Published:Updated:

இருபது கோடி இலக்கு... இறுதியில் தமிழகம் கணக்கு!

பி.ஜே.பி-யின் கால் நூற்றாண்டு திட்டம்

பிரீமியம் ஸ்டோரி

“அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு தென்மாநிலங்களே. முதல்கட்டமாக கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா... இறுதியாகத் தமிழகம் ஆகிய மாநிலங்களை பி.ஜே.பி ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும்.” - சமீபத்தில் பி.ஜே.பி-யின் 18 துறை தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா பேசிய வார்த்தைகள் இவை.

இருபது கோடி இலக்கு... இறுதியில் தமிழகம் கணக்கு!

இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பி.ஜே.பி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து உலகிலே அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக பி.ஜே.பி-யை மாற்றும் செயல்திட்டத்தை அந்தக் கட்சி செயல்படுத்திவருகிறது. நரேந்திர மோடி முதல்முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றதும் கட்சியின் தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்டார். அவர் கட்சியின் நிர்வாக அமைப்புகளை மாற்றி அமைத்தார். கட்சியில் ஐ.டி துறை, சிறுபான்மையினர் துறை, விவசாயத் துறை, பெண்கள் துறை உட்பட 18 துறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் தனித் தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த 18 துறைகளின் தலைவர்களுடன்தான் கடந்த வாரம் டெல்லியில் பி.ஜே.பி-யின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.

எதற்காக இந்தக் கூட்டம், கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன என்பது குறித்து பி.ஜே.பி-யின் டெல்லி தலைவர்களிடம் விசாரித்தோம். ‘‘செயல் தலைவராக நட்டா பொறுப்பேற்ற பிறகு கட்சியின் செயல்பாடுகளை விரைவுப்படுத்தவே இ்ந்தக் கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக, பி.ஜே.பி-யின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வட மாநிலங்களில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். ஆனால், தென் மாநிலங்களில் அந்த அளவுக்கு உறுப்பினர்கள் சேரவில்லை.

அமித் ஷா கட்சியின் தலைவராக இருந்தபோது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே மிஸ்டு கால் திட்டத்தைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தில் இருந்த சில குறைபாடுகளை இப்போது மாற்றி அமைத்துள்ளோம். கடந்த முறை மிஸ்டு கால் கொடுத்த பிறகு, அவர்களின் விவரங்கள் போனில் பெறப்படும். அதற்குப் பின் உறுப்பினர் அட்டைகள் அச்சாகி, அந்தப் பகுதியின் கட்சி பொறுப்பாளர்கள் மூலம் வழங்கப்பட்டன.

ஆனால், நிர்வாகிகள் பலரும் முறையாக உறுப்பினர் அட்டையை கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை. இதனால் தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்கள் சேரவில்லை. இந்த முறை அதை மாற்றி, மிஸ்டு கால் கொடுத்து விவரங்களை போனில் அனுப்பினால், உறுப்பினர் அட்டையை அதே மொபைல் எண்ணுக்கு அனுப்ப உள்ளோம். அதை அவர்கள் பிரின்ட் எடுத்து வைத்துக்கொண்டால் போதும்.

இருபது கோடி இலக்கு... இறுதியில் தமிழகம் கணக்கு!

அதேபோல் புதிதாகச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், நூறு புதிய உறுப்பினர்களை இணைத்தால் அவருக்குப் பொறுப்பு வழங்கும் திட்டமும் உள்ளது. இதன்படி பி.ஜே.பி-க்கு தற்போது 11 கோடியாக இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை, 20 கோடியாக உயர்த்தப்படும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு மண்டல, மாவட்ட, மாநில அளவில் உள்கட்சித் தேர்தல் நடைபெறும். ஐம்பது சதவிகித மாநிலங்களில் வரும் டிசம்பருக்குள் மாநிலத் தலைவருக்கான தேர்தல் முடிந்த பிறகு, தேசியத் தலைவருக்கான தேர்தல் வரும் 2020 ஜனவரி மாதம் நடைபெறும்’’ என்றவர்கள், தென் மாநிலங்களில் கட்சியின் இலக்குக் குறித்தும் பகிர்ந்துகொண்டார்கள்.

“மேற்கண்ட பணிகள் முடிந்த பிறகு தென் மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகள் தொடங்கும். முதலில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைக் குறிவைத்துள்ளோம். முந்தைய நிலையை ஒப்பிட்டால் இந்த நான்கு மாநிலங்களிலும் பி.ஜே.பி-யின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. ஆனால், தமிழ்நாடு மட்டும் கடைசி இடத்தில் உள்ளது. காரணம், தமிழகத்தில் கட்சியின் அடித்தளம் பலவீனமாக இருக்கிறது. அதனால்தான் தமிழகத்தைக் கடைசியாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

இந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சியை மாநிலம் வாரியாகப் பலவீனப்படுத்திவிடுவோம். இப்போதே பல மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பி.ஜே.பி பக்கம் சாய்ந்துவருகிறார்கள். விரைவில் மாநிலக் கட்சிகளின் நிர்வாகிகளும் எங்கள் பக்கம் வருவார்கள். பி.ஜே.பி-யின் திட்டங்கள் எல்லாமே, அடுத்த 25 ஆண்டுகள் மத்தியில் தொடர்ந்து பி.ஜே.பி ஆட்சியில் இருக்கும் வகையில் வகுக்கப்படுகின்றன. அடுத்த ஐந்தாண்டுகள் அல்லது பத்தாண்டுகளுக்குள் தமிழகமும் பி.ஜே.பி ஆட்சியின் கீழ் வந்துவிடும்.

தற்போது செயல் தலைவராக இருக்கும் நட்டா 2020 ஜனவரி மாதம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் தலைவரானாலும் அமித் ஷாவின் ஆலோசனைபடியே எல்லாம் நடைபெறும்” என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு