அரசியல்
சமூகம்
Published:Updated:

‘‘அமைதியாக இல்லாமல், வன்முறையில் ஈடுபடுங்கள் என்கிறாரா சூர்யா?’’

ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெச்.ராஜா

சீறும் ஹெச்.ராஜா

தேசியப் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசிய பேச்சுக்கு, பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் ஆதரவும் எதிர்ப்புமாகக் காரசார ரியாக்‌ஷன்கள் வரிசை கட்டுகின்றன. ‘சூர்யாவின் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு வெடிக்கிறார் என்றால், ‘வன்முறையைத் தூண்டுகி றார் சூர்யா’ என்று சொல்லி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துகிறார் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா!

ஹெச்.ராஜாவிடம் பேசினோம்.

‘‘ ‘நாம் அமைதியாக இருந்து விடாமல், புதிய கல்விக் கொள்கை குறித்த நம் கருத்தை இணையம் வழியாக அரசுக்கு எடுத்துச் சொல்வோம்’ என்றுதானே சூர்யா சொல்கிறார். இது எப்படி வன் முறையைத் தூண்டும் பேச்சாகும்?’’

சூர்யா
சூர்யா

‘‘சூர்யா, ‘நாம் அமைதியாக இருந்துவிட்டால் புதிய கல்விக் கொள்கை வந்துவிடும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யிருப்பது ஆட்சேபனைக்குரியது. ‘மக்கள் அமைதியாக இல்லாமல், வன்முறையில் ஈடுபடுங்கள்’ என்று சொல்கிறாரா என்பதுதான் என்னுடைய வாதம். இந்தக் கல்விக் கொள்கை குறித்துக் கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுக்க ஆலோசனைகள் கேட்டுத்தானே வரைவு தயார் செய்யப்பட்டது. அதை எல்லாம் அறியாத சூர்யா, ‘இவ்வளவு அவசரம் ஏன்?’ என்று இப்போது ஆவேசப்படுகிறார். அதனால்தான் உள்நோக்கத்துடன் சூர்யா பேசுகிறாரோ என்று நான் அச்சப் படுகிறேன். தவிர, இது புதிய கல்விக் கொள்கையே அல்ல. தேசியக் கல்வித் திட்டம் 1986, 1992 ஆகியவற்றைத் தொடர்ந்து, அவற்றில் இருக்கும் குறைபாடுகளை நீக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் இது. இந்த அடிப்படையைக்கூடப் புரிந்து கொள்ளாமல் சூர்யா பேசுகிறார்.”

‘‘சூர்யா எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், ‘வன்முறையைத் தூண்டிவிடுகிறார்’ என்றெல்லாம் பேசி பிரச்னையைத் திசை திருப்புவது நியாயமா?’’

‘‘அமைதியாக இல்லாமல், வன்முறையில் ஈடுபடுங்கள் என்கிறாரா சூர்யா?’’

‘‘சூர்யா எழுப்பியுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் என்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டரில் நான் தெளிவான பதில்களை எழுதி யிருக்கிறேன்.’’

‘‘சூர்யா, ‘மூன்று மொழி பேசுபவர்களும் என் வீட்டில் இருந்தாலும்கூட என் குழந்தையே மூன்றாவது மொழியைப் படிக்கத் திணறுகிறது. எனில், சாமானிய வீட்டுப் பிள்ளைகள் எப்படி கற்றுக்கொள்ள முடியும்’ என்று கேட்டிருப்பது நியாயமானதுதானே?’’

‘‘நான் சூர்யாவைவிடவும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். மத்திய அரசுப் பள்ளியில் படித்துவரும் மூன்று வயதுகூட நிரம்பாத என் பேரன், பேத்திகள் இப்போதே சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளை நன்றாகப் பேசுகிறார்களே. ஏனெனில், இந்தப் பருவத்தில்தான் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகமாக இருக்கும். இது அறிவியல்ரீதியாக ஆய்வுசெய்து கண்டறியப்பட்ட உண்மை.”

‘‘கல்வியாளர்கள் பலரும், ‘புதிய கல்விக் கொள்கை, மூன்றாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு நடத்தி, குழந்தைகளை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது’ என்று விமர்சிக்கிறார்களே?’’

‘‘3, 5, 8-ம் வகுப்புகளில் நடத்தப்படும் தேர்வானது மாணவர் களுக்குச் சரியான முறையில் கல்வி கற்பிக்கப்பட்டிருக்கின்றனவா அல்லது இந்தக் கல்வி முறையில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டுமா என்பதையெல்லாம் கணிப்பதற்காகத்தான். குறிப்பாக, பாஸ், ஃபெயில் எதுவும் கிடையாது. 10, 12-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வுவைத்து பரிசோதித்துப் பார்ப்பதைவிட, ஆரம்பத்திலேயே மாணவர்களின் திறன் எந்த அளவு இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கான ஏற்பாடே தவிர... யாரையும் விரட்டி அடிப்பதற்கல்ல.’’

‘‘மும்மொழிக் கொள்கையில், இந்தியை மூன்றாவது மொழி... விருப்ப மொழி என்றெல்லாம் கூறுவது மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சிதானே?’’

‘‘தங்கள் வீட்டுப் பிள்ளைகளை இந்தியில் படிக்கவைத்துவிட்டு, மற்றவர்களை மட்டும் இந்தி படிக்கவேண்டாம் என்று கூறுவது என்ன நியாயம்? ‘இந்தி பேசும் மக்களைக்கொண்ட மாநிலங்கள் மூன்றாவது மொழியாக, இந்தியாவிலுள்ள வளமையான மொழிகள் ஏதேனும் ஒன்றைப் பயிற்றுவிக்க வேண்டும்’ என்று கல்விக்கொள்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காகக் குறிப்பிட்ட மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, தகுதியுள்ள ஆசிரியர்களைவைத்து பயிற்சி நடத்த வேண்டும். அந்த வகையில், உத்தரப்பிரதேசத் துடன் பேசி, ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்தால் தமிழ் வளரும். அதைவிடுத்து மத்திய அரசுக்கு எதிராகப் பொய் பேசிக்கொண்டு, மக்களைத் திசை திருப்புவதிலேயே தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குறியாக இருக்கிறார்கள்.’’

‘‘மத்திய பி.ஜே.பி அரசின் ஒவ்வொரு செயல்பாடும் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறது என்பதை உணர்ந்துள்ளீர்களா?’’

‘‘இங்குள்ள எதிர்க்கட்சிகள்தான் அப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே, நாட்டில் அமலில் இருந்த 32 வரிகளையும் ஒன்றாக இணைத்துத்தான் புதிதாக ‘ஜி.எஸ்.டி’ என்ற வரிவிதிப்பையே மத்திய பி.ஜே.பி அரசு கொண்டுவந்தது. ஆனால், ஜி.எஸ்.டி என்றொரு புதிய வரியைக் கொண்டுவந்துவிட்டதுபோல தி.மு.க-வும் அதன் இலவச இணைப்புகளாக இருக்கும் கூட்டணிக் கட்சிகளும் வரிந்துகட்டிக் கொண்டு பொய் பிரசாரம் செய்தன. இப்போதும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.’’