அலசல்
அரசியல்
Published:Updated:

சசிகலா புஷ்பா... பாலியல் சீண்டல்... வீடியோவைப் பரப்பிய பா.ஜ.க புள்ளி!

சசிகலா புஷ்பா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா புஷ்பா

வீடியோவைப் பார்த்தால், பொன். பாலகணபதி கொஞ்சம் அத்துமீறியிருப்பது தெரியத்தான் செய்கிறது. ஆனால், அதை கதிரவன் தரப்பினர் ஜூம் செய்து, பூதாகரமாக்கிவிட்டார்கள்.

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது, முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. அந்தக் காட்சி வீடியோவாக வைரலானதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

அனல் பறக்கும் இந்த வீடியோ விவகாரத்தை முன்வைத்து பா.ஜ.க-வை, ‘பாலியல் ஜல்சா கட்சி’ என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். பா.ஜ.க தலைமையே வாய் திறக்காமல் மௌனம் காத்துவரும் நிலையில், ‘உட்கட்சிப் பிரச்னையால் மாவட்டச் செயலாளர் செய்த வேலைதான் இது’ என்று வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

சசிகலா புஷ்பா... பாலியல் சீண்டல்... வீடியோவைப் பரப்பிய பா.ஜ.க புள்ளி!

இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “பொன். பாலகணபதி, கட்சியில் ரொம்ப சீனியர். எம்.பி தேர்தலில், வேட்பாளராக முன்மொழியப்பட்டவர்களில் ஒருவர். ஆனால், மாவட்டத் தலைவர் கதிரவனோ, தி.மு.க-வில் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். வேகமாக வளரும் கட்சி என்று இங்கே தாவினார். தன்னைவிட பொன்.பாலகணபதி சீனியராகவும், செல்வாக்கோடும் இருப்பதால் அவர் பெயரைக் கெடுக்காமல் தன்னால் வளர முடியாது என்று திட்டமிட்டே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்” என்றார்கள்.

இது தொடர்பாக மாநிலப் பொதுச்செயலாளர் பொன். பாலகணபதியின் கருத்தை அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். பலமுறை முயன்றும் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவேயில்லை. அவர் தரப்பில் பேசியவர்கள், “வீடியோவைப் பார்த்தால், பொன். பாலகணபதி கொஞ்சம் அத்துமீறியிருப்பது தெரியத்தான் செய்கிறது. ஆனால், அதை கதிரவன் தரப்பினர் ஜூம் செய்து, பூதாகரமாக்கிவிட்டார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. மாவட்டத் தலைவரான நான்கே மாதங்களில், மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் பள்ளி, கல்லூரிகளில் பா.ஜ.க பெயரைச் சொல்லி மிரட்டிப் பணம் வாங்குவது, நிர்வாகிகளைத் தரக்குறைவாகப் பேசுவது என்று தன் பெயரை ரொம்பவே கெடுத்துக்கொண்டார் கதிரவன். இந்தப் பிரச்னையை பொன், பாலகணபதி கட்சித் தலைவர் அண்ணாமலையின் கவனத்துக்குக் கொண்டு சென்றதால், கடந்த மாதம் 26-ம் தேதி கமலாலயத்தில் விசாரணை நடந்தது. அதற்கான பழிவாங்கல்தான் இந்த வீடியோ” என்றனர்.

கதிரவன்
கதிரவன்
தரணி முருகேசன்
தரணி முருகேசன்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்டத் தலைவர் கதிரவனிடம் பேசினோம். “எனக்கும் பொன். பாலகணபதிக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. தி.மு.க-வினர்தான் யூடியூபில் வந்த செய்தியை எடுத்து, இந்த வீடியோவைத் திட்டமிட்டுப் பரப்பியுள்ளனர். பா.ஜ.க-வில் மாவட்டப் பொருளாளராக இருக்கும் தரணி முருகேசன் என்பவரும் இந்த வீடியோவைப் பரப்பிவருவதாகச் சொல்கிறார்கள்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த தரணி முருகேசன், “வீடியோ விவகாரம் குறித்து கட்சித் தலைமையே விசாரணை நடத்தட்டும். நான் தவறு செய்திருந்தால், என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

இதையெல்லாம் ஆராயவா அண்ணாமலை, ஐ.பி.எஸ் படித்திருக்கிறார்?!