்ட முதல் அரசர் திப்பு சுல்தானே. திப்பு சுல்தான் காலத்தில்தான் நிலச் சீர்திருத்தம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. நிலமற்ற தலித்துகளுக்கு பெருமளவில் நிலங்கள் திப்பு காலத்தில்தான் பிரித்து அளிக்கப்பட்டது. இன்றளவும் கூட திப்பு ஆட்சி செய்த தென் கர்நாடகப்பகுதிகளில் தலித்துகளுக்கு நிலங்கள் இருப்பதைப் பார்க்கமுடியும். ஆனால், பேஷ்வா மராத்திய மன்னர்கள் ஆண்ட வட கர்நாடகாவில் அப்படி இருக்காது.
திப்புவின் மத அடையாளத்தை வைத்து வகுப்புவாதியாகச் சித்திரிப்பது அபத்தத்தின் உச்சம். திப்பு சுல்தான் எல்லாரையும் மதமாற்றம் செய்தார் எனக்கூறுவது தவறு. அந்தக் காலகட்டத்தில் அனைத்து மதங்களுக்காகவுமே மக்கள் மதம் மாறிக்கொள்வது சகஜமான ஒன்றாக இருந்தது. திப்பு சுல்தான் கட்டாயமாக மதமாற்றம் செய்தார் எனக்கூறுவது வரலாற்றைத் திரிப்பதாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆவணங்களில் கூட இந்துக் கோயில்களுக்கு திப்பு சுல்தான் அதிக அளவில் கொடைகள் அளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.
முந்தைய பா.ஜ.க ஆட்சியில்தான் 2010-ம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் திப்பு சுல்தானைப் பற்றி சர்வதேச கருத்தரங்கு நடத்தப்பட்டது. தற்போது அரசியல் நோக்கங்களுக்காக மக்களை பிளவுபடுத்த திப்பு சுல்தானை தவறாகச் சித்திரித்து இரட்டை வேடம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். அரசு ஆய்வாளர்களை அழைத்து உரையாடலுக்கு வழிவகுக்கலாம். அரசே முன்முடிவோடு ஓர் அரசரை இழிவுபடுத்துவது தவறானது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோர்பதே நம்மிடம் பேசுகையில், "எங்களுடைய சட்டமன்றக் குழுத் தலைவர் சித்தராமையாவின் கருத்துதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. திப்பு ஜயந்தி கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டதை காங்கிரஸ் கடுமையாகக் கண்டிக்கிறது. திப்பு சுல்தானை மிகவும் குறுகிய கண்ணோட்டத்துடன் பா.ஜ.க பார்க்கிறது. அவர் மைசூர் மாகாணத்தில் வளர்ச்சிக்காக பலவற்றைச் செய்துள்ளார். இந்தியாவின் முதல் சுதந்தரப் போராட்ட வீரரும் அவர் தான்.” என்றார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா "பா.ஜ.க மதச்சார்பற்ற அரசாக செயல்பட மறுக்கிறது. திப்பு சுல்தான் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மன்னர் என்பதால்தான் அவரை பா.ஜ.க வெறுக்கிறது” என குற்றம்சாட்டியிருந்தார்.
ஆட்சி மாறினால் காட்சி மட்டுமல்லாமல் பள்ளிகளின் பாடப்புத்தகங்களும், வரலாறுமே மாறுவது இந்தியாவில் மட்டுமாகத்தான் இருக்கும்.