Published:Updated:

``எல்.முருகன் வேல் எடுத்தபோது, இவர்களும் வேல் தூக்கினார்கள்; ஆனால், தற்போது..!" - அண்ணாமலை சாடல்

அண்ணாமலை
News
அண்ணாமலை

`உலகில் எந்த இயக்கமும் 100 ஆண்டுகளைத் தொட்டதாக சரித்திரம் இல்லை. 98 ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக இந்தியாவில் இருக்கும் ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் மட்டும்தான்.' - அண்ணாமலை

Published:Updated:

``எல்.முருகன் வேல் எடுத்தபோது, இவர்களும் வேல் தூக்கினார்கள்; ஆனால், தற்போது..!" - அண்ணாமலை சாடல்

`உலகில் எந்த இயக்கமும் 100 ஆண்டுகளைத் தொட்டதாக சரித்திரம் இல்லை. 98 ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக இந்தியாவில் இருக்கும் ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் மட்டும்தான்.' - அண்ணாமலை

அண்ணாமலை
News
அண்ணாமலை

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த பொங்கல் விழாவில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``நமக்கு முன்பு இந்த சனாதன தர்மத்தைக் காக்க முயன்ற எத்தனையோ பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். முகலாயர்களால் கொலைசெய்யப்பட்ட பெண் என்னுடைய மூதாதையராக இருக்கலாம். உங்களுக்கு வாய்ப்பு வரும்போது நீங்கள் எழுந்து நிற்க வேண்டும். நீங்கள் விசாலமான பார்வையில் பாரத நாட்டை, சனாதன தர்மத்தைக் காக்கப் பாடுபட வேண்டும். பா.ஜ.க-வில் இணைந்தோ, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்தோ நீங்கள் பணியாற்றலாம். மதமாற்றத்தின் சோதனைக்கூடம் கன்னியாகுமரி. 150, 200 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகங்கள் எழுதி, சாதி, மதப் பிரச்னைகளைக் கொண்டுவந்து மதமாற்றம் செய்தார்கள். இங்கு தொடங்கியதை இங்கிருந்து முடித்துவைக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

அண்ணாமலை கலந்துகொண்ட பொங்கல் விழா
அண்ணாமலை கலந்துகொண்ட பொங்கல் விழா

கடந்த 50 ஆண்டுகளாக நம் நாட்டின் உயர்ந்த இடங்கள் சீனாவின் கையில் இருக்கின்றன. கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொன்றாகப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறோம். அதனால்தான் சீனாவுக்கும் நமக்கும் சண்டை வருகிறது. மலை உச்சியைப் பிடிக்க இந்தியா பிரயத்தனப்படுகிறது. நமக்கும் சீனாவுக்கும் பல ஆண்டுகளாகப் பிரச்னை இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகள் இந்தப் பிரச்னை நடக்கும். 2024-ல் எப்படிப்பட்ட ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவெடுக்க வேண்டும். ராமாயணம் பற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேசுகிறார்கள். 2021 தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வின் முருகன் வேல் எடுத்த சமயத்தில் நாங்களும் இந்துக்களுக்காக இருக்கிறோம் என யாரெல்லாம் வேலை எடுத்தார்களோ, அவர்களெல்லாம் ராமன் கற்பனை எனப் பேசுகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாட்டைத் தாண்டியும் நாம் யோசிக்க வேண்டும். உ.பி இழந்ததை மீட்டெடுக்கத் தொடங்கிவிட்டது. மோடி இந்தியாவில் ஒவ்வொன்றையும் மீட்டெடுக்கிறார்.

பிரிட்டிஷ் அரசில்கூட சாதி இந்த அளவுக்கு இல்லை. திராவிட இயக்கம் வந்த பிறகுதான் சாதி வந்தது. புதுக்கோட்டையில் மனிதர் குடிக்கும் தண்ணீரில் மனிதக் கழிவைக் கலக்கிறார்கள். இவர்கள்தான் 70 ஆண்டுகளாக சமூகநீதி பற்றிப் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 1925-ல் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கிறது. உலகில் எந்த இயக்கமும் 100 ஆண்டுகளைத் தொட்டதாக சரித்திரம் இல்லை. 98 ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக இந்தியாவில் இருக்கும் ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் மட்டும்தான். இந்த இயக்கம் இல்லை என்றால், வடகிழக்கு மாகாணம் இந்தியாவில் இல்லை. ஆயிரக்கணக்கான பிரசாரகர்கள் துணிந்து சென்று குடும்பத்தைவிட்டுச் சென்றதால் வடகிழக்கு மாகாணம் நம்முடன் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் இல்லையென்றால் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் இந்தியாவில் இணைந்திருக்கும் வாய்ப்பு குறைவு. மத்திய இந்தியாவை நக்‌சல்கள் பிடியிலிருந்து மீட்டது ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தில் அணிவகுப்பைத் தடைசெய்தால் இந்த இயக்கம் வளராது என நினைக்கிறார்கள். திருமணத்தை நிறுத்த வேண்டுமானால் சீப்பை மறைத்துவைக்கும் செயல் இது. அணிவகுப்பைத் தடைசெய்த பிறகுதான் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. 2025-ல் மிகப்பெரிய எழுச்சி தமிழகத்தில் நடக்கும்.

அருமனை பொங்கல் விழாவில் பேசும் அண்ணாமலை
அருமனை பொங்கல் விழாவில் பேசும் அண்ணாமலை

இந்த நாட்டின் சரித்திரத்தில் திராவிடம் சின்னப் புள்ளி. ஒட்டகத்தின் முதுகில் சுமை ஏற்றிவிட்டு கடைசியாக ஒரு புல்லை வைத்தால் அதன் முதுகெலும்பு ஒடிந்து விழும். தமிழகத்தின் கடைசி புல் உதயநிதி. இயற்கையைப் பொறுத்தவரை எதுவும் மூன்று தலைமுறைகளுக்கு மேல் இருக்காது. கம்பெனியும் அப்படித்தான். தி.மு.க மூன்று தலைமுறைகள் தாண்டி நான்காவது தலைமுறைக்குப் போகிறது. உதயநிதியை அமைச்சர் ஆக்கியதால் ஒட்டகத்தின் முதுகெலும்பு உடையப்போகிறது. சிறந்த ஐ.ஏஸ்.எஸ்-கள், 6 மணிக்கு எழுப்பி ஐடியா கொடுக்க ஆட்கள், சுற்றி 20 அமைச்சர்கள், சின்னவர் என கோஷம்போட ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள் உதயநிதிக்கு. மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இரண்டரை மணி நேரம் லேட்டாக வருகிறார். தெருவில் இருக்கும் நாய்க்கு புலிவேஷம் போட்டதுபோல ஆகிவிட்டது.

தமிழகத்தில் பெண்கள்மீது கைவைப்பவர்களுக்கு என்ன தண்டனை... காவல்துறை பெண் மீது கைவைக்கிறார்கள். இதுவே உ.பி-யில் நடந்திருந்தால் ஒரு கை இல்லை, இரண்டு கைகளும், கால்களும் இருந்திருக்காது. தமிழகம் விபரீதப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்தில் புதிதாக தொழிற்சாலைகள் வருவதில்லை. 20 சதவிகிதம் கமிஷன் கொடுத்தால்தான் தொழிற்சாலைகள் இங்கு வர முடியும். கடந்த பத்து ஆண்டுகளாக கம்பெனிகள் வருவதில்லை. தமிழக இளைஞர்கள் இன்னும் ஒரு வருடத்தில் கொந்தளிக்கப் போகிறார்கள்" என்றார்.