பொங்கல் பரிசுத் தொகுப்பில் தி.மு.க அரசு கடந்த ஆண்டு கரும்பு வழங்கியது. அதற்காக விவசாயிகளிடம் செய்யப்பட்ட கரும்பு கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதனாலேயே தற்போது தி.மு.க அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என தஞ்சாவூரில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றையும் வழங்க வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது, `கரும்பு விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே', `விவசாயிகளை வஞ்சிக்காதே', `பஞ்சாப் மாநிலத்திலிருந்து பச்சரிசியை வாங்க கூடாது', `பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும்', `பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்க வேண்டும்' உள்ளிட்டவையுடன் தி.மு.க அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
பின்னர் பேசிய பா.ஜ.க-வினர், ``தி.மு.க அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. கடந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்பில் உருகிய தரமில்லாத வெல்லம் கொடுக்கப்பட்டது. நாள்பட்ட வெல்லத்தை கொள்முதல் செய்து கொடுத்ததே அதற்கு காரணம். இதே போல் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக தி.மு.க அரசு விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்தது, அதில் ஊழல் நடைபெற்றது.

பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை பொங்கல் கரும்பு கொள்முதலில் தி.மு.க அரசு ஊழல் செய்ததாக ஆதாரங்கள் அடிப்படையில் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்தார். தி.மு.க-வினரால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அதனாலேயே இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவதை தவிர்த்துள்ளனர். அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே தமிழ அரசு கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும்" என்றனர்.